For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திரா, கர்நாடகத்தில் தொடரும் மழை -172 பேர் பலி - மீட்புப் பணியில் முப்படையினர்

Google Oneindia Tamil News

டெல்லி: கன மழை மற்றும் வெள்ளத்தால் மிதக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

போர்க்கால வேகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் 13 விமானப்படை ஹெலிகாப்டர்கள், ஐந்து போக்குவரத்து விமானங்கள், 12 கடற்படை நீச்சல் படைகள், ஏராளமான படகுகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், ஐந்து எம்ஐ-8 ரக விமானங்கள், எட்டு சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் இதுவரை 20 முறை சென்று அவை ஏராளமான மக்களை மீட்டுள்ளன. மேலும், நிவாரணப் பொருட்களையும் அவை மக்களுக்குப் போட்டுள்ளன.

அதேபோல நான்கு ஏஎன்-32 ரக விமானங்களும் இதுவரை 13 டிரிப் அடித்துள்ளன. மக்களை மீட்டதோடு, நிவாரணப் பொருட்களையும் அவை மக்களுக்கு வீசியுள்ளன.

இதுதவிர புவனேஸ்வரிலிருந்து விமானப்படையின் ஐஎல்-76 ரக இலகு ரக விமானத்தில், 350 பேரும், 50 படகுகளும் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த வீரர்களும், படகுகளும் அனுப்பி வைக்கப்படுவர்.

அதேபோல ஹைதராபாத், புனேவிலிருந்து 100 பேரும், 30 படகுகளும் அனுப்பப்பட்டு வருகின்றனர். பதிந்தா மற்றும் டெல்லியிலிருந்து 270 வீரர்கள் மற்றும் 30 படகுகள் அனுப்பபட்டுள்ளன.

இதுதவிர ராணுவ வீரர்கள் குழு படகுகள், மருத்துவக் குழுக்கள், பொறியாளர் குழுக்களுடன் கர்னூல், மகபூப் நகர், விஜயவாடா, பாகல்கோட், பீஜப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை 172 பேர் பலி...

இரு மாநிலங்களிலும் மழை, வெள்ளத்திற்கு இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிக உயிரிழப்பு கர்நாடகத்தில்தான். இங்கு மட்டும் 139 பேர் இறந்துள்ளனர்.

கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது. இங்கு 14 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. வடக்கு மற்றும் கடலோரக் கர்நாடகம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களும், கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் படையினர் பெருமளவில் அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல ஹோவர்கிராப்டுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர்களால் 150 பேரை மட்டுமே மீட்க முடிவதால் அது போதுமானதாக இல்லை என்று மீட்புப் படைகளுக்கான அதிகாரி ஜாம்தார் தெரிவித்துள்ளார்.

மழை, வெள்ளத்தால் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் வறட்சி நிறைந்த வடக்கு கர்நாடகத்தில் இந்த அளவுக்கு மழையும், வெள்ளமும் தலைவிரித்தாடியிருப்பது இதுவே முதல் முறையாம்.

கன மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்கள் - பீஜப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர் ஆகியவையே. கிருஷ்ணா, துங்கபத்திரா ஆறுகள் நிரம்பி வழிவதும், துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுமே இந்த அளழுக்கு அழிவு ஏற்பட முக்கிய காரணம்.

கர்நாடக அரசு நிவாரணப் பணிகளுக்காக ரூ. 100 கோடியை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது. விரைவில் கர்நாடக, ஆந்திர மழை சேதத்தை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவித்து பெருமளவிலான நிதியை ஒதுக்கும் என கர்நாடக அரசு எதிர்பார்க்கிறதாம்.

கர்நாடகத்தைக் குறை கூறும் ஆந்திரா

இதற்கிடையே, கர்நாடகத்திலிருந்து கிருஷ்ணா ஆற்றில் பெருமளவில் தண்ணீர் திறந்து விட்டதால்தான் ஆந்திராவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக ஆந்திரா குறை கூறுகிறது.

கிருஷ்ணா ஆற்றிலிருந்து கர்நாடகம் தனது பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெருமளவில் தண்ணீரைத் திறந்துள்ளது. கர்நாடகத்திற்கும் வேறு வழியில்லாத நிலை.

இந்த தண்ணீர் கர்னூல் மற்றும் மகபூப் நகர் மாவட்டங்களில் புகுந்து பெரும் உயிர்ச் சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக ஆந்திரா குறை கூறியுள்ளது.

கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரா ஆறுகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதனால் கர்னூல், மகபூப் நகர், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

ஆந்திராவில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது இதுவரை சரிவரத் தெரிவிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளிடையே இதுகுறித்து தெளிவான கணக்கு இல்லை.

மேலும் உயிரிழந்தவர்களை கணக்கிடும் நிலையிலும் தற்போது சூழ்நிலை இல்லை. அந்த அளவுக்கு வெள்ளப் பாதிப்பு கடுமையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் ரோசய்யா, நான் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவிடம் 2 முறை போனில் பேசினேன். கிருஷ்ணா, துங்கபத்திராவில் நீர் திறந்து விட வேண்டாம். உங்களது அணைகளிலேயே தேக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று கோரினேன். அவரும் அப்படியே செய்வதாக கூறினார். ஆனால் இப்போது தண்ணீரை பெருமளவில் திறந்து விட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

கர்னூல் மற்றும் மகபூப் நகர் மாவட்டங்களில் இதுவரை 3.83 லட்சம் மக்கள் அப்புறப்படுத்ததப்பட்டுள்ளனர். இரு மாவட்டங்களிலும் 254 படகுகள், 1000 நீச்சல் வீரர்கள், 550 ராணுவத்தினர், ஆறு ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

200 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 4 லட்சம் உணவுப் பொட்டலங்கள், 4 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 250 டாக்டர்கள் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X