கணவர் பின்வாங்கல்-மீண்டும் பிரச்சினையில் கோபிகா
மதுரை: போலீஸாரால் சேர்த்து வைக்கப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் - கோபிகா தம்பதியினர் இடையே மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. கோபிகாவுடன் வாழப் பிடிக்கவில்லை என்று கண்ணன் பல்டி அடித்து விட்டார். இதுகுறித்து சமரச மையத்தை அணுகுமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கருங்கல் போலீஸ் சரகம் பாலபல்லம் நடுப்பிடாகை பகுதியை சேர்ந்தவர் காளிபிள்ளை. இவரது மகன் கண்ணன் (28). இவரது மனைவி கோபிகா (26).
இருவரும் கடந்த 11.8.2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். திருமணம் முடிந்த 3 மாதத்தில் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபிகா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
3 மாதத்திற்கு முன்பு கோபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் தனது கணவர் தன்னையும், குழந்தையையும் பார்க்க வராததால் கோபிகா கொதிப்படைந்தார்.
தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நாகர்கோவில் கோர்ட்டில் கோபிகா மனு செய்தார். பலன் இல்லை. போலீஸாரிடம் புகார் கொடுத்தார் பலன் இல்லை. இதையடுத்து கணவரின் வீட்டு முன்பு அமர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
இதையடுத்து அங்கு அரசியல் புகுந்தது. மதுரை வந்த கோபிகா, அங்கு தேமுதிக. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தும் முறையிட்டார். கோபிகாவை கணவருடன் சேர்த்து வைக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்தார்.
விஜயகாந்த்திடம் கோபிகா போனதையடுத்து குமரி மாவட்ட காவல்துறை விழிப்படைந்தது. மாவட்ட எஸ்.பி. சண்முகவேல், கோபிகா, கண்ணன் இருவரையும் அழைத்து சமரசம் பேசினார். இதில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்த போலீஸார், இருவரும் தனிக் குடித்தனம் செய்ய திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தது.
இந்த நிலையில், கண்ணனின் தந்தையான காளி பிள்ளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 27-ந்தேதி என்னையும், மகன் கண்ணனையும் கருங்கல் போலீசார் அழைத்து சென்றனர். அதன் பிறகு என்னை மட்டும் விட்டுவிட்டு எனது மகனை அழைத்து சென்றுவிட்டனர். அவர் எங்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற விவரத்தையும் போலீசார் என்னிடம் தெரிவிக்கவில்லை.
மறுநாள் நான் விசாரித்தபோது கண்ணன், அவரது மனைவி கோபிகாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து பெங்களூர் சென்றதாகவும், அங்குபோய் விசாரிக்கும்படியும் போலீசார் என்னிடம் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் எனது இன்னொரு மகன் கந்தனிடம் செல்போனில் கண்ணன் பேசியிருக்கிறார். அப்போது போலீசார் என்னை மதுரையில் கடத்தி வைத்துள்ளனர். என் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணன் கூறியிருக்கிறார்.
நான் இது குறித்து போலீஸ் ஐ.ஜி.யிடம் மனு கொடுத்தேன். எனது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை காப்பாற்றி மீட்டு தரவேண்டும். பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முருகேசன், கர்ணன் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கண்ணன் தனது மனைவி கோபிகா மற்றும் குழந்தையுடன் ஆஜரானார்.
அப்போது கண்ணன் நீதிபதிகளிடம் கூறுகையில், என்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ நான் விரும்பவில்லை. அவளது நடத்தை சரியில்லை. எனவே நான் அவளுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிகா கூறுகையில், நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். திருமணம் முடிந்த நாளிலிருந்தே என்னை வரதட்சணை கொடுமை செய்தனர். அதனால்தான் குடும்பத்தை விட்டு பிரிக்க பார்க்கின்றனர். என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து இது குடும்ப பிரச்சினையாக இருக்கிறது. எனவே இது தொடர்பாக சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி இந்த வழக்கில் முடிவு ஏற்பட அனுமதிக்கிறோம்.
அதுவரைக்கும் அவரவர் வீட்டில் இருக்கலாம் என்று கூறி வழக்கினை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
போலீஸாரால் சேர்த்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட கண்ணன் தன்னை போலீஸார் கடத்தி மதுரையில் வைத்திருப்பதாக அவரது தந்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்ததும், கோபிகாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கண்ணன் தெரிவித்ததும் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.