தெற்காசிய ஸ்திரத்தன்மையில் இந்தியாவுக்கு உரிமை உண்டு - மன்மோகன்
டெல்லி: தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி, செழுமை, ஸ்திரத்தன்மையில் இந்தியாவுக்கு அக்கறையும், உரிமையும் உண்டு என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
112 நாடுகளின் இந்தியத் தூதர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. அதைத் தொடங்கி வைத்து மன்மோகன் சிங் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தெற்காசியாவில் உள்ள அண்டை நாடுகளின் செழுமை, வளர்ச்சி, ஸ்திரத்தன்மையில் இந்தியாவுக்கும் பங்குண்டு.
அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளை அமைதியான வழிகளிலும், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் தீர்க்கவும், அவர்களை இந்தியாவின் செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமான முறையில் ஈடுபடுத்தவும் இந்தியா முனையும்.
இந்தியா தீவிரவாதத்தால் பல காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போரை முழு வேகத்துடன் இந்தியா மேற்கொள்ளும். இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்ய தீவிரவாதப் பிரச்சினையை இரும்புக் கரம் கொண்டு அணுகுவோம் என்றார் சிங்.