For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எங்களை உதாசீனப்படுத்தியது-ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காமல் பாமகவை திமுக உதாசீனப்படுத்தியதாகவும் அதனாலேயே அதிமுவுடன் சேரவேண்டும் என்று தொண்டர்கள் முடிவெடுத்ததாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

பாமக எந்த அணியில் இடம்பெறும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பொதுக்குழுவில் முடிவெடுப்போம் என்று சொன்னேன். அதன்படி பொதுக்குழுவும் வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்று சொன்னோம். சொன்னபடி செய்திருக்கிறோம்.

இங்கு வந்துள்ள 2,581 பொதுக்குழு உறுப்பினர்களிடமும் கருத்து கேட்பதென்றால் அதற்கு இரண்டு, மூன்று நாளாகும்.அதனால்தான் ஒரு வித்தியாசமான முறையில் நாங்கள் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறோம். இதை ஒரு பெருமைக்காக நடத்தவில்லை.

ஒவ்வொருவர் மனதிலும் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 2,453 பேர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி என்று 117 பேர் வாக்களித்துள்ளனர்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறுவார்கள். பாமகவை பொறுத்தவரை தொண்டர்கள் தீர்ப்புதான் தலைமையின்தீர்ப்பாகும். இந்த கட்சியில் தொண்டர்கள் எல்லோரும் தலைவர்கள்; தலைவர்கள் எல்லோரும் தொண்டர்கள். ஜனநாயக முறைப்படி நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

இந்த முடிவை எடுக்க காரணம் ஆளும் கட்சியான திமுகதான். ஒவ்வொரு பாமக தொண்டனும் மனதளவில் திமுகவால் பெருமளவுக்கு காயப்படுத்தப்பட்டிருக்கிறான். அதன் வெளிப்பாடுதான் இது.

2004ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். 40 தொகுதிகளில் 39ல் நான் பிரச்சாரம் செய்தேன். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால் திமுக தலைவரோ 34 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

அப்படியென்றால் பாமக போட்டியிடும் 6 தொகுதி பற்றி சொல்ல முடியாது என்றுதானே அர்த்தம். அதையும் மீறி நாங்கள் வெற்றி பெற்றோம். மிகப் பெரிய சாதனையை எங்களது இரண்டு மத்திய அமைச்சர்களும் செய்துள்ளனர்.

2006 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 31 இடங்களில் போட்டியிட்டோம். ஆனால் 18 இடங்களில்தான் வெற்றி பெற்றோம். 13 இடங்களில் நாங்கள் திட்டமிட்டு (திமுகவினரால்) தோற்கடிக்கப்பட்டோம். உள்ளாட்சி தேர்தலை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. கூட்டணி தர்மத்தை எந்த நிலையிலும் கடைப்பிடிக்காமல் திமுக நடந்துகொண்டது.

ஆட்சியில் பங்கு கேட்காமல் நிபந்தனையற்ற முறையில் திமுகவுக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால் எங்களை திமுக தொடர்ந்து உதாசீனப்படுத்தி எங்களை கூட்டணியிலிருந்தும் வெளியேற்றியது.

கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஒரு மாத காலமாக திமுகவிலிருந்து ஒருவர் கூட எங்களுடன் வந்து பேசவில்லை. ஒரே ஒருமுறை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தான் என்னை வந்து சந்தித்தார். 20 நாட்கள் சென்னையில் தங்கியிருந்தபோது கூட திமுகவிலிருந்து ஒரு சாதாரண மாவட்ட செயலாளரோ ஒரு சிறிய அமைச்சரோ, ஒரு பெரிய அமைச்சரோ யாரும் என்னை வந்த சந்திக்கவில்லை.

அவ்வாறு சந்திக்காதது மட்டுமன்றி பத்திரிகைகளில் கூட திமுக கூட்டணியில் பாமக வரலாம்; இந்த கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என நம்புகிறேன் என்று ஒரு வார்த்தை கூட (முதல்வர் கருணாநிதி) சொல்லவில்லை.

இந்த நிலையில் தான் நாங்கள் என்ன முடிவு எடுப்பது என்பதற்காக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

பாமக ஒவ்வொரு முறையும் திமுக கூட்டணியில் இடம் பெறுவதையே விரும்பி வந்திருக்கிறது. 1996ம் ஆண்டு திமுக கூட்டணியில் விரும்பி இடம் பெற்றோம். ஆனால் எங்களுக்கு குறைவான சீட்டுகளை கொடுத்து இருந்தால் இருங்கள், போனால் போங்கள் என்று கூறி திமுக எங்களை புறக்கணித்தது. எனவே சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.

இப்போதும் உதாசீனப்படுத்தியதால் தான் இந்த முடிவுக்கு வந்தோம் என்றார் ராமதாஸ்.

'கைவிட்டது உண்மை, உண்மை':

முன்னதாக இலங்கை விவகாரத்தில் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டால், ஒருவர் எப்படியெல்லாம் பேசுவார், எழுதுவார் என்பதற்கு முதல்வர் கருணாநிதியின் கள்ளத் தோணி கருத்து சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நாளைக்கே தோணிகளைத் தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை; அவற்றில் படைகளை ஏற்றிச்செல்லட்டும், ராணுவ அணிவகுப்பு நடத்தட்டும்; யார் குறுக்கே நிற்கிறார்கள்; நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம், கைதட்டி ஜெயகோஷம் போடுகிறோம் என்றெல்லாம் முதல்வர் கோபம் கொப்பளிக்க கூறியிருக்கிறார்.

முதல்வர் போன்ற பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர், கள்ளத் தோணியில் படையெடுத்துப் போங்கள், குறுக்கே நிற்கமாட்டோம் என்று சொல்லியிருப்பது எந்த அளவிற்கு அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை சட்ட வல்லுநர்கள்தான் விளக்க வேண்டும்.

முதல்வரின் இத்தகைய தூண்டுதலை, யாரேனும் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால், அப்போது முதல்வர் என்ன பதிலளிப்பார். முன்பு ஒரு முறை சொன்னதைப் போல, வெறும் நகைச்சுவைக்காகச் சொன்னது என்றும், வழக்கமாக என் எழுத்துகளைப் படிப்பவர்களுக்கு இப்படிச் சொல்லியிருப்பது புரியும் என்றும் சொல்லித் தப்பிவிட முடியாது.

இந்தியாவைப் போன்று இலங்கையும் ஓர் இறையாண்மை மிக்க நாடு. எனவே, ஓரளவுக்குத் தான் நாம் தலையிட முடியும், ஓரளவுக்குத்தான் அழுத்தம் கொடுக்க முடியும் என்று இதுவரையில் சொல்லாத ஒரு கருத்தை இப்போது திடீரென்று முதல்வர் சொல்கிறார்.

முதல்வரின் இந்தப் புதிய நிலைப்பாடு, இனப் படுகொலையிலிருந்து ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிலிருந்து நழுவிச் சென்றுவிட்டதற்கு ஒப்பானது என்று அடையாளம் காட்டியதுதான் முதல்வரின் ஆத்திரத்திற்கெல்லாம் காரணம்.

எஞ்சியிருக்கும் காங்கிரசும், கையைவிட்டுப் போய்விடக் கூடாது. அப்படிப் போவதால் அரசுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சமரசமான நிலையை மேற்கொண்டு இலங்கைத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் அவர்களோடு சேர்ந்து நாங்களும் செத்து மடிவோம் என்ற உறுதிமிக்க நிலைப்பாட்டை கைவிட்டதும், அதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் நலனை கைகழுவிவிட்டதும் உண்மை, உண்மை, உண்மை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X