For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பாரத் பந்த்': சென்னையில் பஸ்கள் ஓடும்-போலீஸ் கமிஷ்னர்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வரும் 5ம் தேதி அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தின் போது கடைகளை மூடச் சொல்லி யாராவது நிர்ப்பந்தப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து 5ம் தேதி எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தம் தொடர்பாக உள்துறை செயலாளர் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இதைத் தொடர்ந்து பொது வேலை நிறுத்தத்தின் போது காவல் துறை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

அன்றைய தினம் சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும். காலையில் பஸ் டிப்போக்களிலிருந்து பஸ்களை எடுக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதை எதிர்கொள்ளும் வகையில் பஸ் டிப்போக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

பஸ்கள் இயக்கப்படுவதை யாராவது தடுக்க முயன்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தடையின்றி நடைபெறவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொது வேலை நிறுத்தத்தின் போது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடச் சொல்லி யாராவது நிர்ப்பந்தப்படுத்தினாலோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை பொது வேலைநிறுத்தம் தொடர்பாக முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைப்பட்டால் கைதுகள் இருக்கும்.

இந்த ஆண்டு இதுவரை 384 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைப் பறிப்பு வழக்குகளில் 12 பேரை பிடித்துள்ளோம்.

வீட்டு வேலைகளுக்கு பணிப் பெண்களை நியமிக்கும்போது அறிமுகம் இல்லாதவர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வாங்கித் தருவதாக கூறியும் உதவிகள் செய்வதாக கூறியும் தற்போது பணம் பறிப்புகள் நடந்து வருகின்றன. எனவே முதியோர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

முதியோர் யாராவது இது போன்று ஏமாற்றப்பட்டிருந்தால் அது குறித்து 9840983832 என்ற தொலைபேசி எண் மூலமாக காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம். 9500099100 என்ற தொலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சென்னையில் இதுவரை வழிப்பாட்டு தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாங்கள், வங்கிகள் உள்ளிட்ட 2,434 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எல்லா வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு வங்கிகளை காவல்துறை உத்தரவிட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X