ஈழம்: திமுக உயர்நிலை கூட்டம் கூடும்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை பிரச்சனை தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க திமுகவி்ன் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பு மத்திய அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே தெரிகிறது.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கையில் கொந்தளிப்பு- நிலைமை மிக மிக மோசம்- கெடு முடிந்தது- தமிழர்கள் பலி- ராணுவத் தாக்குதல்- இறுதிகட்டம் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சிகளைக் காண முடியவில்லை. அங்கே நம் இனம் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியை படம் பிடித்துக் காட்டுகிறார்கள். தமிழினத்தின் நரம்புகள் அங்கே அறுபடுகின்றன. அவல ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. வருகின்ற செய்திகள், உடம்பில் தீயை அள்ளிக் கொட்டுகின்றன.

எனக்கு வழி தெரியவில்லை- பொறுப்பான இடத்தில் இருக்கிறோமே- கையறு நிலையில் நம் இனத்தைக் காப்பாற்ற இயலாத வகையில் இருக்கிறோமே- என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு- பிரதமருக்கு- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இரண்டு முறை தந்தி கொடுத்து விட்டேன்.

ஏசுகிறார்கள்:

அங்குள்ள தமிழர் படும் வேதனைச் செய்திகளை கேட்டு துடித்துக் கொண்டிருக்கும் நம் உள்ளத்தை மேலும் துளைத்திடும் வண்ணம் இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக- நம்மால் தமிழர்களை காப்பாற்றிட முடியும் என்றும், ஆனாலும் நான் எதுவும் செய்யாமல் இருப்பதைப் போலவும் ஏசுகிறார்கள், பேசுகிறார்கள்.

அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை விட அதைக் காரணமாகக் கொண்டு திமுகவை ஒழித்திட முடியுமா என்று தான் கனவு காண்கிறார்கள்!.

இந்தியாவை விட பெரிய நாடுகள் எல்லாம் இலங்கையிலே நடைபெறும் கொடுமைகளைக் கண்டிக்கின்றன, எச்சரிக்கை செய்கின்றன, வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால் சிங்கள அரசோ எதையும் காதில் போட்டுக் கொள்ளத் தயாராகாத நிலையில் உள்ளது.

அவர்கள் மீதும் பழி...:

இந்திய அரசினர் நம் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு பல வழிகளிலும் முயற்சி மேற்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீதும் பழி சொல்லப்படுகிறது.

நம் இல்லத்தில் குழந்தைகள் நோயினால் துன்பப்படுவதை காண சகிக்காமல் கடவுளை நினைத்து கண்ணில்லையா உனக்கு என்று தூற்றுவதில்லையா? அதைப் போலத்தான் மத்திய அரசு மீது சாற்றப்படும் பழிச் சொற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் மத்திய அரசு மீது வேண்டுமென்றே அரசியல் நோக்கத்தோடு பழி கூறுவதையும் நம்மால் காண முடிகிறது.

பதவி விலகுவதால் பயனில்லை..:

இலங்கையிலே பாதிக்கப்படும் தமிழர்களின் துன்பத்திற்கு முடிவு காண வேண்டும் என்பதில் நான் எவ்வளவு வேதனையோடு இருப்பேன், இருக்கிறேன் என்பதை என்னை அறிந்தவர்கள் நன்கறிவார்கள். ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்- காங்கிரஸ் கட்சியோடு உறவு கொள்ளக் கூடாது- பதவிகளை துறக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் மனதில் எதையோ எண்ணிக் கொண்டு சொல்கிறார்கள். இலவச ஆலோசனைகளை உள்நோக்கத்தோடு வெளியிடுகிறார்கள்.

ஆனால் நாம் பதவியில் இருந்து விலகி விடுவதாலோ- பதவிகளைத் துறந்து விடுவதாலோ இலங்கையிலே உள்ள பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் வந்து விடுமா?. அவர்களுக்கு சிறிய ஆதரவு கூட நாம் பதவி இழப்பதால் போய்விடும் என்று அவர்களை சார்ந்தவர்களே நம்மிடம் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுவதற்கு கூட அதிகார பொறுப்பிலே ஆள் இல்லாத நிலை தமிழகத்திலே ஏற்பட்டு விடும் என்கிறார்கள்.

