For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதல்-ராணாவுக்கு எல்லாம் தெரியும்-ஹெட்லி

By Staff
Google Oneindia Tamil News

Headley
சிகாகோ: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஹெட்லி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள 12 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டு சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

மேலும் மும்பைத் தாக்குதல் தொடர்பான அனைத்து விவரங்களும் தஹவூர் ஹுசேன் ராணாவுக்குத் தெரியும் என்றும் ஹெட்லி கூறியுள்ளான்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் 180க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 2005ம் ஆண்டில் நபிகள் நாயகம் தொடர்பான கேலி கார்டூன் வெளியிட்ட டென்மார்க் பத்திரிகையாளரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது ஆகியவற்றில் தொடர்புடையவன் டேவிட் கோல்மன் ஹெட்லி.

பாகிஸ்தானைச் சேர்ந்த- அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஹெட்லி கடந்த அக்டோபர் 3ம் தேதி சிகாகோ விமான நிலையத்தில் அமெரிக்க போலீசாரிடம் சிக்கினான்.

அமெரிக்க புலனாய்வுத் துறை போலீசார் ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு இடங்களை கண்காணித்தும், அடிப்படை ஏற்பாடுகளை செய்தும் தீவிரவாதிகளுக்கு ஹெட்லி உதவியதாக இந்திய புலனாய்வு போலீசார் குற்றம்சாட்டினர்.

ஹெட்லி இந்திய நகரங்களுக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் அத்தனையும் இந்திய புலனாய்வு போலீசார் சேகரித்து உறுதிப்படுத்தினர்.

49 வயதான ஹெட்லி 2002ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து, உலகமெங்கும் அவர்களின் சதி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்தாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஹெட்லி மறுத்து வந்தான். ஆனால் நேற்று சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட ஹெட்லி, தன் மீதான 12 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக வாக்குமூலம் அளித்தான்.

ஹெட்லி அளித்துள்ள வாக்குமூலத்தில், மும்பை கடற்கரை பகுதிக்கு கடந்த 2008 ஏப்ரல் மாதம் வந்ததாகவும், தீவிரவாத கும்பல் கரையிறங்குவதற்கு தகுதியான இடங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் பதிவு செய்து கொண்டு போய் தீவிரவாத குழுவினருக்கு தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.

ஜூலை மாதம் மீண்டும் மும்பைக்கு வந்து தாஜ் மஹால், ஓபராய் ஹோட்டல், லியோபால்ட் கஃபே, சபாத் ஹவுஸ் போன்ற இடங்களை கண்காணித்து தேவையான பதிவுகளை எடுத்துக் கொண்டதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

தான் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்ததால், முஸ்லிம் என்றோ பாகிஸ்தானியர் என்றோ சந்தேகம் எழாமல் அடிக்கடி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் முன்னேற்பாடுகளுக்காக வந்து செல்ல வசதியாக இருந்தது என்றும் ஹெட்லி குறிப்பிட்டுள்ளான்.

இந்தியப் பயணங்களுக்கு எந்த வித சிக்கலும் இல்லாமல் இருப்பதற்காக தனது பால்ய நண்பன் ரானாவை பயன்படுத்திக் கொண்டதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

மும்பை தாக்குதல் வழக்கு குறித்து மட்டுமல்லாமல், சர்வதேச தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய மிக முக்கியத்துவம் வாய்ந்த, உபயோகமான தகவல்களை ஹெட்லி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக எஃப்பிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியாவில் அமெரிக்கர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும், 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 5 முறை பாகிஸ்தான் சென்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்றதாகவும்,

2005க்கு பிறகு 5 தடவை மும்பை சென்று தாக்குதல் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும், மும்பை தாக்குதல் மூலம் 6 அமெரிக்கர்களை கொன்றதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு பயண வசதிகள் மற்றும் பண உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

ராணாவுக்கு எல்லாம் தெரியும்...

ஹெட்லியின் வாக்குமூலத்தில் முக்கிய அம்சமே ராணாவுக்கு இதுதொடர்பான அனைத்துத் தகவல்களும் தெரியும் என்பதுதான்.

