For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கே-ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramadorai
சென்னை: இந்தத் தேர்தலில் மத்தியில் எந்தக் கூட்டணி வெல்லும் என்பதை கணிக்க முடியாது. ஆனால், தமிழகத்தி்ல் 40க்கு 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெல்லும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இன்று பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை விஷயத்தில் பிரதமரின் அணுகுமுறை உங்களுக்கு திருப்தி அளி்தததா?

நிச்சயமாக இல்லை. இது குறித்து சோனியாவிடமும் பிரணாப் முகர்ஜியிடமும் பலமுறை பேசினோம். நாடாளுமன்றத்தையே எங்கள் எம்பிக்கள் இரு நாட்கள் ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

கேள்வி: இந்த விஷயத்தில் பாமகவை மத்திய அரசு உதாசீனப்படுத்தியதா?

ராமதாஸ்: நாங்கள் சிறிய கட்சி தான். எங்களை உதாசீனப்படுத்தியது என்பதை விட தமிழகத்தை ஆளும் பெரிய கட்சியான திமுகவை உதாசீனப்படுத்திவிட்டது என்பது தான் உண்மை. அவர்கள் பல தீர்மானங்களை வசன நடையில் எழுதி அனுப்பினார்கள். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது.

கேள்வி: அதிமுக கூட்டணிக்குப் போவதால் இலங்கை பிரச்சனையில் போராட்டங்கள் நடத்துவீ்ர்களா?

ராமதாஸ்: இந்தப் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். இதில் அவரும் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே இந்தப் பிரச்சனைக்காக போராடி வரும் வைகோவும் இடதுசாரிகளும் இந்தக் கூட்டணியில் இருப்பதால் அது ஒரு பிரச்சனையாக இருக்காது.

இந்தத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனையும் முக்கிய பிரச்சனையாக இடம் பெறும். தமிழக அரசு செய்யத் தவறிய, செய்யக் கூடாததை செய்த பிரச்சனைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்வோம்.

குறிபிபாக மின்சார தட்டுப்பாடு, அரசி கடத்தல், தமிழ்நாட்டையே குடிகார நாடாக மாற்றியது, திமுகவினர் துணையோடு நடக்கும் கள்ள லாட்டரி பிரச்சனை, மணல் கொள்ளை ஆகிய பிரச்சனைகளை மக்கள் முன் வைப்போம்.

கேள்வி: ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி தமிழர்களுக்கு விரோதமான கூட்டணி என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?

ராமதாஸ்: அதைப் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. அவரும் நாங்களும் ஒரே அணியில் இருக்க முயற்சித்தோம். 2006ம் ஆண்டு முதலே அந்த முயற்சி வேண்டாம் என தடுத்தது திமுக தான். இப்போதும் ஒரே அணியில் இருக்க முயன்றோம். அதைத் தடுத்ததும் திமுக தான். இணைந்த கைகளாக இருந்த எங்களை அரசியல் சூழ்ச்சியால், சதியால் பிரித்துவிட்டார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் நாங்கள் மீ்ண்டும் இலங்கை பிரச்சனை, புதுப் பிரச்சனைகளில் இணைந்து போராடுவோம்.

கேள்வி: நீங்கள் விடுதலைச் சிறுத்தைகளை எதிராக பிரச்சாரம் செய்ய மாட்டீர்கள் என்கிறார்களே?

அது தவறு. கூட்டணி தர்மத்தை முழுமையாய் கடைபிடிக்கும் கட்சி பாமக. அரசியல் வேறு, நட்பு வேறு. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக 3 மடங்கு அதிகம் பாடுபட வேண்டும் என தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

கேள்வி: மூன்றாவது அணி வெற்றி பெற்றால் யார் பிரதமர்?

ராமதாஸ்: தேர்தல் முடிந்த பிறகு அது முடிவு செய்யப்படும்.

கேள்வி: தேர்தலுக்குப் பின் மீண்டும் காங்கிரஸ் பக்கம் வந்துவிடுவீர்கள் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறியுள்ளார்களே?

ராமதாஸ்: அப்படி யாருக்கும் எந்த உறுதிமொழியும் நாங்கள் தரவில்லை. இப்போது அதிமுக அணியில் இருக்கிறோம். அதிமுக அணியின் தலைவர்கள் கூடி உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

கேள்வி: தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வர வலியுறுத்துவீர்களா?

ராமதாஸ்: ஏற்கனவே அப்படி ஒரு வாய்ப்பு வந்து நழுவிப் போய்விட்டது யாரால் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

கேள்வி: திடீர் அணி மாற்றம் ஏன்?

ராமதாஸ்: 96ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அணியில் இருக்கவே விரும்பினோம். ஆனால், அவர்கள் தான் எங்களை போயஸ் தோட்டம் பக்கம் தள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு, திடீர் முடிவல்ல.

கேள்வி: நீங்கள் அதிமுக கூட்டணிக்குப் போனதன் பின்னணியில் பணம் தான் காரணமாக இருப்பதாக விஜய்காந்த் கூறியுள்ளாரே?

ராமதாஸ்: சிலரைப் பற்றி, சிலரது கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

கேள்வி: மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் அதி்ல் அதிமுக பங்கேற்கும் என்கிறார்களே?

ராமதாஸ்: யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: பாமக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?

ராமதாஸ்: நாளை காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்திக்கிறேன். அப்போது பாமக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் எங்கெங்கு போட்டியிடும் என்பது முடிவாகும்.

கேள்வி: பாமகவை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கச் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முயன்றார்களே..?

ராமதாஸ்: இதற்காக அகமத் படேல், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், தங்கபாலு, சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் என்னிடமும் அன்புமணியிடமும் பேசினார்கள். ஆனால், தமிழகத்தில் இந்தக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் தான் நாங்கள் அணி மாறினோம்.

கேள்வி: இந்தத் தேர்தலில் மத்தியில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்?

ராமதாஸ்: இந்தத் தேர்தலை பொறுத்தவரை எந்த அணி வெல்லும் என்பதை கணிக்க முடியாது.

கேள்வி: தமிழகத்தி்ல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

ராமதாஸ்: குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 40க்கு 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X