For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படிப்படியாக விலகும் கூட்டணி கட்சிகள்-பீதியில் காங்.

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாக விலகிச் செல்வதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளது. ஆனால் விலகிச் செல்லும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் நம்மிடமே வரும் என்ற ஒரே ஆறுதலுடன் காங்கிரஸ் உள்ளது.

காதல் படத்தில் இயக்குநர் கேரக்டரில் வரும் ஒருவர், நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபரிடம், நானே பயந்து போகும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பார். அதே கதையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருந்தது. பாஜகவே பார்த்துப் பயந்து போகும் அளவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வலுவாக இருந்தது.

ஆனால் இந்த வலு எல்லாம், இடதுசாரிகள் முதன் முதலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனான உறவை பிரித்துக் கொண்டது முதல் தளரத் தொடங்கியது.

இது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் படு வேகமாக இளகி, நெகிழ ஆரம்பித்து விட்டது.

முதலில் சமாஜ்வாடி ..

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வேகமாக வந்து கை கொடுத்தது சமாஜ்வாடி கட்சி. இதனால் உற்சாகமடைந்த காங்கிரஸ், உ.பி. லோக்சபா தேர்தலை இருவரும் இணைந்து சந்திக்க முடிவு செய்தது.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது - தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வரும் வரை. காங்கிரஸ் கட்சிக்கு மிக மிக குறைவான தொகுதிகளையே தர சமாஜ்வாடி முன்வந்தது.

அதற்கு காங்கிரஸின் பதில் என்ன என்று கூட தெரியாத நிலையில், வேகம் வேகமாக பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது.

இரு தரப்பிலும் கருத்து வேறுபாடுகள் முற்றி கடைசியில் கூட்டணி இல்லாமல் போய் விட்டது.

லாலு கொடுத்த அல்வா...

சமாஜ்வாடி கட்சி உ.பியில் கதவை சாத்தி விட்ட நிலையில், பீகார் பக்கம் திரும்பினால் லாலு பிரசாத் யாதவும், பாஸ்வானும் சேர்ந்து பெரிய அல்வா பொட்டலத்தை காங்கிரஸ் கையில் கொடுத்து ஊட்டியும் விட்டனர்.

வெறும் 3 சீட்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கினார் லாலு. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், நம்பிக்கை துரோகி லாலு என்று கூறும் அளவுக்கு கடுப்பானது.

இதனால் வெகுண்ட லாலு, கொடுத்த 3 தொகுதிகளும் கூட காங்கிரஸுக்குக் கிடையாது. நாங்களே அங்கு போட்டியிடுவோம் என்று கூறி விட்டார். இப்போது பீகாரில் லாலு, பாஸ்வான் கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

இந்தியாவின் இரு பெரும் முக்கிய மாநிலங்களான உ.பி., பீகாரில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டிருக்கிறது. இந்த இரு மாநிலங்களில் மட்டும் 120 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் மனச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

லாலு-முலாயம்-பாஸ்வானின் புதுக்கூட்டணி..

அடி மேல் அடியாக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், பாஸ்வான் ஆகியோர் திடீரென கை கோர்த்துள்ளதும் காங்கிரஸை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இவர்களின் கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு உ.பி., பீகாரில், மொத்தமாக 10 சீட் கிடைத்தாலே பெரிது என்ற நிலை உருவாகியுள்ளது.

இப்போது பாமக ...

இந்த வரிசையில் காங்கிரஸைக் கைவிட்ட கட்சிகள் வரிசையில் லேட்டஸ்டாக பாமக இணைந்துள்ளது. பாமக போகாது, திமுகவுடன் இல்லாவிட்டாலும் கூட நம்முடனாவது உடன்பாடு வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் மேலிடம் இருந்து விட்டது.

இதனால்தான் ஆரம்பத்தில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பெரிய அளவில் பாமகவை இம்ப்ரஸ் செய்யவோ, பேசவோ முன்வரவில்லை. தங்கபாலுவே பார்த்துக் கொள்வார் என்று நம்பி இருந்து விட்டனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் பாமக, அதிமுகவுக்குப் போவது உறுதி என்று தெரிந்தவுடன்தான் காங்கிரஸ் கட்சி சுதாரித்தது. அகமது படேலை விட்டு அன்புமணியுடன் பேசச் செய்தது. ஆனால் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. அது ஒரு சம்பிரதாயப் பேச்சாகவே அமைந்து போனது.

ஏன் இந்த நிலைமை ..?

காங்கிரஸ் கட்சியின் கண்களுக்கு இப்போது இரண்டே இரண்டு உருவங்கள்தான் பிரதானமாக தெரிகின்றன. ஒன்று பிரதமர் மன்மோகன் சிங். இன்னொன்று சோனியா காந்தி.

இவர்கள் இருவருக்கும் இருக்கும் நற்பெயர்களையும், அரசின் சாதனைகளையும் மட்டும் விளக்கிச் சொன்னாலே போதும் மக்கள் நமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது.

ஆனால் இந்திய அரசியலில் வெறும் சாதனைகளை மட்டும் சொன்னால் ஓட்டு விழாது, வலுவான கூட்டணியும் அவசியம் என்பதை காங்கிரஸ் மறந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியை வலுப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டாதது போலவும் தோன்றுகிறது.

காங்கிரஸ் நினைத்திருந்தால், கருணாநிதி, ராமதாஸுக்கு இடையே இருந்த பிரச்சினைகளை பேசித் தீர்த்து வைத்து, கூட்டணியிலிருந்து பாமக விலகாமல் தடுத்திருக்கலாம். சோனியா காந்தியே தலையிட்டிருந்தால் பாமக, இந்த விலகிப் போயிருக்கும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் போனால் போகட்டும் என்ற ரீதியில் காங்கிரஸ் இருந்ததால்தான் வரிசையாக ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றனர்.

இப்படி கட்சிகள் விலகி வருவதால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. கட்சி நிர்வாகிகளை கூட்டி சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இருப்பினும் இப்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ள ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், விலகிப் போகும் கட்சிகள் எல்லாம் தேர்தல் முடிந்த பின்னர் கண்டிப்பாக திரும்பி வரும் என்பதுதான்.

மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும், நம்மிடம் மீண்டும் வருவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளது காங்கிரஸ். இந்த நம்பிக்கைப் பட்டியலி்ல் இடதுசாரிகளையும் கூட அவர்கள் வைத்துள்ளனர் என்பதுதான் முக்கியமானது.

அரசியலாச்சே, எது வேண்டுமானாலும் நடக்கலாம்..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X