மதுரையில் ரூ. 320 கோடியில் தேசிய மருந்தியல் கல்வி ஆய்வு மையம்
மதுரை: தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் பிரிவு மதுரையில் அமைக்கப்படவுள்ளது. ரூ. 320 கோடியில் உருவாகும் இந்த மையத்திற்குத் தேவையான இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் உத்தரவின் பேரில் இந்த தேசிய அளவிலான மையம் மதுரையில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மையம் தவிர பிளாஸ்டிக் கல்வி மற்றும் வடிவமைப்பு பயிற்சிப் பள்ளியும் மதுரையில் தொடங்கப்படுகிறது.
இதற்குத் தேவையான இடத்தைத் தேர்வு செய்வதற்காக மருந்தியல் துறை இயக்குனர் ஆர்.சி. ஷா, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமாராவ், ரசாயனத்துறை அமைச்சக அதிகாரி விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று மதுரை வந்தனர்.
மதுரை அருகே இடையபட்டி மற்றும் மேலூர் - சிவகங்கை ரோட்டில் உள்ள அம்பலகாரன்பட்டி ஆகிய 2 இடங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வுசெய்தனர்.
பின்னர் ஆர்.சி. ஷா கூறுகையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் ரூ. 320 கோடி செலவில் 2 நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக இடம் ஆய்வு செய்து வருகிறோம். இந்த அறிக்கையை மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிப்போம்.
மத்திய திட்டக்குழுவும், நிதித்துறையும் அனுமதியளித்த பின்னர் ஒரு ஆண்டுக்குள் பணிகள் தொடங்கும்.
இந்தியாவில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பஞ்சாப் மாநிலம் மொஹாலி, அகமதாபாத், ஹாஜிப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்த மையம் ஏற்கனவே உள்ளது. தற்போது இந்த வரிசையில் மதுரையும் இணையவுள்ளது.
இதில் 10 பட்ட மேற்படிப்புகள் உள்ளன. அவற்றில் பார்மகாலஜி, டாக்சிகாலஜி, பார்மா பிராக்டிஸ் ஆகிய 3 பாடப்பிரிவுகள் உடனடியாக தொடங்கப்படும் என்றார் ஷா.