For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாமை அவமானப்படுத்திய யுஎஸ் விமான நிறுவனம்

By Staff
Google Oneindia Tamil News

Kalam
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் அமெரிக்க விமான நிறுவன ஊழியர்களால் முன்னாள் ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்ட விஷயம் இப்போது வெளியில் வந்துள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி கலாம் நியுயார்க் செல்வதற்காக காண்டினன்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தார்.

அவரை முதலில் சோதனை செய்யாமல் ஏரோபிரிட்ஜ் வரை அனுப்பிவிட்ட விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் ஓடி வந்து அவரைத் தடுத்தனர்.

அவரை பாதுகாப்பு ஸ்கேனர் வழியாக அனுப்பவதா வேண்டாமா என்று சிறிது நேரம் விவாதித்தனர். பின்னர் அமெரிக்காவில் உள்ள தங்களது மூத்த அதிகாரியிடம் பேசிய அவர்கள், கலாமா ஏரோபிரிட்ஜில் இருந்து திரும்பி வரவைத்து சோதனை நடத்தினர். அவரது காலணியையும் கழற்றிக் காட்டுமாறு கூறினர்.

இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கலாமும் சோதனைக்கு முழு ஒத்துழைப்புத் தந்தார். இதை அவர் விவகாரமாக்கவும் இல்லை.

ஆனால், இப்போது இந்த விஷயம் வெளியில் வந்துவிட்டதையடுத்து மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் விளக்கம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் கூறுகையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும். காண்டினென்டல் அதிகாரிகள் தவறாக நடந்திருந்தால் அவர்கள் கலாமிடம் மன்னிப்பு கேட்குமாறு உத்தரவிடப்படும் என்றார்.

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் சோதனை நடத்தக் கூடாது என்று இந்தியாவில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கலாமை இவ்வாறு அசிங்கப்படு்த்தியுள்ளது காண்டினென்டல் ஏர்லைன்ஸ்.

ஆனால், இதை காண்டினென்டல் ஏர்லைன்ஸ் மறுத்துள்ளது. அவர்கள் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் கலாமை அவமானப்படுத்தும் நோக்கில் இதைச் செய்யவில்லை. எங்களது விமான நிறுவனத்தைப் பொறுத்தவரை விஐபி, விவிஐபி ஆகியோருக்கு தனி சலுகை தரப்படுவதில்லை. அனைவரையம் சமமாகவே நடத்துகிறோம். கலாம் எங்களது சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தந்தார் என்றார்.

நாடாளுமன்றத்தில் அமளி:

இந் நிலையில் இந்த விவகாரம் இன்று மாநிலங்களைவையில் வெடித்தது. கலாமை கேவலப்படுத்திய செயல் மன்னிக்க முடியாதது என்று கூறிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அந்த விமான நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கலாமிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.

மன்னிப்பு கேட்ட படேல்..

இதற்கு பதிலளித்த பிரபுல் படேல், நிச்சயமாக இதை நானும் ஆதரிக்கவில்லை. அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன். இந்தத் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் நான் கலாமிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் அப்துல் கலாமை நேரில் சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு, வருத்தம் தெரிவிக்கவுள்ளேன்.

வழக்கு தொடரப்படலாம்...

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சிவில் விமானப் போக்குவரத்து சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் ஏன் உங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படக் கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது என்றார் படேல்.

முன்னதாக ராஜ்யசபா துணைத் தலைவர் ரஹ்மான் கான் கூறுகையில், இது மிகவும் சீரியஸான விஷயம். அவையினர் ஒட்டுமொத்தமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதை அரசு உரிய முறையில் கவனத்தில் கொள்ளும் என நம்புகிறேன் என்றார்.

பாஜகவின் அருண் ஜேட்லி, காங்கிரஸின் ஜெயந்தி நடராஜன், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் அமெரிக்க விமான நிறுவனத்தின் செயலைக் கடுமையாக கண்டித்துப் பேசினர்.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை-கலாம்:

இந் நிலையில் தன்னை நிறுத்தி வைத்து சோதனையிட்டது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நடந்தது உண்மை. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X