For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பைத் தாக்குதல் வழக்கு: கசாப் குற்றவாளி- சபாபுதீன் அகமது, அன்சாரி நிரபராதிகள்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பைத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது தனி கோர்ட். இதில் கசாப் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தஹிளியானி அறிவித்தார். இந்த வழக்கில் இணைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 25 வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 304 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. பத்து பேரில் 9 பேர் கொல்லப்பட்டு விட, கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்ட்டான்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளான் கசாப். அங்கேயே தனி கோர்ட் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது அடுத்தடுத்து வினோதமான வாக்குமூலங்களை அளித்து காமெடி செய்து வந்தான் கசாப். மும்பைக்கு நடிக்க வந்தேன். என்னைப் பிடித்து இந்த வழக்கில் சேர்த்து விட்டனர் என்றெல்லாம் கூறினான். மேலும், தாக்குதல் நடத்திய நபர் வேறு, நான்வேறு என்றும் அவன் கூறினான்.

இந்தியாவைச் சேர்ந்த பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவிகள் செய்து தந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆர்தர் சாலை சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தனி கோர்ட்டில் இன்று பிற்பகல் நீதிபதி தஹிளியானி முன்பு கசாப், அன்சாரி, சபாபுதீன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி தஹிளியானி.

பிற்பகல் இரண்டே முக்கால் மணியளவில் தீர்ப்பு விவரம் தெரிய வந்த்து.

நாட்டின் மீது போர் தொடுத்த கசாப்:

அதன்படி கசாப் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். நாட்டின் மீது கசாப் போர் தொடுத்த்தாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இணை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிரான ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறிய நீதிபதி அவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தார்.

ஓம்லேவை கொன்றது கசாப்:

மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் ஆகியோரைக் கொன்றது கசாப் தான் என்று அரசுத் தரப்பு வாதாடியபோதும் அவர்களை யார் சுட்டுக் கொன்றது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அதே நேரத்தில் காவலர் துக்காராம் ஓம்லேவை கசாப் தான் கொன்றான் என்பது நிரூபணமாகியுள்ளதாக அறிவித்தார்.

கொலைகள், சதித் திட்டம் தீட்டுதல், கொள்ளை, சட்ட விரோத செயல்கள் ஆகிய வழக்குகளிலும் கசாப் குற்றவாளி தான் என்று நீதிபதி அறிவித்தார்.

கசாப் மீது 86 குற்றச்சாட்டுக்கள்:

கசாப் மீது மொத்தம் 86 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அனைத்தும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

பாகிஸ்தானில்தான் மும்பை தாக்குதல் தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவித்த நீதிபதி, இந்தத் தாக்குதல், இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் என்றும் கூறினார்.

கசாப் மட்டும் நேரடியாக 7 பேரைக் கொன்றதாக கூறிய நீதிபதி, சம்பவத்தின்போது கொல்லப்பட்ட மற்ற 159 பேரைக் கொல்ல அவன் தூண்டுதலாக அமைந்தான் என்றும் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி அசோக் காம்தேவை கொன்றது அபு இஸ்மாயில் என்று நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதி அறிவித்தார்.

சயீத், லக்வி உள்பட 20 பாகிஸ்தானியர்கள் குற்றவாளிகள்:

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்களான ஹபீஸ் சயீத், லக்வி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்தியர்கள் குறித்த விசாரணை சரியில்லை:

இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரின் பங்கு குறித்து அரசுத் தரப்பில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நாளை மரண தண்டனை கோரும் வாதம்:

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் யார் குற்றவாளி என்ற விவரத்தை இன்று நீதிபதி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து நாளை கசாப்புக்கு மரண தண்டனை கோரும் வாதத்தை அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் முன் வைக்கிறார். இதையடுத்து தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிப்பார்.

இந்த வழக்கு 369 நாட்கள் விசாரிக்கப்பட்டது. 658 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 12,850 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு 1,522 பக்கங்கள்:

நீதிபதி தஹிளியானி இன்று அளித்த தீர்ப்பு கிட்டத்தட்ட 1522 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.

பிற்பகல் 11 மணியளவில் தீர்ப்பின் சுருக்கத்தைப் படிக்க ஆரம்பித்த நீதிபதி பிற்பகல் இரண்டே முக்கால் மணியளவில் முடித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X