For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம்-கைவிட்டார் ஒபாமா

By Staff
Google Oneindia Tamil News

Missile Launch
வாஷிங்டன்: ஈரானை சமாளிப்பதற்காக என்று கூறி ரஷ்யாவை எரிச்சல்படுத்தும் வகையில் கடந்த புஷ் ஆட்சியின்போது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா அமல்படுத்த முனைந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை ரத்து செய்து விட்டார் அதிபர் பாரக் ஒபாமா.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வரவேற்றுள்ளார்.

ஈரானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தை சமாளிப்பதற்காகவும், அதை முறியடிப்பதற்காகவும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அருகில் உள்ள போலந்து நாட்டில் ஏவுகணைகளை வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தவும், செக் நாட்டில் ஒரு ரேடாரை வைக்கவும் கடந்த புஷ் ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் இது தங்களைக் குறி வைக்கும் அமெரிக்காவின் குள்ளநரித்தனம் என ரஷ்யா பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தது. ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவுக்கு அருகில் உள்ள வெனிசூலாவுக்கு தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலை அனுப்பி வைத்து அமெரிக்காவை எரிச்சலூட்டியது ரஷ்யா.

இந்த ஏவுகணைத் திட்டத்தால் அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவு மோசமடைந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டார் ஒபாமா. இதுகுறித்து அவர் கூறுகையில், கிழக்கு ஐரோப்பாவுக்கான ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக எளிய முறையிலான பாதுகாப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படும்.

நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளுக்குப் பதிலாக குறுகிய மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் நிலை நிறுத்தசப்படும். மேலும், கடலிலிருந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் நிறுத்தப்படும்.

இதுகுறித்து செக் மற்றும் போலந்து பிரதமர்களுடன் பேசியுள்ளேன்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கும், ரஷ்யா ஏற்கனவே தெரிவித்து வந்த கவலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உண்மையில் ஈரானின் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிரான நேட்டோவின் திட்டங்களில் ரஷ்யாவும் பங்கேற்க வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளது அமெரிக்கா. இப்போதும் நான் அதை விடுக்கிறேன். அமெரிக்காவின் எந்தத் திட்டமும் ரஷ்யாவுக்கு எதிரானதல்ல என்றார்.

ஒபாமாவின் இந்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் மெத்வதேவ் வரவேற்றுள்ளார். இது ஒரு நல்ல செய்தி என்று அவர் கூறியுள்ளார்.

ஒபாமாவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் உறவை புதுப்பித்துக் கொள்வதை மனதில் வைத்தே எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ரஷ்யாவுடன் பதட்டமான உறவு என்ற வட்டத்தைத் தாண்டி நல்லுறவை பலப்படுத்திக் கொள்ள ஒபாமா விரும்புவதாகவும் கருதப்படுகிறது.

அதேசமயம், ஒரேயடியாக ரஷ்யாவிடம் பணிந்து விட்டதாக காட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை அமெரிக்கா. அதை நிரூபிக்கும் வகையில், ஈரான் தனது நீண்ட தொலைவு ஏவுகணைத் திட்டங்களை விட குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. எனவேதான் நீண்ட தொலைவு ஏவுகணைகளை நிறுத்துவதை கைவிடுவதாக முடிவெடுக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.

புதிய திட்டத்தின்படி, ஈரானின் தாக்குதலை சமாளிக்க எஸ்எம்-3 ஏவுகணைகள் தெற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் நிலை நிறுத்தப்படும். ஈரானின் ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் வல்லமை பெற்றவை இவை.

முதலில் இவை போர்க் கப்பல்களில் பொருத்தப்படும். பின்னர் 2015ம் ஆண்டு வாக்கில் நிலப்பரப்பில் நிலைநிறுத்தப்படும்.

எஸ்எம்3 ஏவுகணைகளை நிறுத்தும் இடங்கள் குறித்து போலந்து மற்றும் செக் நாடுகளின் அதிகாரிகளுடன் அமெரிக்கா ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X