For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மீது ராமதாஸ் சரமாரி தாக்கு

Google Oneindia Tamil News

Ramadoss with Jayalalitha
நாகர்கோவில்: சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் அதிமுக பலவீனமாகிவிட்டது, அதிமுக தொண்டர்கள் விலை போகிறார்கள், ஜெயலலிதாவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சரமாரியாக தாக்குதலும் தொடுத்தார் ராமதாஸ்.

இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பாமக வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2வது குற்றவாளியாக எனது மகனும், 3வது, 4வது, 5வது குற்றவாளிகளாக எனது பேரன் மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி தன்ராஜும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

அதிமுக பலவீனமாகிவிட்டது:

2001ம் ஆண்டுக்கு முன்னர் அதிமுக, தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாகிகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

விலை போகும் அதிமுக தொண்டர்கள்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டிவிடும்.

ஜெவுக்கு தலைமை பண்பு இல்லை:

இப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. நாடாளுமனறத் தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது:

ஆனால் முதல்வர் கருணாநிதியை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் திமுக அல்லது அதிமுகவுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்.

போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்:

அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.

3-வது அணி...:

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X