20 வயது இளைஞருடன் ஓடிப் போன 40 வயது கவுன்சிலர்
மடிகேரி: கர்நாடக மாநிலம் மடிகேரி அருகே, கணவரின் சந்தேகப் புத்தியால் கடுப்பான 40 வயது பெண் கவுன்சிலர், 20 வயதே ஆன இளைஞருடன் ஓடிப் போய் விட்டார். அவரையே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த கிராமப் பஞ்சாயத்து உறுப்பினரின் பெயர் மஞ்சுளா. இவரது கணவர் ரவி. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 14 மற்றும் 10 வயதில் இரு குழந்தைகளும் உள்ளனர்.
ரவிக்கு, தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அவருடன் சண்டை பிடித்துள்ளார். தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி வாதிட்டு வந்துள்ளார் மஞ்சுளா. ஆனாலும் கணவரின் சந்தேகப் புத்தி மாறுவதாக தெரியவில்லை.
இந்த நிலையில், 20 வயதான இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மஞ்சுளா. அவருடன் ஷனிவெர்சாந்தே என்ற கிராமத்தில் வசிக்கப் போவதாகவும், அவரையே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ரவி போலீஸாரை அணுகினார். போலீஸார் மஞ்சுளா மற்றும் அவருடன் கிளம்பிப் போன இளைஞர் சீனிவாஸ் மற்றும் ரவி ஆகியோரை வரவழைத்துப் பேசினர். ஆனால் தனது முடிவில் மஞ்சுளா உறுதியாக இருந்தார். அதேபோல மஞ்சுளாவை மணந்து கொள்வேன் என்று சீனிவாஸும் கூறி விட்டார்.
இதையடுத்து அவர்களை போலீஸார் அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த சம்பவத்தால் மடிகேரியில் பரபரப்பு நிலவுகிறது.