For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 யு.கே. நிருபர்களை கைது செய்து நாடு கடத்திய இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

Sri Lanka
கொழும்பு: இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் மூன்று பத்திரிக்கையாளர்களை இலங்கை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இலங்கை ராணுவத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி 3 பேரையும் சனிக்கிழமையன்று இலங்கை போலீஸார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து போலீஸ் துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா செய்தியாளர்களிடம் கூறுகையில், சேனல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் நிக் பேட்டன் வால்ஷ், தயாரிப்பாளர் பெஸ்ஸி டூ, கேமராமேன் மாட் ஜாஸ்பர் ஆகியோர் திரிகோணமலையில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் ராணுவம் நடத்தி வரும் இனவெறிப் படுகொலை தாக்குதல் குறித்து சேனல் 4 பல அரிய தகவல்களை வெளியுலகுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் இடம் பெயர்ந்து வந்தோர் தங்கியுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை ராணுவத்தினர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதை அம்பலப்படுத்தியது சேனல் 4.

இதனால் கோபமடைந்தே, 3 பேரையும் கைது செய்து இப்போது நாடு கடத்தியுள்ளது இலங்கை அரசு என கருதப்படுகிறது.

தங்களது பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு நாடு கடத்தியுள்ளதை சேனல் 4 டிவியை நிர்வகித்து வரும் ஐடிஎன் நியூஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐடிஎன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாமில் நடந்த சம்பவங்கள நாங்கள் வீடியோவில் பதிவு செய்து மே 5ம் தேதி ஒளிபரப்பினோம்.

அந்த செய்தி அறிக்கையில், தாக்குதலி்ல் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்படியே கிடப்பதையும், காயமுற்றவர்களுக்கு குடிநீர், மருந்து என எதுவும் கிடைக்காத நிலை இருப்பதையும், பெண்கள் பெருமளவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதையும் காட்டியிருந்தோம்.

இந்த நிலையில் எங்களது பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு நாடு கடத்தியுள்ளது.

ஏன் நாடு கடத்தப்பட்டார்கள் என்பதை விளக்குமாறு இலங்கை அரசை நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போர் நடக்கும் பகுதிகளுக்குச் செல்ல யாரையும் அனுப்ப மறுத்து வருகிறது இலங்கை அரசு. பத்திரிக்கையாளர்கள் அந்தப் பக்கம் செல்ல பல காலமாகவே தடை உள்ளது. ஐ.நா. மனிதாபிமானக் குழுவையும் அனுப்ப முடியாது என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வன்னிப்பகுதியில் நடந்து வரும் கொடுமைகளை சேனல் 4 அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டி இலங்கை அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

கடந்த பல மாதங்களாகவே பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து வருகிறது இலங்கை அரசு. வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வந்தது. இந்த நிலையில் 3 இங்கிலாந்து பத்திரி்ககையாளர்களை நாடு கடத்தியுள்ளது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கூற்றுப்படி இலங்கையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 14 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கிறது.

20க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அது கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X