For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 36,000 கோடி செல்போன் இணைப்புகள் விவகாரம்-ராஜா மீது புது புகார்

Google Oneindia Tamil News

Minister Raja
டெல்லி: ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா மீது இன்னொரு மெகா ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்த முறை ரூ. 36,000 கோடி மதிப்பிலான பிஎஸ்என்எல் மொபைல் போன் இணைப்புகள் தொடர்பான நடவடிக்கைகளில் அவர் சிக்கியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ரூ. 36,000 கோடி மதிப்பிலான 9.3 கோடி ஜிஎஸ்எம் செல்போன் இணைப்புகளை வழங்குவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டெண்டர் விட்டது. உலகிலேயே மிகப் பெரிய தொலைத் தொடர்பு டெண்டராக இது கருதப்பட்டது.

ஆனால் இதுகுறித்து ஆய்வு செய்த மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் (central vigilance commission-CVC), 2010ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி, இதில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த டெண்டர் நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியது.

9.3 கோடி செல்போன் இணைப்புகள் என்பது பிஎஸ்என்எல்லின் தேவைக்கும் அதிகமாக உள்ளதாக ஆணையம் கூறியிருந்தது.

2005 முதல் 2009 வரை பிஎஸ்என்எல்லின் வருடாந்திர கூடுதல் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 80 லட்சம் முதல் 1 கோடி இணைப்புகள் மட்டுமே. 2007ல் வெறும் 40 லட்சம் புதிய இணைப்புகள்தான் நாடு முழுவதும் பெறப்பட்டிருந்தன. எனவே 9.3 கோடி கூடுதல் இணைப்புகள் தேவையற்றது என்றும் ஆணையம் கூறியிருந்தது.

மேலும், இதுதொடர்பான டெண்டர்களில் மொத்தமுள்ள நான்கு மண்டலங்களிலும் குறிப்பிட்ட ஒரு ஏலதாரரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை பிஎஸ்என்எல் தகுதி நீக்கம் செய்திருப்பதையும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் சுட்டிக் காட்டியிருந்தது.

இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்பதால் இதுகுறித்து தாங்கள் விசாரித்ததாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புகாரை மறுத்து பிரதமர் அலுவலகத்திற்கு 2010, ஜனவரி 29ம் தேதி ராஜா கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த செல்போன் இணைப்புகள் அவசியம் தேவை. இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணயைம் எந்த அடிப்படையில் விசாரணை நடத்தியது என்று தெரியவில்லை. அதற்கு இத்தகைய விசாரணையை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தார்.

இருப்பினும், பிரதமரின் ஆலோசகரான சாம் பிட்ரோடா தலைமையிலான கமிட்டி ராஜாவின் கூற்றை மார்ச் மாதம் நிராகரித்தது. மேலும், பிஎஸ்என்எல்லின் கொள்முதல் கொள்கையில் மாற்றம் கொண்டு வருமாறும் கூறியது.

இதையடுத்து அடுத்த மாதமே ராஜா பல்டி அடித்தார். தொலைத் தொடர்புத்துறை செயலாளருக்கு ஏப்ரல் மாதம் அவர் எழுதிய கடிதத்தில், ஏன் 9.3 கோடி செல்போன் இணைப்புகள் தொடர்பான டெண்டரை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டிருந்தார்.

இவ்வளவு பெரிய தொகையிலான கூடுதல் இணைப்புகள் தொடர்பாக ராஜா அவசரம் காட்டும் வகையில் நடந்து கொண்டது தற்போது சந்தேகக் குறிகளை எழுப்பியுள்ளது.

ராஜாவை டிஸ்மிஸ் செய்க-இடதுசாரிகள்:

இந் நிலையில், 2ஜி ஏல விவகாரத்தில் ராஜாவை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இடதுசாரிகள் கோரியுள்ளன.

இதுகுறித்து சிபிஎம் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 3ஜி ஏலம் நடந்த விதம், அதில் கிடைத்துள்ள லாபத்தை பார்க்கும்போது 2ஜி ஏலத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுவே ராஜாவின் முறைகேடுகளுக்குப் போதுமான சான்றாகும்.

டிராய் விதிமுறைகளை மீறி, முறைகேடு செய்து 2ஜி ஏலத்தை ஊழல் படிந்ததாக ராஜா மாற்றியுள்ளார் என்பது 3ஜி ஏலத்தில் கிடைத்த லாபத்தை பார்க்கும் போது யாரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

3ஜி ஏலத்தின் மூலம் அரசுக்கு கிட்டத்தட்ட ரூ. 70,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஆனால் 2ஜி ஏலம் வெறும் ரூ. 2,000 கோடிக்கே விலை போனது. இதன் மூலம் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, அரசுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ராஜா ஏற்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.

எனவே ராஜா உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை பிரதமர் நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரிடம் தகவல் தெரிவித்த பிறகே செய்ததாக ராசா கூறி வருகிறார். ஆகவே, என்ன நடந்தது என்பது பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் பெரிய ஊழல் நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது. ஆ.ராசாவை நீக்குவது மட்டுமின்றி, இதில் யார் யாருக்கு தொடர்பு என்பதை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மறுப்பு:

ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை, ராசா மீதான இடதுசாரிகளின் குற்றச்சாட்டு, ஆதாரமற்றது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை. இதுதொடர்பாக, ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.

இடதுசாரிகளும், பாஜகவும் நாட்டு மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால், அதை மத்திய அரசிடம் தரலாமே என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X