For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணி 'பந்த்'-விஜய்காந்த் ஆதரவு தருவாரா?

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி அதிமுக கூட்டணி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தேமுதிகவும் கலந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை நான் நேரில் சந்தித்துப் பேசுவேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வருவதாக அறிவிக்கப்பட்டதும், நான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தொடக்கி வைப்பதற்கு முன்பாக, தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.

இந்நிலையில், அந்தக் கடிதம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, தான் கடிதத்தைப் படிக்கவில்லை என்றும், எனினும், மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று அந்த கடிதத்தில் கோரியதை புறக்கணித்துவிட்டு, குடியரசுத் தலைவர் மட்டுமின்றி, எங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, எம்எல்ஏ சிவபுண்ணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கடிதத்தைப் படிக்கவில்லை என்று முதலில் கூறிவிட்டு, பின்னர் கடிதத்தில் எழுதப்படாததை, நாங்கள் எழுதியதாக, உண்மைக்கு மாறான தகவல்களை முதல்வர் பொறுப்பில் உள்ளவர் கூறுவது சரியல்ல.

மாநாட்டில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளக் கூடாது என்றோ, எங்கள் கட்சியினர் பங்கேற்கக் கூடாது என்றோ நாங்கள் எப்போதும் கூறவில்லை. மேலும், முதல்வர் கருணாநிதி கூறுவது போல, சிவபுண்ணியம் எம்.எல்.ஏ. மட்டும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. எங்கள் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

கருணாநிதி இவ்வாறு கூறியதன் மூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏதோ பிளவு என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை உயர்த்திய திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து, ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள், அதிமுக, மதிமுக, மூவேந்தர் முன்னணிக் கழகம், இந்திய தேசிய லீக் போன்ற கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

மேலும், திமுக,காங்கிரஸ் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

குறிப்பாக, தேமுதிகவும் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை நான் நேரில் சந்தித்துப் பேசுவேன் என்றார் தா. பாண்டியன்.

இதுகுறித்து தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதா, இல்லையா என்ற முடிவை தலைவர் விஜய்காந்த் தான் அறிவிப்பார் என்றார்.

பெட்ரோல்-வரியை குறைக்க வேண்டும்: விஜயகாந்த்

இந் நிலையில் பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் விலை அதிகரித்த நிலையிலும் பஸ் கட்டணம் உயராது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.150 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும், மக்கள் நலன் கருதி கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி மூலம் இந்த ஆண்டிற்கு ரூ.6,324 கோடி கிடைக்கும் என்று இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூறுகிறது.

இப்பொழுது இந்த விலை உயர்வால் சற்றும் எதிர்பாராத வகையில் கூடுதலாக சுமார் ரூ.500 கோடி அதிகரித்து ரூ.6,800 கோடி அளவில் அரசுக்கு வருமானம் வரும். எதிர்பாராத இந்த கூடுதல் லாபத்தில் வெறும் ரூ. 150 கோடி ரூபாய்க்கு சலுகை அளிப்பது சாதனையல்ல.

ஆந்திராவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை சரிக்கட்ட, அங்கு மாநில அரசால் பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி விகிதத்தை குறைக்கப் போவதாக அந்த மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களின் மீது அதிகபட்சம் வரி விதிக்கும் மாநில அரசுகள் தமிழ்நாடும், ஆந்திராவும் தான். தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 30 சதவீம் வரியும், டீசலுக்கு 21 சதவீம் வரியும் விதிக்கப்படுகிறது.

ஹரியானாவில் 9 சதவீதம் தான் வரி. தற்பொழுது ஆந்திர அரசு தனது வரி விதிப்பு விகிதத்தை குறைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க முன் வந்துள்ளது. இதன் மூலம் அங்கு பெட்ரோலிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்கிறது.

அதேபோல் தமிழ்நாட்டிலும் தற்போது உள்ள உச்சகட்ட வரிவிதிப்பை குறைத்து தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு உயராமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?. பஸ் கட்டண உயர்வு இல்லை என்று மட்டும் சொல்லி விலை உயர்வை ஆதரிப்பதா? என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X