புழுவாக மிதிக்கப்படுகிறார்கள்....:

இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக இடைவிடாது போர்க்கோலம் கொண்டிருக்கிற சிங்களவர்களின் இனவெறியை அகற்றுவதற்கு ஏற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் இதுவரையில் தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். மாடாக உழைத்து, இலங்கை தீவுக்கோர் மகிமையை ஏற்படுத்திய நம்மின மக்கள் இன்று மண்ணில் நெளியும் புழுவாக மிதிக்கப்படுகின்றார்கள்.

அங்கே தமிழ் மழலைகளை- அவர்களைப் பெற்றவர்களை- ஈழத்தின் வளத்திற்காக உழைத்தவர்களை- ஈரத்தை இதயத்தில் காய வைத்துக் கொண்டோர், வாட்டி வதைக்கின்ற கொடுமைகளை தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், செய்தியேடுகளிலும் கண்டும், கேட்டும் நம் கண்களுக்கு பார்வைத்திறன் பட்டுப் போய் இருக்க கூடாதா? காதுகள் செவிடாகியிருக்க கூடாதா என்று அலறிடத்தான் தோன்றுகிறது.

நாம் கை பிசைந்து நிற்கிறோம்...:

எத்தனை ஆண்டுகளாக இந்த கொடுமை? எத்தனை எத்தனை இன்னல்கள்? மத்திய அரசை பொறுத்தவரையில் இது இன்னொரு நாட்டு பிரச்சினை. மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் அணுகிட வேண்டிய பிரச்சினை. ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக இது மனிதாபிமான பிரச்சினை. ஆறுகோடி தமிழர்கள் இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில்! அந்த தமிழ் இனத்தின் ஒரு பகுதி- சில லட்சம் பேர்- இலங்கையிலே வேட்டையாடப்படுவதை எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த உண்மையை அறியாதவர்கள் அல்ல மத்தியிலே ஆட்சி புரிவோர்! நாம் கை பிசைந்து நிற்கிறோம்.

என்னால் முடிந்தது இவ்வளவே...:

தாய்க்குலம் சில நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் செய்தியும்- அவர்களில் ஒரு சிலரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட செய்தியும் ஏடுகளில் வெளிவந்ததை பார்த்து விட்டு- ஐயோ, அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதே என்று துடித்துப் போய் என்ன செய்வதென்று புரியாமல், என் மகள் கனிமொழியை தொலைபேசியிலே அழைத்து- அந்த தாய்மார்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடம் எது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீயே அங்கே சென்று அந்த பெண்களிடம் பேசம்மா, பெண்ணுக்கு பெண்தான் ஆறுதல் கூறி சமாதானம் செய்திட முடியும். தந்தை மூலமாக சோனியா காந்தியிடம் முயற்சி செய்ய சொல்கிறேன். உங்கள் உடல் நிலை முக்கியம், உண்ணாவிரதத்தை கை விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளத் தான் என்னால் முடிந்தது?

அதற்கு முன்பே அரசு தரப்பில் அவர்களை பேச்சுவார்த்தை நடத்த அழைத்த போது அவர்கள் வரவில்லை. ஆனாலும் இங்கேயுள்ள சில கட்சிகளின் தலைவர்கள், அந்த உண்ணாவிரதத்தை பற்றி அரசு இரக்கமின்றி இருப்பதாக- இரக்கமின்றி அறிக்கை விடுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் மூலமாகத் தான் நம்முடைய மனக்குறையை இலங்கை அரசுக்கு தெரிவித்திட முடியும். இலங்கை அரசோடு நேரடியாக சர்ச்சைக்கு போக வேண்டும் என்று சொல்கிற அளவிற்கு அரசியல் தெரியாதவர்கள் அல்ல நாம்.

மாமியாரின் வழியில்...

அதிலே ஒரு நாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சினை என்பதை விட- இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது- ஐயர்லாந்தில் ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் சிறைச்சாலையிலே தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அறுபது நாள், எழுபது நாள் உண்ணாநோன்பு மேற்கொண்டு துடிக்கத் துடிக்கச் செத்தார்கள். அப்போது இந்திராகாந்தி ஐயர்லாந்திற்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கவில்லை.

