For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவசங்களை தந்தும் ஓட்டு இலவசமாக கிடைக்கலையே?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு ஏராளமான இலவசத் திட்டங்களை செயல்படுத்தியும் தேர்தலில் இலவசமாக ஓட்டு கிடைக்கவில்லையே என்று சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ பதர் சயீத் கூறினார்.

சட்டப் பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பதர் சயீத் (அதிமுக): திமுக அரசு ஏராளமான இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் தேர்தலில் பணம் கொடுத்துதான் ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். பல்வேறு இலவசங்களைக் கொடுத்தும் தேர்தலில் இலவசமாக ஓட்டு கிடைக்கவில்லையே?

அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்தால் இலவசங்களுக்கு வேலையே இருக்காது. சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கிடைக்கும் வரை பெண் எம்எல்ஏக்கள் பேச 33 சதவீத நேரம் ஒதுக்க வேண்டும்.

வீடுகளுக்கே ரேசன் பொருட்கள் வர வேண்டும்..

ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்):அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ மருந்துகள் வழங்க வேண்டும். ரேஷன் பொருள்களை மினி லோடு ஆட்டோ மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

சக்தி கமலாம்பாள் (பாமக): அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பாலியல் தொந்தரவு இருப்பதால் இரவுப் பணியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

லீமா ரோஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): விதவைகள் உதவித் தொகை பெற வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும். சத்துணவு கூடங்களில் காய்கறிக்கு 20 பைசா, மளிகை பொருள்களுக்கு 9 பைசா, விறகுக்கு 15 பைசா என மொத்தம் 44 பைசா ஒதுக்கப்படுகிறது. இதனை ரூ. 1 ஆக அதிகரிக்க வேண்டும்.

பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்): தனியார் நிறுவனங்கள் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி வருகிறார்கள். இதைத் தடுக்க வேண்டும்.

செல்வி ராமஜெயம் (அதிமுக): சத்துணவு மையங்களில் தரமான உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்படுகிறது. சத்துணவு மையங்களுக்கு புதிய எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் சான்றிதழைக் கொண்டு திருமண உதவித் தொகை வழங்க வேண்டும்.

டாக்டர் காயத்ரி தேவி (காங்கிரஸ்):திருமண உதவித் தொகையாக 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 10,000மும், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 15,000மும், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 20,000 என வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் பெண்கள் 12ம் வகுப்பு வரை படிப்பார்கள்.

திருமண உதவித் தொகை பெற இது முதல் திருமணம் தான் என்பதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. மறுமணத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசு இப்படி கேட்பது சரியல்ல. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஊனமுற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் பதில்:

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: ஊனமுற்றோர் மறுவாழ்வு துறையின் மூலம் ஊனமுற்றோரை ஊனம் இல்லாதவர் திருமணம் செய்தால் ரூ. 20,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உடல் ஊனமுற்ற பலர் ஊனமுற்றவர்களைத் தான் திருமணம் செய்கிறார்கள். எனவே, ஊனமுற்றோரை திருமணம் செய்யும் ஊனமுற்றோருக்கும் ரூ. 20,000 வழங்கப்படும்.

6,000 காது கேளாத நபர்களுக்கு காதொலி கருவிகள் சூரிய ளியில் சார்ஜ் செய்யப்படும் பேட்டரிகள் வழங்கப்படும்.

60 சதவீதம் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு வருமான வரம்பின்றி பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ. 500 மணியார்டர் மூலம் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மேலும் 30,600 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

பார்வையற்றவர்களுக்கு பி.எட். கல்லூரிகளில் கூடுதலாக 35 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக, கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றவர்களுக்கு தமிழ் மற்றும் வரலாறு பாடங்களில் தலா 100 என 200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இதுவரை 182 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதியோருக்கு உதவ 1253 தொலைபேசி...

முதியோர்கள் தங்களது பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான 1253 என்ற இலவச தொலைபேசி சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார் கீதா ஜீவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X