For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வருக்கும், மற்றவர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் - ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதிக்கும், ஆளுங்கட்சியினர் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினருக்கும், மற்ற அனைவருக்கும் இடையிலான பாலம் போல நான் செயல்படக் காத்திருக்கிறேன், அனைவருக்கும் துணை நிற்பேன் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சட்டசபையில், துணை முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பல்வேறு கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர். அந்த உரைகளுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

தமிழக துணை முதல்-அமைச்சராக முதல்-அமைச்சர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டு, அதையொட்டி அவை முன்னவர் க.அன்பழகன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், அ.தி.மு.க. சார்பில் எஸ்.வி.சேகர் என்னை வாழ்த்துப் பேசினர்.

(அப்போது அக்கட்சியினர் குறுக்கிட்டு, அதிமுக சார்பில் என்று எப்படி ஸ்டாலின் கூறலாம் என்று ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து தான் கூறியதை வாபஸ் பெறுவதாக தெரிவித்த ஸ்டாலின், அதிமுக உறுப்பினர் என்று மட்டும் தெரிவித்தார்)

இங்கே அவையிலே வாழ்த்துரை வழங்குவதற்கு வாய்ப்பைப் பெற முடியாத சூழ்நிலையில் பல்வேறு கட்சிகளுடைய தலைவர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் தொலைபேசி மூலமாக எனக்கு ஏற்கனவே வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள். எனவே இங்கே வழங்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை.

இருந்தாலும், இன்றைக்கு இந்தப் பொறுப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடத்தில் வழங்கி இருந்தாலும், அவர்கள் அடிக்கடி எங்களைப் போன்றவர்களுக்கு சொல்லக்கூடிய ஒன்று, வரக்கூடிய பதவிகளை பதவிகளாக கருதாமல், அதை ஒரு பொறுப்பாகக் கருதி பணியாற்ற வேண்டும்' என்றுதான் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.

ஆகவே, இதை நான் பொறுப்பாகக் கருதி, என்னுடைய பணியை நிறைவேற்றக் காத்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்து எப்படி நான் இந்த அவையிலே பணியாற்றியிருக்கிறேனோ, அதைப்போல இன்றைக்கு முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டிருக்கக்கூடிய இந்தத் துணை முதல்-அமைச்சர் பொறுப்பையும் அதற்கு பயன்படுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன், காத்திருக்கிறேன்.

28.7.08 அன்று ராஜரத்தினம் திடலில் நடைபெற்ற ஒரு விழாவில், கடந்த ஊராட்சி ஒன்றியத்தினுடைய தலைவர்களுக்கு உள்ளாட்சித் துறையின் சார்பிலே வாகனங்கள் வழங்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அந்த வாகனங்களை எல்லாம் வழங்கிவிட்டு வாழ்த்துரை வழங்கினார். அப்போது ஒரு கருத்தினை எடுத்து சொன்னார்கள்.

அதுதான் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு உள்ளாட்சித் துறையின் சார்பிலே நம்ப முடியாத வகையிலே, எதிர்பார்க்க முடியாத வகையிலே பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆக, எங்களை போன்றவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.

நான் கூட முதல்-அமைச்சர் பொறுப்பிலேயிருந்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற பொறுப்பிற்கு வந்துவிடலாமா? என்று கூட எண்ணக்கூடிய அளவிற்கு உள்ளாட்சித் துறை இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார்.

இது ஏதோ தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்த பாராட்டாக, பெருமையாக நான் என்றைக்கும் கருதவில்லை. ஒட்டுமொத்த உள்ளாட்சித் துறைக்கே கிடைத்திருக்கக் கூடிய பெருமையாகத்தான் நான் அன்றைக்கும் கருதினேன். இன்றைக்கும் கருதிக் கொண்டிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, நம்முடைய முதல்-அமைச்சர் இன்றைக்கு இந்த துணை முதல்-அமைச்சர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அவை முன்னவர் க.அன்பழகன் சொன்னதுபோல, அவர் உடல் நலிவுற்று இருக்கக் கூடிய இந்த நேரத்திலும், எப்படி ஓய்விற்கே ஓய்வுக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த உழைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய முதல்-அமைச்சர்தான் நம்முடைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி.

ஆக, அவர் உழைத்திருக்கக்கூடிய அந்த உழைப்பு நம்முடைய மனதிலே பதிய வைத்துக்கொண்டு, அதிலே ஓரளவிற்காவது நாமும், நம்முடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்ற அந்த உணர்விலேதான், இன்றைக்கு உங்களுடைய அன்பான வாழ்த்துக்களையும் நான் பெற்றிருக்கிறேன்.

அதே நேரத்தில் ஒரு உறுதியையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, அது எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாற்றுக் கட்சியாக இருந்தாலும், நம்முடைய கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், எந்த கட்சியினுடைய உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நான் என்றைக்கும் துணை நிற்க காத்திருக்கிறேன், தயாராக இருக்கிறேன்.

இன்னும்கூட வெளிப்படையாக சொல்லவேண்டுமென்று சொன்னால், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், உங்களுக்கும், நம்முடைய முதல்-அமைச்சருக்கும் ஒரு சிறப்பிற்குரிய பாலமாக இருந்து செயல்பட நான் காத்திருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்திலே எடுத்துச் சொல்லி உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவனாக என்னை உருவாக்கிக்கொள்ள காத்திருக்கிறேன்; காத்திருக்கிறேன் என்று கூறி அமைகிறேன் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X