கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கு - வைகோ ஆஜராக சம்மன்
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜூலை 8ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதி சேது மாதவன் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கருணாநிதி சார்பில் திமுக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்தார். அதில், ஒரு கூட்டத்தில் பேசிய வைகோ, பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு எதிராகவும், அவதூறாகவும் வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.
இந்தப் பேச்சு திமுக தலைவர் கருணாநிதியின் புகழைக் குலைக்கும் வகையில் உள்ளது.
பொதுமக்களின் கண்களில் முதல்வர் கருணாநிதியை தவறான கோணத்தில் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அவதூறுப் பேச்சை பேசியுள்ளார் வைகோ.
வைகோவின் கூற்று அப்பட்டமான பொய், அடிப்படை ஆதாரமற்றது.
வைகோவின் பேச்சு, இந்திய குற்றவியல் சட்டம், 499, 500 ஆகியவற்ரின் கீழ் குற்றச் செயலாகும். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட வைகோவை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி சேது மாதவன் ஜூலை 8ம் தேதி வைகோ கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமாளிக்குமாறு கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications