மாற்றுத் திறன் படைத்தோருக்கு தனி துறை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மாற்றுத் திறன் படைத்தோருக்காக தனித் துறை உருவாக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் பேசியதாவது:

சில விஷயங்களை நெஞ்சில் பதிய வைக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடு இங்கிருக்கிறேன். 1949ம் ஆண்டு திமுகவை அண்ணா உருவாக்கியபோது, பிரசாரக் குழுவில் உறுப்பினராக இருந்து, பின்னர் கழகத்தின் பொருளாளராக இடம் பெற்று, பிறகு அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக உங்களின் அன்பான ஆதரவோடும், வாழ்த்துகளோடும் சுமார் 50 ஆண்டுகாலம் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன்.

86 வயது என்பதை அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா?
போதாது, இன்னும் கொஞ்சம் நாள் தொடர்ந்து இரு என்று சொன்னதைப் போல தம்பி பொன்முடியும் மற்றவர்களும் இங்கு பேசியுள்ளனர். நான் இருந்தது போதும், இதுவரை செய்தது இந்த நாட்டு மக்களுக்குப் போதும், இனி செய்ய வேண்டியதை இருப்பவர்கள் வந்து செய்யுங்கள் என்ற அழைப்பு விடுகின்ற நிலையிலே உள்ளவன். 86 வயதிலே இருக்கிறேன் என்று எனது வயதை இங்கு பேசியவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு என்னுடைய மனதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.

86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் பரவாயில்லை, சொல்லட்டும் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. இன்று வலுவான உடல் படைத்த வாலிபர்கள், தமிழன் என்று சொல்லிக் கொள்கிறவர்கள், தமிழ்த்தாய் கண் முன்னே ரத்தம் சிந்துவதை பார்த்துக் கொண்டு, சோம்பனாக படுத்துக் கொண்டு, தமிழன்னைக்கு மேலும் மகுடங்களைச் சூட்டுவோம் என்றில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களை எழுப்பவாவது, பார், அந்தக் கிழவனை, 86 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கிறான்' என்று சொல்வதன் மூலமாவது இளைஞர்களை தூண்டிவிட்டு உற்சாகத்தை ஏற்படுத்த, தமிழ் மீது பற்றையும், அதை காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தையும் உணர்வையும் எழுப்பிவிடத்தான், மேடையில் 86, 86 என்று சொன்னார்கள்.

நல்லவேளை என் மனைவி என்னோடு கூட்டத்துக்கு வரவில்லை. வந்திருந்தால் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

திமுக ஒரு உரிமை இயக்கம். மற்ற கட்சிகள், எதற்காக பாடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் மக்களிடம் சொல்லி ஆள் சேர்த்து இயக்கங்களை நடத்துவார்கள். திமுக அப்படி அல்ல. தொடக்கத்திலே இது திமுக என்ற பெயரோடு உருவானதல்ல. 50, 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி என்ற பெயரால் இந்த இயக்கம் உருவானது. நீதி கோருகிற கட்சியாக உருவானதால் அதற்கு அப்படி பெயர் வந்தது.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மை, குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அதன் நிழலிலே நீதி கோருகிறார்கள். அவர்களுக்கு அப்படி என்ன அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்றால், வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பில் இடமில்லை. அவற்றை உயர் ஜாதிக்காரர்கள், சீமான்கள், பூமான்கள் அதை தங்களின் வேட்டைக் களமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில்தான் இவர்களும், பெரும்பான்மையாக இருந்த பின்தங்கிய சமுதாயத்தினரும், தங்களுக்கு ஆறுதலாக யார் வரப் போகிறார்கள்? என்று எண்ணிய போதுதான் நீதிக்கட்சி என்ற ஜஸ்டிஸ் கட்சி உருவானது.

நீதி கோரி தொடங்கிய கட்சி, இன்றைக்கும் அதே நீதியைக் கோரி இன்னமும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற நிலையில், அது திமுக என்ற பெயரில் இருந்தால்கூட, அன்று கோரிய நீதியை மறந்துவிடவில்லை. இன்னமும் அந்த நீதியைப் பெற நாட்டிலே போராடிக் கொண்டிருக்கிற கட்சி என்பதால்தான், நீதிக்கட்சியின் வேர் பட்டுப்போகவில்லை. அதன் விழுதாக முளைத்த கட்சிகள் பல பட்டுப் போயிருக்கலாம்.

நேரடியாக நீதிக்கட்சியில் இருந்து வந்த திராவிட இயக்கம், திமுக என்ற அரசியல் இயக்கமாக உருவெடுத்து, உங்கள் ஆதரவைப் பெற்று கடந்த பல ஆண்டுகாலமாக போராடி, ஜனநாயக போராட்டங்களில் வென்றுள்ளது.

