For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செண்பகவல்லி அணை - கேரள தண்ணீர் மோசடிக்கு மற்றுமோர் உதாரணம்!

By Staff
Google Oneindia Tamil News

Senbagavalli: A forgotten chapter in the saga of TN-kerala water dispute
- கே.எம்.கே. இசக்கிராஜன்

வாசுதேவநல்லூர்: மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி நீர்தேக்கத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தமிழக - கேரள எல்லை பகுதிகளில் தான் இரு மாநில பகுதிகள் வளம் பெற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வலுவான நீர்த்தேக்கங்கள் மன்னராட்சி காலங்களிலும், மக்களாட்சி காலங்களிலும் கட்டப்பட்டன.

இந்த நீர்தேக்கங்களினால் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ஆட்சி மாறி மாறி வரும்போது அடிக்கடி குழப்பங்கள் ஏற்படுவதும், போராட்டங்கள் வலுப்பெறுவதும் வாடிக்கையாகி வருகிறது.

தரணியெங்கும் போர் பரணி பாடிய தமிழன் அனாதைகளாய், ஆதரவற்றவர்களாய் அண்டை மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும், மிதி பட்டாலும் கேள்வி கேட்க நாதியில்லை. ஏன் தமிழகத்திலேயே தமிழன் ஆட்சி நடக்கும்போது தமிழன் உரிமையை கேட்க உயிர் விடும் சம்பவங்களும் நமக்கு உண்மைகளை உணர்த்ததான் செய்கின்றன.

ஒருபுறம் இப்படி என்றால் மறுபுறம் அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மறந்து இன்று தண்ணீர் அரசியல் நடத்தும் மாநிலங்கள் ஏராளம்.

அதில் முழுக்க முழுக்க தமிழகத்தில் வளரும் ஆடு, மாடுகள், கோழிகள், அரிசிகள் கடலை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள், காய்கறி, பால், மணல், செங்கல், மின்சாரம், வாழைப்பழங்கள், சிமிண்ட் என அனைத்தையும் நம்பியே வாழ்நாளை கழிக்கும் கேரள மாநிலம் வீணாய் கடலில் கலக்கும் பல நதிகளின் நீரை தமிழகத்துக்கு தராமல் சண்டைக் கோழியாய் இருந்து வருகிறது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் நாடறிந்த விஷயம். அதேபோல் தென்மாவட்டத்தில் செண்பகவல்லி அணை நீர்தேக்கம் உடைப்பு சரி செய்யப்படாமல் சுமார் 30 ஆண்டுகளாய், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகி போய் கிடக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வானம் பார்த்த பூமியாய் வறண்டு போய் கிடக்கிறது.

1706ம் ஆண்டு காலவாக்கி்ல் மதுரை விஜயரெங்க சொக்க நாயக்கர் ஆட்சி காலத்தில் முடிவெடுக்கப்பட்ட திட்டம். காலசக்கரங்கள் சுழற்சியால் 1731-39 கால கட்டத்தில் மீனாட்சி திருமலை நாயக்கர் ஆட்சி மதுரையில் ஏற்பட்டது.

சாந்தா சாகிப் என்ற மன்னனின் பார்வை மதுரை நாயக்கர் ஆட்சியின் மீது பாய்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் தென்பகுதியி்ல் உருவானது. மதுரையில் மீனாட்சி திருமலை நாயக்கர் கைது செய்யப்பட்டார். கொடுமைகள் அரங்கேற தொடங்கியது.

அந்த காலகட்டத்தில்தான் சிவகிரியை தலைமையாக கொண்டு ஆட்சி நடத்திய ஜமீன்தார்-திருவிதாங்கூர் (கேரளா) மன்னரின் உதவியை நாடி இன்றைய நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் செழிப்படையும் வண்ணம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாசுதேவநல்லூர் தலையணை பகுதிக்கு மேற்கே செண்பகவல்லி நீர்த்தேக்கம் கட்டிட முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்பின் 1915ம் ஆண்டு வரைப்படம் தயாரிக்கப்பட்டு 1917ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டும் பணி தொடங்கி அன்றைய காலகட்டத்தில் சுமார் 4500 அடிநீளம் அணை கட்டப்பட்டது.

இந்த நீர்தேக்கம் 40 சதுர கிமீ பரப்பளவில் உருவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் தேவியாறு, பேச்சிகோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் இந்த அணைக்கு தண்ணீரை தாரை வார்த்தது.

