For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாஞ்சில் மீதான குண்டாஸ்-ரத்து செய்தது நீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே சம்பத்துக்காக வக்கீலாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடி அவரை விடுவித்துள்ளார்.

முன்னதாக நாஞ்சில் சம்பத் திருப்பூரில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இதை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முருகேசன், நீதிபதி கர்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

நாஞ்சில் சம்பத் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே நேரில் ஆஜராகி வாதாடினார். அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி வாதாடி வந்தனர்.

நேற்று இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வைகோ வாதாடுகையில், கடந்த மாதம் 14ம் தேதி நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுதலை செய்யும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார். மாலை 4.30 மணிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவரை கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

212 ஆவணங்களை சிறிது நேரத்தில் ஆராய்ந்து உடனடியாக உத்தரவை பிறப்பிக்க முடியாது. மனதை சரியாக செலுத்தி கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. மேலும், தேவையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சு எந்த எலக்ட்ரானிக் கருவி மூலமும் பதிவு செய்யப்படவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில் தான் கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 1ம் தேதி பேசிய பேச்சுக்கு 5 நாள் கழித்து புகார் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். பேசிய 14வது நாளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவரது பேச்சால் தேசிய ஒற்றுமைக்கோ, இறையாண்மைக்கோ, பொது அமைதிக்கோ எந்த குந்தகமும் ஏற்படவில்லை.

அப்பாவித் தமிழ் மக்கள் இலங்கையில் படும் அவதியை கண்டு உலகம் முழுவதும் திரண்டு எழுந்த கருத்துக்கள் அடிப்படையில்தான் அவர் பேசினார். தனி தமிழ் ஈழம் என்பதை தவறாக புரிந்துகொண்டு தனி தமிழ்நாடு என்று பேசியதாக கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

டெல்லியில் தமிழ்நாடு தூதரக அலுவலகம் அமையும் என்று அவர் பேசவில்லை. 350 பேர் கூடிய சிறிய கூட்டத்தில் உலகமெங்கும் உள்ள ஆதங்கத்தை வெளி்ப்படுத்தினார்.

அவர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார். சிறந்த பேச்சாளர். கட்சிக்கு தூண் போன்றவர். இப்படிப்பட்டவரை தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். எனவே இந்த உத்தரவை கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும்.

அரசு வக்கீல் ராமசாமி: பொது அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் பேசினால் கைது செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் சிறந்த பேச்சாளர், கட்சியின் தூண் போன்றவர் என்கிறார்கள். இப்படிப்பட்டவர் சிறிய கூட்டத்தில் பேசினாலும் அது கோடிக்கணக்கான மக்களிடம் போய்ச் சேரும். எனவேதான் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது ஒரு தடுப்பு நடவடிக்கையே தவிர தண்டனை அல்ல.

14ம் தேதி மாலை 4.30 மணிக்குப் பிறகு தான் ஆவணங்களைக் கொடுத்து அதைப் பார்த்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார் என்பதுபோல இங்கு கூறினார்கள். அது தவறு, 12ம் தேதியே எல்லா ஆவணங்களும் கொடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரை வழங்கியுள்ளார். இவருடைய பேச்சு தனி தமிழ்நாடு என்ற தோரணையில் அமைந்துள்ளது. டெல்லியில் தமிழக தூதரகம் அமையும் என்று பேசியுள்ளார். அதாவது மறைமுகமாக தனி தமிழ்நாடு என்ற கருத்தில் பேசியுள்ளார். இந்தப் பேச்சில் சட்ட மீறல் இருப்பதாக கலெக்டர் திருப்தி அடைந்த பிறகுதான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிபதி முருகேசன்: அவரது பேச்சு குறித்து வேறு ஆதாரங்களை சமர்ப்பித்தீர்களா?

அரசு வக்கீல் ராமசாமி: இல்லை.

நீதிபதி முருகேசன்: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பிறப்பித்த உத்தரவு நாஞ்சில் சம்பத்துக்கு எப்போது வழங்கப்பட்டது.

அரசு வக்கீல் ராமசாமி: 15ம் தேதி காலை 8.30 மணிக்கு.

நீதிபதி முருகேசன்: ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது போதிய அவகாசம் இல்லாமல்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கருதுகிறோம் என்று கூறிய நீதிபதி பின்னர் வழங்கிய தீர்ப்பில்,

மாவட்ட கலெக்டர் முழு அளவில் மனதை செலுத்தி இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று கருதுவதாலும், போதிய ஆதாரங்களை வைத்து திருப்தியான முறையில் உத்தரவை பிறப்பிக்கவில்லை என்பதாலும், கலெக்டர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து நாஞ்சில் சம்பத் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பழைய வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வரலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X