For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வரப் போவது பலவீனமான கூட்டணி ஆட்சி தான்'

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகள் அனைத்துமே, தங்களது பிராந்திய கூட்டாளிகளை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பதால் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பலவீனமான கூட்டணி ஆட்சியே அமையும். அதுவும் குறுகிய காலத்திற்கே ஆட்சியில் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக பல்வேறு கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் வெற்றிகரமாக கூட்டணி ஆட்சியை முடித்துள்ளது. ஆனால் தற்போது அக்கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விலகி விட்டன. சில கட்சிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

இதே நிலைதான் பாஜகவுக்கும். தமிழகம், கேரளா, ஆந்திராவில் அக்கட்சிக்கு பலமே கிடையாது. கர்நாடகத்தில் மட்டும்தான் ஆதரவு தொக்கி நிற்கிறது.

இந்த ஆண்டு தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 3வது அணியின் தாக்கம் பலமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. இடதுசாரிகள் தலைமையில் இந்த அணியில் பல கட்சிகள் குவிந்துள்ளன. இவை கண்டிப்பாக பாஜக, காங்கிரஸ் வாக்கு வங்கியை சற்றே குழப்பும் என கருதப்படுகிறது.

இப்படி குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் நடக்கப் போகும் லோக்சபா தேர்தல், நிச்சயம் மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சியையே தரும். அதுவும் பலவீனமான ஆட்சியாகவே இருக்கும், குறுகிய காலமே அது நீடிக்கும் என தொழில்துறையினரும், முதலீட்டாளர்களும் கவலையுடன் கூறுகின்றனர்.

பொருளாதார சீர்குலைவு உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் நிலையற்ற ஒரு ஆட்சி அமைவது நிச்சயம் நமது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்பது அவர்களது கருத்து.

விகாஸ் கெமானி என்ற தொழில்துறை வல்லுநர் ஒருவர் கூறுகையில், தற்போது பல்வேறு பிரிவுகளாகப் போட்டியிடும் பல்வேறு கட்சிகள், தேர்தலுக்குப் பின்னர் புதிய கூட்டணிக்குத் தாவும். அப்படிப் போகும் போது பல்வேறு சலுகைகளை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். பதவிகளை எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக அமைச்சர் பதவிகளுக்கு கண்டிப்பாக அடிதடி நடக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்சியில் அமரும் கட்சி, அவர்களை தாஜா செய்துதான் ஆட்சியை நடத்த முடியும். இது நிச்சயம் நிலையற்ற அரசுக்கே வழி வகுக்கும். இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது. இனியும் அதுவே தொடரும்.

இப்படி நிலையற்ற கூட்டணி ஆட்சிகளால் தொழில்துறையும், வர்த்தகமும், பொருளாதாரமும் கடும் பாதிப்பையே சந்திக்கின்றன.

இதை விட முக்கியமாக, தாங்கள் ஓட்டுப் போடாத கூட்டணியுடன் போய் தாங்கள் வாக்களித்த எம்.பிக்கள் கூட்டணி சேரும்போது மக்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை எந்தக் கட்சியும் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை என்றார்.

இந்தியாவில் இதுவரை தேசிய கட்சிகள் செலுத்தி வந்த ஆதிக்கம் இந்தத் தேர்தலோடு மிகவும் மோசமாக குறைந்து போய் விடும் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கமே மிகவும் மேலோங்கி நிற்கும் என்பது அரசியல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு லோக்சபாதேர்தலில் காங்கிரஸும், பாஜகவும் சேர்ந்து 50 சதவீதத்திற்கும் சற்றே அதிகமான வாக்குகளைப் பிரித்துக் கொண்டன. மற்றவைதான் பிராந்திய கட்சிகளுக்குக் கிடைத்தது. ஆனால் தற்போது இது தலைகீழாக மாறும் வாய்ப்பு உள்ளது.

ஒரு வேளை வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸும், பாஜகவும் மிக மோசமான முறையில் சீட்களைப் பெற்றால், பிரதமர் பதவிக்கு மிகப் பெரிய குதிரை பேரம் நடக்கும். பல நூறு கோடி பணம் அங்குமிங்குமாகப் பாயும் என்று கருதப்படுகிறது.

பிரபல சமூகவியல் நிபுணரும், கருத்துக் கணிப்புகளை நடத்துவதில் பிரபலவருமான யோகேந்திர யாதவ் இதுகுறித்துக் கூறுகையில், தேர்தலுக்குப் பின்னர் அரசியல் இடைத் தரகர்களின் கையில்தான் பிரதமரும், கூட்டணி ஆட்சியும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகும் என்கிறார்.

கடந்த 1996ம் ஆண்டு நடந்த கூத்தை நாடே அறியும். அப்போது 13 கட்சிகள் சேர்ந்து ஆட்சியை அமைத்தன. அந்த கூட்டணி ஆட்சி 2 பிரதமர்களைக் கண்டது. இரண்டே ஆண்டுகளில் வீழ்ந்தது.

அந்த நிலை மீண்டும் வரக் கூடும் என்பது பல்வேறு துறை வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. காரணம், காங்கிரஸ், பாஜகவின் நிலை மோசமாக இருப்பதாலும், பிராந்தியக் கட்சிகள் முன்பை விட பலம் வாய்ந்ததாக இருப்பதாலும்.

பிராந்திய கட்சிகளுக்கு தற்போது நேரம் அருமையாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்களைப் பெறும் சூழ்நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே பிரதமர் பதவிக் கனவுடன் உள்ள பல பிராந்தியக் கடசிகளுக்கு இதுதான் சரியான நேரம். அதை பயன்படுத்திக் கொள்ள அத்தனைக் கட்சிகளும் முயலும் என்கிறார் இன்னொரு கருத்துக் கணிப்பு நிபுணர் மகேஷ் ரங்கராஜன்.

மொத்தத்தில் இந்த தேர்தலுக்குப் பின்னர் மக்கள் காணப்போகும் அரசியல் நாடகங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மகிழ்ச்சி தராது, மாறாக மன வருத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் இந்த நிபுணர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X