For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேறு வழியின்றி தான் புறக்கணிக்கிறோம்-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான சூழ்நிலை நிலவுவதால் தான், 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டிலிருந்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அதிமுக தோல்வி பயத்தின் காரணமாக புறக்கணித்திருக்கிறது என்று செய்திகள் வந்துள்ளன.

இதிலிருந்து, அதிமுக இடைத் தேர்தல்களை புறக்கணிக்க முடிவு செய்ததற்கான உண்மையான காரணங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது தீய எண்ணத்துடன், வேண்டுமென்றே திரித்துக் கூறவேண்டும் என்பதற்காகவோ மேற்படி செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, இதுகுறித்து விரிவான விளக்கம் அளிப்பது மிக அவசியமாகிறது.

திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தேர்தல் நடத்தும் முறையே கேலிக் கூத்தாகிவிட்டது என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது ரவுடிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், மக்களவை பொதுத் தேர்தலிலும் கூட எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

திருமங்கலம் இடைத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 30 சதவீதம் வாக்கு பதிவு செய்யப்பட்டு, அந்தத் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு 90 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது!.

பிகாரை மிஞ்சும் அளவுக்கு தமிழ்நாட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததில் வியப்பு ஏதுமில்லை.

மேலும், தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துவதில் விடாப்பிடியாக இருக்கிறது. நம்பத்தகாத, மோசடிகள் நிகழ்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள மின்னணு வாக்கு எந்திரங்களை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ் ஆகியவை ஒவ்வாது என்று ஒதுக்கிவிட்டன.

ஒரு வாக்காளர், தான் அளித்த வாக்கு, அந்த வேட்பாளருக்கு அல்லது அந்த கட்சிக்குத்தான் சென்றடைந்ததா என்பதை சோதனை செய்வதற்குரிய வசதி மின்னணு வாக்கு எந்திரத்தில் இல்லை. வாக்குப் பதிவுகளை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையில், மின்னணு வாக்கு எந்திரம், அதற்கு இணையான குறியீடு நாடாவையோ அல்லது அச்சு வெளியீட்டையோ தயார் செய்து வெளியிடும் வரை, நீதிமன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ கூட வேட்பாளர்கள் கொடுக்கும் புகாரில் உள்ள உண்மை நிலையை கண்டுபிடிக்க முடியாது.

இந்தக் காரணத்தினால்தான், நமது நாட்டில் மின்னணு வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தேர்தல் புகார் மனுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் மின்னணு வாக்கு எந்திரங்களில் தவறு ஏற்படவில்லை என்று அர்த்தம் கூறுவது தவறாகும்.

மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யலாம் என்பதை கடந்த 17ம் தேதி சட்டமன்றத்தில் ஒத்துக் கொண்டவர் வேறு யாருமல்ல, தமிழக நிதியமைச்சர் அன்பழகன்தான். மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்த முடியும் என்பதை மெய்ப்பித்து காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பரிசோதனை நடத்தினால், யார் வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்டலாம் என்று அவர் கூறினார்.

அதே சமயத்தில், வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்துக் கட்சியினர் முன்பும் சோதித்துக் காண்பிக்கப்படுவதால், வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்ற வாதத்தையும் முன் வைத்தார்.

அச்சுறுத்தல் மற்றும் கட்டாயத்தின் காரணமாக தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து செயல்படுகின்ற சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளைச் சார்ந்த பெரும்பான்மையான தேர்தல் முகவர்களை வாயடைக்கச் செய்யும் அல்லது அவர்கள் தங்களுடைய கடமைகளை செய்வதிலிருந்து தடுக்கப்படும் சூழ்நிலையில் என்ன நிலைமை ஏற்படும்? இது போன்ற அசாதாரணமான சூழ்நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலைதான் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரையும், தமிழக தேர்தல் அதிகாரியையும் மிகுந்த வருத்தம் அடையச் செய்திருக்கிறது. ஜனநாயகத்திற்கு விரோதமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதன் காரணமாகத்தான், ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் புறக்கணிக்கும் முடிவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து இருக்கிறது.

புறக்கணிப்பு என்பது ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு நியாயமான செயலாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு பொருள்களுக்கு எதிராக இந்த புறக்கணிப்பு போராட்டத்தை மகாத்மா காந்தி அவர்கள் கையாண்டார்.

1920ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நியாயமற்ற சட்டங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் தேர்தல்களை புறக்கணிக்குமாறு காங்கிரஸ் கட்சியை வற்புறுத்தினார்.

தற்போது தீங்கு இழைப்பவர்கள் வித்தியாசமானவர்கள். எது எப்படியோ, ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை.

அரசியல் கட்சி என்ற முறையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரே வழி தேர்தல் புறக்கணிப்புதான். இது போன்று செய்வதன் காரணமாக, மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்து தனிக்கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்.

மிகப்பெரிய அளவில் மக்கள் பலத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும் மாபெரும் அரசியல் கட்சியான அதிமுக இது போன்ற முடிவு எடுத்திருப்பதை அலட்சியம் செய்யாமல் ஆழ்ந்த யோசனையுடன் சிந்தித்து, தீர்வு காணுவதற்கான வழிமுறைகளை, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஜனநாயகப் படுகொலை தொடரும். சுயநலக்காரர்களும், ரவுடிகளும் தாண்டவமாடுவார்கள்! என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

அப்படியே அதிமுக ஆட்சியில் இடைத் தேர்தல்கள் நடந்த ஸ்டைலையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் நல்லா இருக்கும்...!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X