ராணா, பாகிஸ்தானில் பிறந்த கனடிய குடிமகன் ஆவான். ஹெட்லியும், இவரும் ஒன்றாக கைது செய்யப்பட்டவர்கள்.

ராணா குறித்து ஹெட்லி கூறியுள்ள முக்கியத் தகவல்கள்...

மும்பை தாக்குதல் சதித் திட்டத்தில் ராணாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. உண்மையில் இந்தத் திட்டம் குறித்த அனைத்துத் தகவல்களும், சதிச் செயல்களும் ராணாவுக்கு முன்பே தெரியும்.

தாக்குதல் குறித்த அனைத்து விவரங்களையும் முன்பே ராணாவுக்குத் தெரிவித்து விட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பு.

2006ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் நான் சிகாகோ சென்று ராணாவை சந்தித்தேன். இந்தியாவில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து அப்போது ராணாவுக்கு நான் தெரிவித்தேன்.

உனது செயல்களுக்கு உன்னுடைய குடியுரிமை அலுவலகம் முகமூடியாக இருக்கும். எனவே இந்தியாவில் ஒரு அலுவலகத்தைத் தொடங்க வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

இதையடுத்தே மும்பையில் ஒரு குடியுரிமை அலுவலகத்தைத் தொடங்கினார் ராணா. அந்த அலுவலகத்தின் மூலம் எனது செயல்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார் ராணா.

ராணாவின் உத்தரவின் பேரில், அவரது குடியுரிமை சேவை அலுவலகத்துடன் தொடர்புடைய ஒரு நபர் எனக்குத் தேவையான போலி ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்தார். இந்தியாவுக்குச் செல்ல எப்படி விசா பெற வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளையும் ராணா எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

ராணாவின் ஒப்புதல் கிடைத்த பின்னர் நான் பாகிஸ்தான் சென்றேன். அங்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்களான ஏ மற்றும் டி மற்றும் பலரை சந்தித்தேன்.

பல்வேறு இடங்களில் பல்வேறு தருணங்களில் இந்த சந்திப்புகள் நிகழ்ந்தன.

பின்னர் நானும், ராணாவும் தொடர்ந்து பலமுறை சந்தித்தோம். தொடர்புகளை பராமரித்து வந்தோம். தாஜ்மஹால் ஹோட்டல் உள்ளிட்ட மும்பையின் முக்கிய இடங்களை தீவிரமாக உளவு பார்த்தோம்.

மும்பை சம்பவத்திற்குப் பின்னர் எனது பாகிஸ்தானிய லஷ்கர் தலைவர்களின் ரியாக்ஷன் குறித்தும் ராணாவுக்கு நான் தெரிவித்தேன் என்று கூறியுள்ளான் ஹெட்லி.

இவன் மீது கூறப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டப்படி மரண தண்டனை வழங்கப்படும். ஆனால் குற்றவாளிகள் உண்மையை ஒத்துக் கொண்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே வழங்கப்படும். எனவே டேவிட் ஹேட்லிக்கு ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பின்னர் ஹேட்லியின் வழக்கறிஞர் ஜான் தெசிங் நீதிமன்றத்தில் கூறுகையில், ஹேட்லி உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார். அவரை இந்தியாவிடமோ அல்லது பாகிஸ்தானிடமோ அனுப்பக் கூடாது. அதே நேரத்தில் இந்திய அதிகாரிகள் இங்கு வந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஒத்துழைப்பார் என்றார்.

இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார். எனவே ஹெட்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட மாட்டான் என்பது உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்று ஹெட்லியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்படலாம்.

ஹெட்லி அளித்துள்ள இந்த வாக்குமூலம் இந்தியாவுக்குக் கிடைக்க வெற்றி என்றாலும், அவனை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று நீதிபதி உறுதியளித்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பின்னால் லஷ்கர் இ தொய்பா நேரடியாகவே தொடர்பு கொண்டிருந்தது என்கிற இந்திய புலனாய்வு தகவல்கள் இதன் மூலம் மீண்டும் உறுதியாகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X