For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர்களுக்கு பணம் தந்தாலும் திமுகவுக்குத் தோல்வி பயம்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
தர்மபுரி: பென்னாகரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தந்தாலும் திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பென்னாகரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக தண்டுகாரன்பட்டியில் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

பணம் தந்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்த திமுகவுக்கு பென்னாகரம் இடைத் தேர்தலில் தோல்வி பயம் அதிகரித்து விட்டது. அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதி மார்ச் 24ம் தேதி பிரசாரத்துக்கு வருகிறார்.

பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுகவை தோல்வியடைச் செய்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்க வேண்டும்.

திமுகவினர் குடும்ப அரசியல் நடத்தி பல்வேறு வகையிலும் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அந்தப் பணத்தைத்தான் வாக்காளர்களுக்கு தேர்தல் நேரத்தில் வழங்கி வருகின்றனர். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்பியது. திமுக இதற்கு உடந்தையாக செயல்பட்டது.

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அமலில் உள்ளது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழகத்தின் நீர் ஆதாரத்தைக் காப்பாற்ற திமுகவுக்கு துணிவில்லை என்றார் வைகோ.

தொலைநோக்குப் பார்வை இல்லா பட்ஜெட்:

இந் நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரும்பு வெட்டுக் கூலியை உயர்த்தி தரவும், டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் விலை கோரியும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், நெல் கொள்முதல் விலையில் ரூ.50 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதும், கரும்பு டன்னுக்கு ரூ.2000 நிர்ணயம் செய்துள்ளதும் விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

உரவிலை உயர்வு குறித்தோ, மரபு அணு மாற்று கத்திரிக்கு அனுமதி வழங்குவது குறித்தோ, அரசின் தெளிவான கருத்தை காண முடியவில்லை. ஆனால், இயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பரிசு என்று ஏமாற்று திட்டத்தை அறிவித்து விவசாயிகளை திசை திருப்புகிறது.

கொங்கு மண்டலத்தில் தென்னை விவசாயிகளின் கள்' இயக்கத்தின் கோரிக்கையும் அலட்சியப்படுத்தி உள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் தமிழக விவசாயிகள் சந்தித்து வரும் நெருக்கடிகளை அரசு உணர்ந்ததாகவே தெரியவில்லை.

மின்வெட்டு காரணமாக விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள், பொது மக்கள் பெற்று வரும் துன்பங்களை கண்டும், காணாமலும் இருந்த அரசு, இப்போது தான் மின் உற்பத்தி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதுவும் வெறும் ஏட்டுக்சுரைக்காய் தான்.

திமுக அரசு தென் மாவட்டங்களுக்கு அறிவித்த தொழில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இதுவரையிலும் நடைமுறைக்கு வரவில்லை. தென் மாவட்டங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

முல்லை பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் மத்திய அரசின் துரோகத்திற்கு துணை போனது மட்டுமின்றி, சரியான புரிதல் இன்றி அலட்சியமாக இருந்ததால்தான் முல்லை பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு எதிரான நிலை உருவானது.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு வரும் செயலை நிறுத்த தவறிய தி.மு.க. அரசு, மீனவர்களை ஏமாற்ற திட்டங்களை அறிவித்து உள்ளதை தமிழக மீனவர்கள் ஏற்க மாட்டார்கள்.

இலவச டி.வி. திட்டத்திற்கு இந்த ஆண்டும் ரூ.500 கோடி முதலீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் நொறுங்கி கிடக்கின்றன. இருக்கைகள் உடைந்து போய் விட்டன. கிராமப்புற பள்ளிகள் கேட்பாரற்று கிடக்கின்றன. அவற்றை சீர்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கும் எண்ணமே அரசுக்கு இல்லை.

தமிழகத்தை முன்னேற்றவோ, வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவோ செயல்திட்டங்கள் அற்ற-தொலைநோக்கு பார்வையில்லாத நிதிநிலை அறிக்கையை தமிழக மக்களுக்கு புதிய சட்டசபை பரிசாக வழங்கியிருக்கிறது என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X