For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு: கருணாநிதி விலக வேண்டும் - ஜெ.

Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சித்த கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை...

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை 20.10.2009 வரை ஒத்திவைத்துள்ளது என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

முகத்தில் அறைந்த உச்சநீதிமன்றம்...

கருணாநிதியின் முகத்தில் உச்சநீதிமன்றம் அறைந்தாற் போல் ஆணையிட்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது கருணாநிதியே எதிர்பார்த்த ஒன்றுதான்.

முல்லைப்பெரியாறு பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முன்னோட்டமே இந்த ஆய்வு என்பதைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் கேரள அரசின் ஆய்வுப் பணிகளை தடுக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடன் வழக்கைத் தொடுக்கவில்லை.

பெயரளவில் தொடரப்பட்ட வழக்கு...

எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்கிறாரே என்பதற்காக பெயரளவில் வழக்கைத் தொடுத்ததுதான் இதற்குக் காரணம்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கருணாநிதியின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஏமாற்று வேலையாக மக்களை வஞ்சிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. என்னுடைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்த விருப்பமில்லாத கருணாநிதியின் மனநிலையை கேரள அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஆற்றுப் படுகை மாநிலமான தமிழ்நாட்டின் உரிமைகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை அவமதிக்கும் விதத்தில் 999 ஆண்டுகள் செல்லத்தக்க பன்மாநில உடன்படிக்கையை மீறும்வகையில் கேரள எல்லைக்குட்பட்ட முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான தீர்மானத்தை கேரள சட்டமன்றப் பேரவையில் 24.7.2009 அன்று நிறைவேற்றியுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், புதிய அணை கட்டுவதற்கு முன் தேவைப்படும் சோதனைகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கான மத்திய அரசின் அனுமதியை பெற கருணாநிதியின் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு இசைய வைத்துள்ளது.

தமிழக மக்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, அவப்பெயரை நீக்கும் பொருட்டும், என்னுடைய தொடர் வற்புறுத்தல் காரணமாகவும், வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தில் தடையாணை கோரி வழக்கு தொடுத்தார் கருணாநிதி.

மத்திய அரசின் அனுமதிக்கு தடையாணை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரமேச்சந்திரன் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதியின் கபட நாடகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

தமிழக அரசுக்கு முன்பே தெரியும்...

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி கொடுத்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையிலான திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது தனக்கு மிகுந்த வியப்பை அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வுப் பணிகள் 2007 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஆய்வுப் பணிகள் குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசுக்கு முன்கூட்டியே நன்கு தெரியும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே இப்பொழுது காலம் தாழ்த்தி, கருணாநிதி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

70 சதவீதம் ஆய்வு முடிந்துவிட்டது...

மேலும், மொத்தம் உள்ள 10 கிலோமீட்டர் தூர ஆய்வில், 7 கிலோ மீட்டர் தூரத்திற் கான ஆய்வுகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள ஆய்வுப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார்.

இப்போது அனைத்தும் தெள்ளத் தெளிவாகிவிட்டது. கேரளாவில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம் கருணாநிதிக்கு தெரிந்திருக்கிறது.

கேரள அரசால் புதிதாக கட்டப்படும் அணை, குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீரையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் ஐந்து எல்லையோர மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி கருணாநிதிக்கு கவலையே இல்லை.

தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்த கருணாநிதி விரும்பவில்லை.

சுயரூபம் அம்பலமாகி விட்டது...

கருணாநிதியின் சுயரூபம் அம்பலமாகி விட்டது. தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சித்து விட்டார் கருணாநிதி. இதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இல்லையெனில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்வதோடு மட்டுமல்லாமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு திமுக, அளித்து வரும் ஆதரவையும் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லை என்றால், மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு வளம் கொழிக்கும் பதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுவடையும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X