For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று கருணாநிதியின் 86வது பிறந்த நாள்-இடதுசாரிகள் வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவர் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிறந்த நாளையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு சி.ஐ.டி. நகரில் உள்ள தனது வீட்டில் கருணாநிதி மரக்கன்று நட்டார். பின்னர் ராஜாத்தி அம்மாள், எம்பி கனிமொழி முன்னிலையில் கருணாநிதி கேக் வெட்டினார்.

இதையடுத்து கோபாலபுரம் இல்லம் வந்த கருணாநிதி பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். அங்கு தயாளு அம்மாள், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் கருணாநிதியிடம் ஆசி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்தார்.

கலைஞர் அரங்கத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய கேக்கை வெட்டிய கருணாநிதி பின்னர் அந்த அரங்கில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதல்வருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். அவர்கள் வரிசையில் நின்று முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு வித்தியாசமான பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன், வெள்ளியிலான வெண்கொற்றக் குடை உள்பட 86 வகையான சீர்வரிசைகளையும், நெல்லை மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் 86 கிராம் தங்க சங்கிலியையும் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி ரூ. 2 லட்சம் மதிப்பிலான 1000, 500 ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட்ட வாள், கேடயம், கிரீடம், ஈட்டி ஆகியவற்றை கருணாநிதிக்கு அணிவித்தார்.

கருணாநிதிக்கு அருகில் பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதி்ல் திமுக தொண்டர்கள் பிறந்த நாள் பரிசாக நிதி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

பர்னாலாவின் செயலாளர் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்தார். கவர்னரின் மகன் ககன் ஜித்சிங் நேரில் வந்து வாழ்த்தினார்.

மார்க்சிஸ்ட் தலைவர்கள் நேரில் வாழ்த்து:

இந் நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கருணாநிதியை கோபாலபுரத்தில் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வரதராஜன், முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன். கடந்த காலங்களில் நாங்கள் மாறுபட்ட நிலையில் இருந்தாலும் கூட அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறோம். அந்த பண்பு இப்போதும் நீடிப்பதால் இந்த சந்திப்பு. அரசியலில் அத்தகைய வழியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம் உள்ளது. எங்களை பொறுத்தவரை மாறுபட்ட கருத்துகளில் மாறுபட்டும், ஒன்றுபட்ட கருத்துகளில் ஒன்றுபட்டும் நிற்போம் என்றார்.

மீண்டும் திமுக கூட்டணியில் சிபிஎம் இணைய வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, நாங்கள் அரசியல் பேசவில்லை என்றார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் போது முதல்வரை சந்திக்கிறீர்களே என்று கேட்டதற்கு, இது அரசியல் சந்திப்பு அல்ல, பண்பாட்டு அடிப்படையிலான சந்திப்பு என்றார்.

தா.பாண்டியன் வாழ்த்து:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான, மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி 86வது அகவையில் அடி எடுத்து வைக்கும் செய்தியறிந்து, அவர் மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதே போல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமத் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை சென்னை தீவுத்திடலில், மன்றோ சிலை அருகில், மாபெரும் பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கும் கட்சி கொடிகளும், தோரணங்களுமாக காட்சியளிக்கின்றன.

பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் சார்பில், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 லட்சம் குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை:

கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி தமிழகத்தில் 6,7,8, வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு, இலவச கண் பரிசோதனை செய்யும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியருக்கு மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவ உதவியாளர்களால் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடையே பார்வை குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை மேல்பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்கள். கண் மருத்துவ உதவியாளர்கள் பார்வை குறைபாட்டின் தன்மையை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் கண்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்படும்.

கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்புறங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X