தியாக வரலாற்றை உருவாக்கி, மொழி காத்து, மொழி காக்கும் போராட்டங்களில் 60க்கும் மேற்பட்ட உயிர்களை ஈத்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். அதன்பிறகு சென்னை ராஜ்யமாக இருந்த பெயரை தமிழ்நாடு என்று ஆக்கியதால்தான், அங்கு வாழுகிறவர்கள் தமிழனாக வாழ முடியும், அன்னிய மொழிக்கு இங்கு ஆதிக்கமில்லை என்று சொல்ல முடியும் என்பதற்காகத்தான் மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, பல வெற்றிகளைப் பெற்று, உயிர்த்தியாகங்களை செய்து, அண்ணாவின் தலைமையில் அரசு அமைந்து, சென்னை ராஜ்யம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உட்பட பெயரில் என்ன இருக்கிறது என்று கூறியவர்கள் உட்பட அத்தனை பேரும், வாழ்த்து கூறி அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

நீதிக்கட்சி உருவான காலகட்டத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை ராஜ்யத்தில் பிரதமராக, 'பிரிமியராக' இருந்தார். அப்போது கட்டாய இந்தியை அவர் கொண்டு வந்தார். அதை எதிர்த்து தாளமுத்து நடராஜன் போன்றவர்கள் சிறைச்சாலையில் உயிர் நீத்தார்கள். அதை எதிர்த்து சிங்கத் தமிழன் சின்னச்சாமி உட்பட பலர் தங்களை தீவைத்துக் கொண்டு மாண்டார்கள்.

அண்ணா பெற்றுத் தந்த தமிழ்நாட்டில் தமிழை வாழ வைக்க வேண்டும், பிற மொழிகளுக்கு ஆதிக்கம் கூடாது என்பதற்காகவே என்று ஏற்பட்ட அந்த கிளர்ச்சித் தீ, புரட்சி எரிமலை வெடித்து சிதறியது. பதவி, பவுசு, பட்டங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கும் கட்சியாக அல்ல, உணர்வைக் காட்டி, சமுதாய பெருமையைக் காட்டி, அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான அறப்போர் நடத்தி அதில் கண்ட வெற்றிதான் அண்ணாவை முதல்வராகப் பெற்றது.

மக்களோடு மக்களாகப் பழகி அவர் கற்றுத் தந்த பாடம்தான், இன்று மந்திரியானாலும், முதல்வர் ஆனாலும் அதே பாடத்தைத்தான் நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன். அந்தப் பாடத்தின் வழியில்தான் நான் நடக்கிறேன். மற்றவர்களும் அதுபோல் நடக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

திமுக ஏழைகளின் இயக்கம். இங்கே ஏதோ பொன்முடி பொன்னாலான தகடுகளைத் என்னிடம் தந்தார். நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அது வெறும் தங்கமாக இருந்தால் வாங்கிய மேடையிலேயே வீசியிருப்பேன்.

ஆனால் அதில் பெரியார், அண்ணா உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால், தங்கத்தை விட நான் அதிகம் நேசித்த சிங்கம் பெரியார், அண்ணாவை வீசி விட்டவன் என்றாகி விடுவேன் என்பதால்தான் நான் மேடையில் அதை ஏற்றுக் கொண்டேன். மேடையில் ஏற்றுக் கொண்டேனே அல்லாமல், அவை அனைத்தும் நாளைக்கு கலைஞர் கருவூலத்துக்குத்தான் போகுமே தவிர எனது வீட்டுக்குப் போகாது.

பேரன், பேத்திகள் அறிவாலயத்தில் நடமாடும்போது:

இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, எனது பேரன், பேத்தி, ஸ்டாலினின் பேரன், பேத்தி வந்து அண்ணா அறிவாலயத்தில் நடமாடும் போது, அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களாக, அந்த காலத்தில் நமது பாட்டன், பூட்டன் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், எப்படியெல்லாம் அவர்கள் கொள்கைகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது, ஆதரவு இருந்தது என்பதை அந்த தங்கத் தகடுகளைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

அதற்குத்தான் அது பயன்படுமே தவிர, அதை உருக்கி, அதை நகை, வளையல் செய்து, தங்கக் கயிறு செய்து எனது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கழுத்தில் மாட்டிக் கொள்ளும் எண்ணம் இல்லை. அப்படி கொடுத்திருந்தால், அதை அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள். தலைவர்கள், பேச்சாளர்கள் வந்தால் அவர்களுக்கு வாழ்த்துப் பத்திரங்கள் கொடுங்கள். வாயால், கைகளால் வாழ்த்துங்கள். அப்படித்தான் வாழ்த்து இருக்க வேண்டுமே தவிர, அது பொன்னால் இருந்தால்தான் வாழ்த்து என்றிருக்கக் கூடாது. அதை வாழ்த்து என்றெண்ணாதீர்கள்.

ஏனென்றால், அந்தப் பொன்னின் துளியளவு தகட்டைப் பார்த்தாலே ஆகா, கண்ணைப் பறிக்கிறதே, என்று எண்ணும் ஏழை, எளியவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களின் அன்பை, ஆதரவைப் பெற நாம் ஏழையைப் போல் நடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஏழைகளாகவே இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+