For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை-காட்டிக் கொடுத்த செல்போன்!

By Chakra
Google Oneindia Tamil News

சிம்லா: கடந்த 45 நாட்களாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை செல்போன் தான் காட்டிக் கொடுத்துள்ளது.

32 வயதான நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் லீலைகளில் ஈடுபட்ட வீடியோ வெளியானதையடுத்து தலைமறைவானார்.

அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

அவரைக் கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க சென்றிருப்பதாக அவரது தியான பீட அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் எப்போது வருவார் என்று தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து நித்யானந்தாவை கைது செய்ய தனிப்படை அமைத்தது கர்நாடக சிபிஐ போலீஸ் பிரிவு.

இந்தப் படை இமாசலபிரதேச மாநிலத்தில், சோலன் மாவட்டம் அக்ரி என்ற இடத்துக்கு அருகே உள்ள சிவ்சங்கர்கர் என்ற கிராமத்தில் டெல்லியை சேர்ந்த சதீந்தர் சிங் டோக்ரா என்ற தொழிலதிபரின் வீட்டில் வைத்து நித்யானந்தாவை நேற்று மடக்கியது.

பகல் 1.30 மணிக்கு கைது செய்யப்பட்ட நித்யானந்தாவுடன் நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டி, மிதா சனாதன் நந்தா, அர்பில் சங்கில், அருண்ராஜ் ஆகிய 4 சீடர்களும் உடனிருந்தனர்.

நித்யானந்தாவிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், 7,000 அமெரிக்க டாலர்கள், 3 வீடியோ கேமராக்கள் மற்றும் 3 லேப் டாப்கள், 8 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நித்யானந்தா மற்றும் அவருடைய சீடர்களை சிம்லாவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து இன்று விமானம் மூலம் நித்யானந்தா பெங்களூர் அழைத்து வரப்படுகிறார்.

காட்டிக் கொடுத்த செல்போன்:

நித்யானந்தாவை காட்டிக் கொடுத்தது உத்தரப் பிரதேசத்தில் வாங்கப்பட்ட செல்பேன் சிம் கார்டு தான். நித்யானந்தாவி்ன் மிக மிக முக்கிய சீடர்களின் தொலைபேசிகளுக்கு வந்த அழைப்புகளை சிஐடி போலீசார் கண்காணித்தபோது இந்த குறிப்பிட்ட செல்போனில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த செல்போனை போலீசார் கண்காணித்தனர். அப்போது அதை நித்யானந்தா பயன்படுத்துவது தெரியவந்தது.

இதை வைத்து அவர் அக்ரி கிராமத்துக்கு அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இரு சிஐடி பிரிவு எஸ்பிக்கள் இமாச்சலப் பிரதேசத்துக்கு விரைந்து அந்த மாநில போலீசாருடன் நித்யானந்தாவை மடக்கியுள்ளனர்.

இந்த வீட்டுக் கதவை போலீசார் தட்டியபோது நித்யானந்தா தனது காவி உடையில் மதிய உணவருந்திக் கொண்டிருந்தார். போலீசார் வந்திருப்பதை அறிந்தவுடன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைதாக ஒத்துழைத்தார்.

நித்யானந்தா முன்ஜாமீன் மனு தள்ளுபடி:

இந் நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகர் செசன்ஸ் நீதிமனறத்தில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

நித்யானந்தா கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவருடைய முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தனக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் நித்யானந்தா சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நித்யானந்தா ஆஜராககாத்ல் அவரை மே 19ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும்படி, கர்நாடக போலீசாருக்கு நீதிபதி குணசேகர் வாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

ஆண்மை பரிசோதனை:

இதற்கிடையே நித்யனந்தா மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் போலீசில் கற்பழிப்பு புகார் தந்துள்ளதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்படவுளளது.

நீதிமன்ற அனுமதி பெற்று மருத்துவமனையில் வைத்து அவருக்கு இந்த சோதனை நடக்கவுள்ளது.

இவருக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் கர்நாடக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழக போலீசாரும் விசாரிக்க திட்டம்:

நித்யானந்தா மீது தமிழகத்தில் பதிவான அனைத்து வழக்குகளும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டாலும் அவரை தமிழக காவல் துறையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

நித்யானந்தாவை பெங்களூரில் சென்றோ அல்லது காவலில் எடுத்து சென்னையில் வைத்து விசாரிக்கவோ போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X