For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை போர் குறித்து ஜெ. கருத்து: தனி ஈழம் குறித்து மெளனம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைச் சண்டையில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்து கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூறிக் கொண்டு நிறுத்தி விட்டார். தனி ஈழம் குறித்த தனது நிலை குறித்து அவர் இந்த அறிக்கையில் எதையும் கண்டு கொள்ளவில்லை.

அதேபோல பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாகவும் அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டு நாட்களுக்கு முன், சரணாகதி என்ற கசப்பான உண்மையை மென்மையாக கூறி தங்கள் துப்பாக்கிகளின் சப்தம் அடங்கி விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த உலகத்திற்கு அறிவித்தது. அதே நாளில், இலங்கைப் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசும் தெரிவித்தது.

இந்த இரு தரப்பினரும் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டதன் காரணமாக, இலங்கைத் தீவில் 30 ஆண்டுகளாக நடந்த போர் உண்மையிலேயே முடிந்து விட்டது என்று கருதலாம்.

இந்தச் சண்டையில் இரு தரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை.

இதன் மூலம் பெருமையடித்துக் கொள்வதற்கான காரணங்கள் யாருக்கும் இல்லை. மாறாக, மனப்பூர்வமாக ஆராய்ந்து பார்ப்பதற்குரிய நல்ல தருணம் இது. பரஸ்பர அவநம்பிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியாயமான, வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது. நம்பிக்கையை வளர்க்க வேண்டிய தருணம் இது. முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது.

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டதாலும், தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டதாலும் இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி...

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாலோ அல்லது அதன் தலைவர்களை கொன்று விட்டதாலோ இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்களர்களைப் போல் வேரூன்றியிருக்கும் மிகப்பெரிய தமிழ்ச் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை அகற்றி விட முடியாது.

இந்த அடிப்படை உண்மையை அதிபர் ராஜபக்சேயின் தலைமையிலான இலங்கை அரசு உணர்ந்து, ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் நியாயமான மனக்குறைகளை உடனடியாகக் களைய வேண்டும். இலங்கையில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும்.

மறுபடியும் அதே தவறுகள் நிகழும்...

தமிழர்கள் (வட கிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள்) இஸ்லாமியர்கள் மற்றும் பிற குடியினத்தவர்கள் அனைவரும் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நடந்த அதே வரலாறு மறுபடியும் நிகழும், அமைதியின்மை மற்றும் கட்டுக்கடங்காத கொலைகள் தொடரும்.

கடந்த 30 ஆண்டு காலப்போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து, வீடுகள் இல்லாமல், உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். வஞ்சம் தீர்க்கும் வகையில், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முட மாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அருவருக்கத்தக்க நிலையில் தமிழர்கள்...

இதற்கு சமமான எண்ணிக்கையில் அப்பாவி இளம் குழந்தைகள் அனாதைகளாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அருவருக்கத்தக்க, ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பசி, நோய், வறுமை, இல்லாமை ஆகியவை தான் அவர்கள் எங்கு நோக்கினும் தாண்டவமாடுகின்றன. 30 ஆண்டு கால இடைவிடாத குண்டு மழை காரணமாக, தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகி விட்டன. பல வருடங்களாக சாலைகள் போடப்படவில்லை. முறையான மருத்துவ வசதிகள் அந்தப்பகுதிகளில் இல்லை. மின்சாரம் இல்லை. தொலை பேசிகள் இல்லை...

அதிகாரப்பூர்வமாக யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர சர்வதேச நிவாரண அமைப்புகள் போர்ப்பகுதிகளுக்குள் நுழைய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

அங்குள்ள நிலைமையை முதலில் கண்டறிய, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போர்ப்பகுதிகளுக்குள் செல்ல அனு மதிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக வாய் மூடப்பட்ட சர்வதேச ஊடகங்களை, ராணுவ உதவியுடன் சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லாமல், சுதந்திரமாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

இந்தியா பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது..

தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும், போரினால் அழிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை துவக்குவதிலும் இந்தியாவும் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.

எங்களுக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் அமைக்கப்பட்டால், இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக 10,000 கோடி ரூபாய் தொகுப்பை இந்திய அரசு வழங்க வலியுறுத்துவோம் என்று அதிமுகவின் 15வது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தோம்.

மத்திய அரசின் அதிகாரப் பகிர்வில் அதிமுக இடம் பெறவில்லை என்றாலும், 1.5 கோடி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில், இலங்கையில் மிகப்பெரிய அளவில் கட்டு மானப்பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான முயற்சிகளில் உடனடியாக இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை தமிழ் மக்களுக்காக டெல்லியில் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X