மண்டூக மகரிஷி சாப விமோசனம்.. வரலாறு என்ன?.. நாளைய விழாவின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம்!
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.
மதுரை அழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் முக்கியமான நிகழ்வாக மண்டூக மகரிஷி சாப விமோசனம் கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். வண்டியூர் சென்று தேனூர் மண்டபத்தில் தன் வருகைக்காக தவமிருக்கும் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனமும், நாரைக்கு முக்தியும் கொடுப்பார். மண்டூக மகரிஷி சாப விமோசனம் பெற்றது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நூபுர கங்கை தீர்த்தம்
மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டார் மகாவிஷ்ணு. அப்போது, இந்த உலகத்தை அளப்பதற்காக தனது திருவடியை மாகவிஷ்ணு மேலே தூக்கிய போது பிரம்மன், மகாவிஷ்ணுவின் பாதத்தை கழுவி பூஜை செய்தார். அப்படி பூஜை போது மகாவிஷ்ணுவின் கால் சிலம்பு எனப்படும் நூபுரம் அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெறித்து அழகர்மலை மீது விழுந்ததாகவும், அதுவே இந்த நூபுர கங்கை தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
சாபம் பெற்ற முனிவர்
இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். புராணக் குறிப்புகளின்படி, சுதபஸ் என்ற முனிவர் தவம் செய்தபோது துர்வாச முனிவரை கவனிக்காமல் விட்டதால், அவர் மீது கோபமடைந்த துர்வாசர் தவளை (மண்டூக) வடிவில் வாழ வேண்டும் என்று சபித்ததாக கூறப்படுகிறது. சாப விமோசனம் தந்தருள வேண்டும் என்று சுபதஸ் வேண்டியுள்ளார்.
அப்போது, துர்வாசர் வைகை ஆற்றில் தவம் செய், அழகர் கோவிலில் இருந்து பெருமாள் வருவார் அப்போது உணக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று துர்வாசர் கூறியுள்ளார். பின்னர், அந்த முனிவர் வைகை நதிக்கரையில் கடும் தவம் மேற்கொண்டார். அவரது பக்தியால் மகிழ்ந்த அழகர் பெருமாள் (சுந்தரராஜ பெருமாள்) அவருக்கு அருள் வழங்கி சாபத்தை நீக்கினார். இந்த நிகழ்வே மண்டூக மகரிஷி சாப விமோசனம் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் ஆக கண்டாங்கி சேலை உடுத்தி தங்க பல்லாக்கில் கிளம்பி மதுரைக்கு வருவார். அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். அந்த வகையில், ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி நாளான இன்று அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண மதுரையே விழாக்கோலம் பூண்டது.
மண்டூக மகரிஷிக்கு மோட்சம்
வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மே 2 ஆம் தேதியான நாளை காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது.













Click it and Unblock the Notifications