அதை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகத் தான் எடுத்துக்கொண்டு அப்போதிருந்த இங்கிலாந்து பிரதமர் தாட்சர் அவர்களுக்கு அந்த நிலைமையை கவனிக்க வேண்டும் என்று கண்டிப்பான வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த இந்திரா காந்தியின் மருமகளாம் சோனியாகாந்தி இலங்கை தமிழர் பிரச்சினையிலே செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மாமியாரின் வழியிலே குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் நம்முடைய எதிர்பார்ப்பு.

தமிழ் ஈழம் வேண்டும்-அது ஒன்று தான் வழி:

இதற்கொரு வழியாகத் தான் இந்திய அரசு, இலங்கையிலே உள்ள தூதுவரக தொடர்புகளை அறுத்துக்கொள்ள உடனடியாக முன்வர வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தி கொடுத்தேன். அந்த வேண்டுகோள் மீதான முடிவு உடனடியாக எடுக்கப்படாவிட்டால், மிச்சம் இருக்கின்ற தமிழர்களும் அங்கே கொல்லப்பட்டு விடுவார்களோ என்ற அளவிற்கு நிலைமை போய்க் கொண்டிருக்கின்றது.

"தமிழ் ஈழம் வேண்டும்'' - அது ஒன்று தான் வழி- ''விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்'' - அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதியா இல்லையா - இதுவெல்லாம் தற்போது எங்களுக்கு பிரச்சினை அல்ல. எங்களுக்கு இப்போது வேண்டியது எல்லாம் எங்கள் தமிழனின் உயிர். நாளும் நாளும் இத்தனை பேர் பலி என்று வந்து கொண்டிருக்கும் செய்தி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அதற்கு வழி நிரந்தரமான போர் நிறுத்தம்தான். உலகில் உள்ள மிகப்பெரிய நாடுகள் எல்லாம் சொல்லியும்- சிங்கள அரசு அந்த நிரந்தர போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க மறுக்கிறது. அதற்கு என்ன வழி? இதுதான் எங்களின் கோரிக்கை!

நானும் என் வாழ்நாளில் 1956ம் ஆண்டில் இருந்து இலங்கை தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்துவிட்டேன். அதற்காகவே சிறைச் சாலை சென்றிருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்திருக்கிறேன். ஏன் ஆட்சியையே எங்கள் கட்சி இழந்திருக்கிறது. என்றாலும் தமிழர்கள் அல்ல- தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரே இலங்கை தமிழர்களுக்காக நான் குரல் கொடுப்பதை நாடகம் என்றும், மோசடி என்றும் விமர்சனம் செய்யும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அழுது, புலம்புவதைத் தவிர!....

இதைவிட நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்கள். மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையா? கடிதம் எழுதவில்லையா? பிரதமரை சந்திக்க வில்லையா? சோனியாவை பார்க்கவில்லையா? பிரணாப் முகர்ஜியை சென்னைக்கே வரச் செய்து அவரிடம் பேசவில்லையா? ப.சிதம்பரத்திடம் விவாதிக்கவில்லையா? தந்திகள் கொடுக்கவில்லையா? அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லையா? மனித சங்கிலி நடத்தவில்லையா? நீதியரசர்களை கொண்ட குழுவினை டெல்லிக்கு அனுப்பி குடியரசு தலைவரிடமும், சோனியா காந்தியிடமும் பேசச் செய்யவில்லையா? என்ன செய்யவில்லை? இவ்வளவும் செய்த பிறகும் அரசியலுக்காக - நான் நாடகமாடுவதாக இவர்கள் கூறலாமா? கூறுபவர்கள் கூறட்டும்.

கூர்த்த மதி படைத்தோர்க்கு உண்மை புரியும்!. ஆனால் உலகத் தமிழர்களின் உள்ளம், சோக வெள்ளத்தில் மிதக்கிறதே; அந்த வேதனையைத் துடைத்திட வழி வகை; இந்தியப் பேரரசிடம் தானே இருக்கிறது; நாம் என்ன செய்வது? அழுது, புலம்புவதைத் தவிர!.

குறிப்பு: பொதுச் செயலாளர் அன்பழகன் சுற்றுப் பயணத்தில் வெளியூரில் இருக்கிறார். அவர் வந்தவுடன் கலந்துபேசி கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவினை கூட்டலாம் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+