இந்த நீர்த்தேக்கம் தீர்த்தபாறை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து 15 கண்மாய்கள் மூலம் 12 ஆயிரம் ஆயக்காட்டு பயன் பெற்று வந்த நிலையில் 1965ம் ஆண்டு வாக்கில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பகுதியில் சிறிய உடைப்பு ஏற்பட்டது.

அப்போது நம் பகுதி விவசாயிகள் அதனை கவனிக்காததால் அடுத்தடுத்து வனப்பகுதிகளில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் 1974-80 ஆண்டுகளில் சுமார் 250 அடி பள்ளம் ஏற்பட்டு தமிழகம் நோக்கி வரவேண்டிய தண்ணீர் தீ்ர்த்தபாறை மணல்மேடு வழியாக முல்லை பெரியாறு நோக்கி திசை மாறி பாயத்தொடங்கியது.

தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மாவட்ட விவசாயிகள் அணையின் உடைப்பு மோசமான நிலை ஏற்படுத்தியது கண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணனிடம் முறையிடவே அவர் 1977ல் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் முன்பு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து முதல்வர் எம்ஜிஆர் அப்போதைய பொதுப்பணி துறை அமைச்சர் ராஜாமுகமதுவை அழைத்து நீ்ர்தேக்க உடைப்புப் பகுதிகளை சீரமைக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்காக தமிழக பொதுப்பணித் துறையிடம் இருந்து பணத்தைப் பெற்ற கேரள அரசு, அதன்பின் செண்பகவல்லி நீர்தேக்கம் பழுது பார்க்கும் பணியினை செய்யாமல் கிடப்பி்ல் போட்டது.

இதுகுறித்து 2000ம் ஆண்டில் முன்னாள் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் குழுவினர் திருவனந்தபுரம் சென்று அப்போதைய முதல்வர் நயனார், பொதுப்பணிதுறை அதிகாரிகள் சுப்பிரமணியம், நளினி ஆகியோரை சந்தித்து நினைவூட்டு வந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர்.

அதே போன்று அணை உடைப்பு வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களை எடுத்து கொண்டும் இக்குழுவினர் அப்போதைய தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் துரை முருகனிடம் கொடுத்து கேரள அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப கோரியுள்ளனர்.

அவரும் அப்போதைக்கு சரி என்று கூறிவிட்டு மறந்து விட்டு விட்டார் என்று இப்பகுதி விவசாயிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

முல்லை பெரியாறு அணை பிரச்னையை மட்டும் வைத்து காய் நகர்த்தும் தமிழக அரசு இப்பிரச்சனையை அம்போவென விட்டு விட்டது. காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் இத்தொகுதியில் திமுக கூட்டணியினர் வெற்றி பெறவில்லை என்று இப்பகுதியில் கூறப்படுகிறது.

அதேபோன்று தான் இந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் நிகழ்ந்துள்ளதால் தமிழக அரசு முற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

உடைந்த அணையை சீர்செய்ய வேண்டி 33 ஆண்டுகாலமாய் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது கிணற்றில் போட்ட பாறங்கல்லாய் தான் இருக்கிறது.

மேலும் இப்பகுதி விவசாயிகள் கடந்த ஜனவரி மாதம் நெல்லையில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாளில் புகார் செய்தனர்.

ஆனால் கலெக்டரோ தமிழக அரசின் நமக்கு நாமே திட்டதின் மூலம் உடைப்பை சரி செய்து விடலாம், 73 மீட்டர் தான் உடைப்பு உள்ளது. திட்ட மதிப்பீடுகள் பொதுப்பணித்துறை மூலம் தயார் செய்யப்படும் என்றும் கேரள அரசிடம் நம் அரசு மூலம் பேச்சு வார்த்தை நடத்த கோரிக்கை வைப்போம். அதற்கு கேரள அரசு சம்மதம் தெரிவிக்காவிடில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுவோம் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது,

செண்பகவல்லி நீர்தேக்கம் பழுதுபார்க்கப்பட்டால் ஆண்டுக்கு 2500 கனஅடி தண்ணீர் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பகுதிகளிலுள்ள சுமார் 24 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வளம்பெற முடியும்.

ஆனால் அவர்களோ தமிழன் ரத்தத்தை உறிஞ்சி தண்ணீர் கொடுக்க மறுத்து வருகின்றனர். கேரளாவின் ஆற்று நீரும், ஏரிநீரும் கடைசியாக கடலில் கலந்து வீணாகிறது. ஆனால் தமிழனுக்கு... தமிழகத்துக்கு மட்டும் தண்ணீர் திரும்ப கேரள சம்மதிக்க மறுக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X