For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கசாப்புக்கு மரண தண்டனை தர அரசு வக்கீல் கோரிக்கை- மே 6ல் தண்டனை குறித்து முடிவு

Google Oneindia Tamil News

Kasab
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்.

கசாப்புக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து மே 6ம் தேதி முடிவு செய்யப்படும் என மும்பை தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கசாப் மீது மொத்தம் 86 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்துமே நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் மீது போர் தொடுத்ததாக நிரூபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனையாகும். இதேபோல .கசாப் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் அதிகபட்ச தண்டனை மரண தண்டனையாகும். எனவே கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தநிலையில், இன்று நீதிபதி தஹிளியானி முன்பு அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் வாதாடினார். அப்போது கசாப்புக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கொலைஇயந்திரம் கசாப்- உஜ்வால் நிகாம்

கிட்டத்தட்ட 2 மணி நேரம் வாதாடினார் உஜ்வால் நிகாம். அவர் கூறுகையில்,

இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்பதை நீதிபதிக்கு சுட்டிக் காட்டினேன். இந்த செயலில் ஈடுபட்ட கசாப் உள்ளிட்ட 10 பேரும் நன்கு திட்டமிட்டு, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே மும்பைக்கு வந்துள்ளனர் என்பதையும் நீதிபதிக்கு சுட்டிக் காட்டினேன்.

கசாப்பும், அபு இஸ்மாயிலும் மட்டும் 72 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களில் 14 பேர் காவல்துறை அதிகாரிகள் ஆவர். இதுதவிர 166 பேரின் மரணத்திற்கும் கசாப் உள்ளிட்ட 10 பேரும் காரணமாக அமைந்துள்ளனர்.


கசாப் ஒரு கொலை இயந்திரம். இதன் உற்பத்திக்கூடம் பாகிஸ்தானில் உள்ளது. தன்னைப் பின்பற்றி பலரும் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று விரும்பியவன் கசாப்.

தானாக விரும்பி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்தவன் கசாப். மும்பை தாக்குதல் திட்டத்தை வடிவமைத்த ஜாகியுர் ரஹ்மான் லக்வி, கசாப் உள்ளிட்டோரிடம் பேசுகையில், இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், திட்டத்தை சற்று தாமதப்படுத்துமாறு கூறியுள்ளான்.

அப்போது குறுக்கிட்ட கசாப், ஏன் தாமதிக்க வேண்டும். நாங்கள் உடனே இந்தியா செல்ல வேண்டும். மும்பையில் பலரைக் கொன்று குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

கசாப் சாத்தானின் ஏஜென்ட். மனித குலத்திற்கே பெரும் அவமானம். இவனை மனிதன் என்றே கூற முடியாது. காட்டு விலங்கை விட கொடூரமானவன் கசாப்.

கசாப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு அவனுக்கு சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தின் வீடியோ படம்காட்டப்பட்டுள்ளது. அதில் பெருமளவில் பயணிகள் கூட்டம் இருப்பதைப் பார்த்துள்ளான் கசாப். ஆனால் மும்பைக்கு தாக்குதல் நடத்த வந்தபோது கூட்ட நெரிசல் குறைவாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளான். நிறையப் பேரை கொல்ல முடியாமல் போய் விட்டதே என்ற ஏமாற்றம் அது.

அதிகம் பேரை கொல்ல முடியாமல் போனதற்காக வருந்தியவன் கசாப்

போலீஸ் விசாரணையின்போதும் கூடஅதிகம் பேரைக் கொல்ல முடியாதே என்று தான் நினைத்ததாக கசாப் கூறியுள்லான். இதுவே அவன் எந்த அளவுக்கு கொடூரமானவன் என்பதை நிரூபிக்க நல்ல சான்றாகும். இது ஒன்றுக்காகவே அவனை தூக்கிலிட வேண்டும்.

சத்ரபதி ரயில் நிலையத்தில் மட்டும் கசாப்பும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயிலும் சேர்ந்து 60 பேரைக் கொன்று குவித்தனர்.

கையில் துப்பாக்கியுடன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக கசாப் சுட்டுத் தள்ளிய வீடியோ காட்சிகள் அவன் எந்த அளவுக்கு ரசித்து அதைச் செய்தான் என்பதை அறிய முடியும்.

மக்கள் வலியிலும், ரத்த வெள்ளத்திலும் துடித்து விழுந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளான் கசாப்.

இப்படிப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கொடுக்காமல் விட்டால் தீவிரவாதிகளுக்கு அது சாதகமாக விடும். இந்தியாவில் எப்படி வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணம் தீவிரவாதிகளுக்கு வந்து விடும் என்றார் நிகாம்.

கருணை காட்ட கசாப் வக்கீல் கோரிக்கை

கசாப் சார்பாக இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கே.பி. பவார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கசாப்பின் இளம் வயதை சுட்டிக் கட்டி தண்டனையில் கருணை காட்டலாம் என்று நீதிபதியிடம் வாதாடினேன் என்றார்.

இன்றும் உணர்ச்சியற்று இருந்த கசாப்

நேற்று குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தபோது எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருந்ததைப் போல, இன்றைய கோர்ட் நடவடிக்கையின்போதும் கசாப் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தலையைக் குணிந்தபடி இருந்தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X