For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இணையதளம்

By Staff
Google Oneindia Tamil News

World classical Tamil summit website
சென்னை: கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இணையத்தளத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

www.ulakathamizhchemmozhi.org என்ற இந்த இணையதளத்தை நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் முன்னிலையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வளர்ந்து வரும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகிற்கேற்பத் தமிழ்ச் செம்மொழி வளம்பெறும் வகையிலும் தற்கால வாழ்க்கை முறைக்குத் தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் காட்டும் விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம் அமையவுள்ளது.

முதல்வரின் அறிவுரையின்படி, மாநாட்டின் ஆய்வரங்கத்தில் பன்னாட்டு ஆய்வாளர்களும் பங்கேற்கும் வகையில் இணையதளத்தில் ஆய்வரங்கத்திற்கென்று உருவாக்கப்பட்ட தனி வலைத்தளம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழர்களின் மரபு வழிப்பட்ட நாதசுரத்தில் மல்லாரி இசையுடன் வலைப் பக்கம் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் இலச்சினையும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையும் இடம்பெற்றுள்ளன.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வலைத்தளப் பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடது பக்கம் சங்ககால நாணய முத்திரையும் வலதுபக்கம் சிலம்பும், தொன்மையான தமிழ் எழுத்து வடிவங்களும், சிந்துவெளிக் குறியீடுகளும், முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன.

இப்பக்கத்தில், மாநாடு தொடர்பான அறிவிப்புகள், கோவை மாநகர் பற்றிய செய்திகளோடு சங்ககால வரலாற்றில் கொங்கு மண்டலம் பெற்றிருந்த சிறப்புகள், உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் பெற்றிருக்கும் தகுதிகளுக்கேற்ப அறிந்தேற்புப் பெற பரிதிமாற் கலைஞர் முதலாகத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் பணிகளும் இடம்பெறுவதோடு இந்திய அரசின் ஏற்பினைப் பெற்றுத் தந்த முதல்வர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுகளும் இடம் பெறுகின்றன.

மேலும் இப்பக்கத்தில், நடைபெறவுள்ள மாநாட்டு ஆய்வரங்கத்தில் இடம்பெறக் கூடிய பொதுநிலைச் சிறப்பரங்கம், தனிப்பொழிவரங்கம்,. கலந்துரையரங்கம், கருத்தரங்கம் ஆகியவை பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளின் பொருண்மை விவரங்களும் தரப்பட்டுள்ளன.

பங்கேற்க எனும் பக்கத்தில், மாநாட்டு ஆய்வரங்கத்தில் கட்டுரையாளராக, நோக்காளராகப் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளும் வகையில் படிவங்களும் கட்டுரையாளர் அனுப்ப வேண்டிய ஆய்வுச் சுருக்கத்திற்கான பகுதியும் இடம் பெற்றுள்ளன.

வலைத்தளப் பக்கத்திலிருந்தே பதிவு செய்து கொள்ளும் வகையிலும் தொடர்பு கொள்ளும் வகையிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுச் சொல் வழங்கப்படும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு ஆய்வரங்கம் தொடர்பாக அவ்வப்போது வெளிவரும் ஊடகப் பதிவுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X