For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைவர்களை ஓரங்கட்ட மகளிர் இட ஒதுக்கீடு-முலாயம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதற்காக நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், அரசியலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை.

ஆனால், பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தற்போதைய வடிவில் நிறைவேற்றக்கூடாது.

இந்த மசோதாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதுகுறித்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதை விடுத்து, மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது, மசோதாவை ஏற்காதவர்களுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுப்பது போன்றது. இதைத்தான் சரத் யாதவும் கூறினார். எங்களுக்கு விஷம் கொடுக்காதீர்கள்.

இன்று இந்த மசோதாவுக்காக ஆளுங்கட்சி ஆண் எம்.பிக்கள் மேஜையை தட்டலாம். ஆனால், அடுத்த தேர்தலுக்கு பிறகு அவர்கள் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வர முடியாமல் போய்விடும். ராஜ்யசபாவுக்குத்தான் போக முடியும். எனவே, ஆண் எம்.பிக்கள் இந்த மசோதாவை ஆதரிக்கக் கூடாது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சரத் யாதவ், லாலு பிரசாத் போன்றவர்கள் இன்றைய நிலையை ஒரே நாளில் அடைந்து விடவில்லை. கடுமையான போராட்டங்களுக்கு பிறகுதான் அடைந்தனர். அத்தகைய தலைவர்களை ஒழித்துக் கட்டும் சதிதான், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா.

இந்த மசோதா நிறைவேறினால், நாடாளுமன்றத்தில் மூத்த தலைவர்களே இல்லாமல் போய் விடுவார்கள். மக்களவையில் உள்ள மூத்த அரசியல்வாதிகளைக் குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இது உள்நோக்கம் கொண்டது. இது தலைவர்களை ஓரங்கட்ட கொண்டு வரப்படும் மசோதா.

(நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை பார்த்து) நீங்கள் முதிர்ந்த அரசியல்வாதி, அறிவாளி. நீங்கள் இதைச் செய்யக் கூடாது.

இட ஒதுக்கீடு இல்லாமலேயே பல பெண் தலைவர்கள் உருவாகியுள்ளனர். காங்கிரசில் சோனியா உத்தரவு இல்லாமல் ஒரு இலை கூட அசையாது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி, மேற்கு வங்கத்தில் மம்தா, தமிழகத்தில் ஜெயலலிதா ஆகிய பெண் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்குப் பதில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு 20 சதவீதம் இடம் அளிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வரலாம், அதைச் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்.

எனது இந்தக் கோரிக்கைக்கு பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த மசோதா நிறைவேறாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

இந்த மசோதா ஜனநாயக நடைமுறைக்கு ஆபத்தானது. மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.

எங்கள் எதிர்ப்பை மீறி, பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால், சமாஜ்வாடி கட்சி தெருவில் இறங்கி போராடும். லாலு கட்சியையும், சரத் யாதவின் ஐக்கிய ஜனதா தளத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்வோம் என்றார் முலாயம்.

உமா பாரதியும் எதிர்ப்பு:

இந் நிலையில் பாரதீய ஜனசக்தி தலைவர் உமா பாரதியும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்துள்ளார். அவர் கூறுகையி்ல்,

இப்போதுள்ள நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது. அதை எனது கட்சி எதிர்க்க முடிவு செய்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனை புறக்கணித்து விட்டு பெண்கள் மசோதா பற்றி அரசியல் கட்சிகள் பேசக்கூடாது.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X