For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா

By Staff
Google Oneindia Tamil News

Brigadier Udaya Nanayakkara
கொழும்பு: இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி, உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரா.

இரு நாடுகளும் தனித் தனியாக தங்களுக்கு பெரும் உதவிகளைச் செய்ததாகவும், நீடித்த, நிலையான உதவிகளாக அவை இருப்பதாகவும் கூறியுள்ளார் நாணயக்காரா.

இலங்கைக்கு இந்தியாதான் பெருமளவில் உதவிகள் செய்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதை இந்திய அரசு மறுத்து வந்தது. நேற்று கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியாக எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று ரொம்ப உறுதியாக கூறியிருந்தார்.

ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் தனித் தனியாக தங்களுக்கு பேருதவி புரிந்துள்ளதாகவும், இதனால்தான் போரில் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெளிவாக்கியுள்ளார்.

இதுகுறித்து நாணயக்காரா கூறுகையில், எங்களுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் நிறையப் பயிற்சிகளை அளித்தன. இரு நாடுகளும் பெருமளவில் எங்களுக்கு உதவி புரிந்தன. நான் கூட இரு நாடுகளிலும் பயிற்சி பெற்றேன்.

எங்களது அதிகாரிகளை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் அனுப்பி வைத்து பயிற்சிகளைப் பெற வைத்தோம். அதி நவீனப் பயிற்சிகளை இரு நாடுகளும் எங்களுக்கு அளித்தன.

நான் இந்தியாவில் நான்கு பயிற்சி வகுப்புகளிலும், பாகிஸ்தானில் 3 பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டேன்.

கடைசியாக நான் ஆந்திர மாநிலம் செகந்தராபாத்தில் பயிற்சி பெற்றேன்.

இரு நாடுகளின் நவீன ராணுவ தொழில்நுட்பங்களை எங்களது அதிகாரிகள் கற்றுக் கொண்டனர், பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களுக்கு அளித்த அதி நவீனப் பயிற்சிகள், வழங்கிய ஆயுதங்கள்தான் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணம். அரசியல் தைரியமும், திறமையான ராணுவத் தலைமையும், கூடவே இந்தியா, பாகிஸ்தான் அளித்த பயிற்சி, கிடைத்த அதி நவீன ஆயுதங்கள் எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம்.

எங்களிடம் தற்போது அனைத்து வகை அதி நவீன ஆயுதங்களும் உள்ளன. சாதாரண ஹெல்மட், பூட்ஸ் முதல் எங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அத்தனையும் இந்தியா, பாகிஸ்தான் மூலம் கிடைத்துள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகள் என்பது தெரியும். ஆனால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எங்களது எதிரியை அழிக்க இரு நாடுகளும் தாராளமாக உதவியுள்ளன.

இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். எனவே யாருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

அதேபோல முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பலகல்லே கூறுகையில், எனது பதவிக்காலத்தில் 80 சதவீத பயிற்சியை நான் இந்தியாவில்தான் பெற்றேன். அதேபோல பாகிஸ்தானிலும் நான் பயிற்சி பெற்றேன்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எங்களது அதிகாரிகள் அடிக்கடி சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். எங்களுக்கு பயிற்சி அளிக்க இரு நாடுகளும் எப்போதும் தயாராகவே உள்ளன.

நான் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தபோது, எங்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் இந்தியாவுக்குப் பிரச்சினை இருந்தது. அந்த சமயத்தி்ல பாகிஸ்தான் எங்களுக்கு ஆயுதங்களை அளித்து கை கொடுத்தது.

சில முக்கிய சாதனங்களைத் தருவதில் கொள்கை ரீதியாக இந்தியா தயங்கியது. ஆனால் பாகிஸ்தான் தயக்கம் காட்டவில்லை. தாராளமாக உதவியது.

அதேபோல சீனாவிடமிருந்தும் நாங்கள் ஆயுதங்ளைப் பெற்று வருகிறோம். எங்களுக்கு முதலில் ஆயுதங்கள் தேவை, பிறகு பணம் தருகிறோம் என்று கூறினோம். அதை சீனா ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை அளித்தது. இருப்பினும் வாங்கிக் கொண்ட ஆயுதங்களுக்கு நாங்கள் பணம் செலுத்தி விட்டோம்.

அமெரிக்காவும் பயிற்சி அளித்தது..

அதேபோல அமெரிக்காவும் கூட எங்களுக்கு பயிற்சி அளிப்பதில் உதவியது. இருப்பினும் அவர்களின் பங்கு குறைவுதான். சில அதிகாரிகளுக்கு மட்டுமே அவர்கள் பயிற்சி அளித்தனர்.

வனப்பகுதிகளில் போர் புரிவது உள்ளிட்ட முக்கியப் பயிற்சிகளை நாங்கள் இந்தியாவில்தான் பெற்றோம். அங்கு எங்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர்.

அதேபோல, தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கிய உளவுத் தகவல்களையும் எங்களுக்கு அவ்வப்போது அளித்து வந்தது இந்தியா.

இந்திய கடல் பகுதிகளில் இந்திய கடற்படையும் எங்களுக்கு உதவியது (இந்திய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட உருப்படியாக மீன் பிடிக்க இயலாத நிலை இருப்பது ஏன் என்பது இப்போதுதான் விளங்குகிறது).

எங்களுக்கு விடுதலைப் புலிகள் பெரும் மிரட்டலாக விளங்கினர். அவர்களது போர் உத்திகள் ஒரே மாதிரியாக இருக்காது. எனவேதான் நாங்கள் தடுமாறினோம். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கொடுத்த பயிற்சியின் மூலம் அதை சமாளிக்கும் திறமை எங்களுக்குக் கிடைத்தது என்றார்.

இலங்கைக்கு உதவுவதில் யார் பெரியண்ணன் என்ற போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி இலங்கை ராணுவத்தை பலப்படுத்தி விட்டு விட்டன. ஆனால் இது அப்பாவித் தமிழர்களை பதம் பார்க்கத்தான் உதவியுள்ளது என்பதை இந்தியா உணரவில்லை அல்லது உணர விரும்பவில்லை என்பது வேதனையான உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X