For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக-ராமநாதபுரத்தில் 'அறந்தாங்கி வீரர்' திருநாவுக்கரசு!

By Staff
Google Oneindia Tamil News

Thirunavukkarasar
ராமநாதபுரம்: எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான திருநாவுக்கரசர் முதல் முறையாக மாவட்டம் தாண்டி ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இளம் அமைச்சராக இடம் பெற்று எம்.ஜி. ஆரின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் திருநாவுக்கரசர். திறமையான அமைச்சராக அறியப்பட்ட திருநாவுக்கரசருக்குப் பலமுகங்கள்.

அரசியல்வாதியாக, திரைப்பட விநியோகஸ்தராக, நடிகராகவும் கூட அசத்தியவர் திருநாவுக்கரசர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஜெயலலிதா தலைமையில் தனி அணி உருவானபோது ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றவர் திருநாவுக்கரசர்.

ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை ஆம்னி பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக இவரும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் அழைத்துச் சென்றது வரலாறு.

ஜெயலலிதாவின் நட்பு வட்டாரத்தில் முக்கிய இடத்தில் இருந்த திருநாவுக்கரசர் பின்னர் படிப்படியாக அதிலிருந்து விலக்கப்பட்டார். ஒரு கட்டத்தி்ல் ஓரம் கட்டப்பட்டு கட்சியை விட்டும் நீக்கப்பட்டார்.

பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி நடத்தி வந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்- அதை யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் சேர்ந்த வேகத்தி்ல் மீண்டும் அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார்.

பிறகு அதையும் கலைத்து விட்டு 2002ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைவதற்கு முன்பு தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றிக் கொண்டார்.

பாஜகவில் இணைந்த அவர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக இடம் பெற்றார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி தான் திருநாவுக்கரசரின் ஆஸ்தான தொகுதியாக விளங்கியது. அத்தொகுதியில் தொடர்ந்து பலமுறை வென்று சாதனை படைத்தார். அங்கு அவர் அல்லது அவர் நிறுத்தும் ஆட்கள்தான் வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது புதுக்கோட்டை எம்.பி. தொகுதி கலைக்கப்பட்டு அதில் இருந்த அறந்தாங்கி, ராமநாதபுரத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.

இதை மனதில் கொண்டே தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் திருநாவுக்கரசர்.

அறந்தாங்கி மட்டுமல்லாமல், ராமநாதபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகளிலும் தான் சார்ந்த முக்குலத்தோர் வாக்குகள் தனக்கு ஆதரவாக விழும் என்ற நம்பிக்கையில் உள்ளார் திருநாவுக்கரசர்.

ஆனால் இங்கு மண்ணின் மைந்தர்களான சத்தியமூர்த்தி அதிமுக சார்பிலும், நடிகர் ரித்தீஷ் திமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர். இருவருமே முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

எனவே இங்கு கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் திருநாவுக்கரசர் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது.

அசிங்கம் பிடித்த அரசியல் பாணியைக் கையாளாத வெகு சில அரிய அரசியல்வாதிகளில் திருநாவுக்கரசரும் ஒருவர் என்பதால் ராமநாதபுரம் தொகுதியில் அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X