மனிதனி்ன் நிரந்தர அடையாளம் கல்வியே-ப.சிதம்பரம்!
கடலூர்: பிறந்த இடம், ஜாதி, மதம், மொழி என ஒரு மனிதனுக்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால், கல்வி தான் அவருக்கு நிரந்தரமான அடையாளத்தை தரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் பேசுகையில்,
படித்தவரா, படிக்காதவரா என்பதே ஒருவரின் அடையாளம். ஆரம்பக் கல்வியில் சேரும் 100 மாணவர்களில் ஐந்து பேர் மட்டுமே பிளஸ் 2 வரை செல்கின்றனர். அதில் நான்கு பேர் மட்டுமே பல்கலைக் கழக படிப்பிற்கு செல்கின்றனர். இடையில் மாணவர்கள் கல்வியை விடுவதற்கு சமுதாயம் தான் முக்கிய காரணம்.
அவ்வாறு உயர்கல்வி பயில பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கல்வித்தகுதி பெற முயற்சி எடுக்கவேண்டும்.
தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் தகுதியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் படிப்பதற்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். பிறந்த இடம், இருப்பிடம், ஜாதி, மதம், மொழி, பதவி என அடையாளங்கள் சொல்கிறோம். அதுவே தகுதியாக மாறிவிடாது. நிரந்தர அடையாளமாக இருப்பது கல்வி தான்.
கல்வி கடன் பட்ஜெட்டை விட அதிகம்...
எனவே தான் கல்வி கடனுக்கு நடப்பு ஆண்டில் மார்ச் 31ம் தேதி முடிய 16 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 27 ஆயிரத்து 641 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது.
நடப்பு ஆண்டு படிப்பு முடிந்து 6 மாதம் வரை வட்டி கிடையாது என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இன்னும் பல திட்டங்கள் வரவிருக்கின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக பிழை செய்யும் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் மற்ற அதிகாரிகள் அனைவரும் ஆர்வமாக செயல்பட்டு இந்த கடன் தொகையை வழங்கியுள்ளனர்.
விவசாயத்திற்காக ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் கோடியும், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடியும் கடன் வழங்கியுள்ளனர். அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வங்கிகள் முதல் வரிசையில் உள்ளனர் என சிதம்பரம் கூறினார்.