For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்னால் கதை வசனமும், கடிதமும் மட்டும்தான் எழுத முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது, நான் ஒரு கையாலாகாதவன் என்று ஒப்புக் கொண்டு உலகத் தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,

விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் வாழும் பகுதியைச் சுற்றி வளைத்திருக்கிறோம். இன்னும் இரண்டு, மூன்று நாளில் அனைவரையும் அழித்துவிடுவோம் என்று இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு தமிழர்கள் அழிக்கப்படுவதை இந்திய அரசும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்வது அம்பலமாகி விட்டது.

இலங்கை அரசின் இனப் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை அமைப்பும், உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன. ஆனால் இந்தியா மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

புதுக்குடியிருப்புப் போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படத்தை இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களைப் பார்த்தாலே அதில் உயிரிழந்த எவரும் குண்டுவீச்சில் இறக்கவில்லை, வேதி குண்டுகள் வீசப்பட்டதால் உடல் எரிந்து உயிரிழந்திருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1949ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி போரில் வேதி குண்டுகளை பயன்படுத்துவது குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் சிறிலங்கா அரசை மற்ற நாடுகள் கண்டிக்கின்றன.

ஆனால், இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து போருக்கு மத்திய அரசு தான் 100 சதவீதம் காரணமாக இருக்கிறது. போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது என முதல்வர் நம் காதில் பூ சுற்றுகிறார்.

இலங்கை இனப் படுகொலையைத் தடுக்க பலரும் போராடி வரும் நிலையில், தமிழக முதல்வர் கலைஞர் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வருன்கிறார்.

நாங்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை துவக்கியதும், அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவைப் பார்த்த கருணாநிதி, ஏட்டிக்குப் போட்டியாக ஈழத் தமிழர் நல உரிமைப் பேரவையைத் துவக்கினார். இலங்கைப் பிரச்னை குறித்து நான் அறிக்கை விட்ட இரண்டு மணி நேரத்தில் மத்திய அரசுக்கு தந்தி அனுப்புகிறார்.

இது தபால், தந்தியில் சாதிக்கக் கூடிய விஷயமா?. ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் நான் தான் தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருகிறீர்களே, உங்களால் என்ன முடிந்தது?.

இலங்கையில் இனப் படுகொலையைத் தடுக்க நீங்களாக எதுவும் செய்யவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக மட்டுமே செயல்பட்டிருக்கிறீர்கள். நாங்கள் இன்று போராட்டம்
நடத்துவதால் நீங்கள் நாளை பேரணி அறிவித்திருக்கின்றீர்கள்.

உங்களுக்கு எல்லாமே நடிப்பு, வசனம் தான். நீங்கள் நினைத்திருந்தால் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், நீங்கள் அதை செய்யவில்லை.

என்னால் கதை வசனமும், கடிதமும் மட்டும்தான் எழுத முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது, நான் ஒரு கையாலாகாதவன் என்று நீங்கள் கூறியிருக்கலாம். உங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் அல்லது உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார் ராமதாஸ்.

திமுகவுக்கு ஓட்டு போட்டதால்...தா.பா:

இந்திய கம்யூனி்ஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், இலங்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர். போர் நடப்பதால் இலங்கை அரசுக்கு அமெரிக்கா, நார்வே போன்ற கடன் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டன.

ஆனால் வளர்ச்சிக்காக என்று சொல்லி இலங்கைக்கு கடன் வழங்கிய ஒரே நாடு இந்தியாதான். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்களாக நாங்கள் போராட்டம் நடத்த வந்தோமே தவிர வாக்கு கேட்பதற்காக அல்ல.

திமுகவுக்கு ஓட்டு போட்டதால் தமிழக மக்கள் மட்டுமல்ல, ஈழத் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பழ. நெடுமாறன்..

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், ஈழத் தமிழர்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றனர். அங்கு சிங்கள அரசு விஷ வாயு குண்டுகளையும், ரசாயன குண்டுகளையும் வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று வருகின்றது.

உலக நாடுகள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நாமும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகின்றோம். தமிழக மக்கள் நடுவில் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றார்.

பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் பேசுகையில், ராஜபக்ஷே அரசு, மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது. இலங்கை போரை நடத்தலாம்; இறுதிப் போரை நடத்த முடியாதுஎன்றார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமத், தமிழருவி மணியன், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன், எழுத்தாளர் தியாகு, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிலர் இலங்கை அரசின் கொடியை எரித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X