For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை இலங்கை தூதரகத்தை மூட வேண்டும்: நெடுமாறன்-திருமா

By Chakra
Google Oneindia Tamil News

Nedumaran
சென்னை: சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஜூலை 14ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போரின்போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐ.நா. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை ஏற்க முடியாது என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் அறிவித்தார். மற்றொரு அமைச்சரான விமல் வீரவன்சா தலைமையில் சிங்கள வெறியர்கள் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தாக்கியுள்ளனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் உருவப் பொம்மையை எரித்தும் அவர் படத்தை செருப்பால் அடித்தும் அவமானப்படுத்தியுள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக இருந்த சர்வதேச சங்கத்தை இப்படித்தான் ஹிட்லர் அவமதித்தார். இன்று நவீன ஹிட்லராக விளங்கும் ராஜபட்ச ஐ.நா. பேரவையை அவமதித்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே அவமதித்திருக்கிறார்.

அவரின் இந்தச் செயலை அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் இந்திய அரசு இந்தப் பிரச்னையில் மெளனம் சாதிக்கிறது.

ஏற்கனவே லட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவித்து, இன்னும் பல லட்சம் தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்தும் கொடுமை செய்வதை ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகி சர்வதேச நீதிமன்றம் முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட நேரும் என்ற அச்சத்தில் ராஜபட்ச எல்லை மீறி செயல்படுகிறார்.

மேலும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனையிலும் இந்திய அரசு செயலற்று இருக்கிறது. எனவே சிங்கள அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற ஜூலை 14ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெறும்.

இப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன், தியாகு, மெல்கியோர், இராசேந்திர சோழன், பூ. துரையரசன், பசுபதி பாண்டியன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் கலந்து கொள்ளவர் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

தூதரகத்தை அப்புறப்படுத்த திருமாவளவன் ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி வரும் 12ம் தேதி, இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேசச் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மூவர் குழுவை நியமித்து ஐ.நா. பேரவை ஆணையிட்டுள்ளது.

ஆனால், சர்வதேசச் சமூகத்தையும் ஐ.நாவையும் அவமதிக்கும் வகையில் சிங்கள இனவெறி அரசு அந்தக் குழுவுக்கு விசா வழங்க மறுத்திருப்பதுடன் கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தையும் இழுத்து மூடியுள்ளது.

இவ்வாறு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசச் சமூகத்தையே இழிவுப்படுத்தியுள்ள சிங்கள இனவெறி அரசை எச்சரிக்கும் வகையில் திமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்றுப் பாராட்டுகிறது.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மூவர் குழுவை நியமனம் செய்த ஐ.நா. பேரவையின் தூதரகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 12ம் தேதி தமிழகத்திலிருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி இலங்கைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

இலங்கை கடற்படையை கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து ஜூலை 14ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கொல்லப்படுவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. நேற்று முன்தினம் அவ்வாறு நடைபெற்ற தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு தமிழர்களின் கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் ஜூலை 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

கடலோர காவல் பொறுப்பு-.நா ஏற்க வேண்டும்-மணியரசன்:

இந் நிலையில் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக் காவல் பொறுப்பை ஐ.நா. சபை ஏற்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னால் கடந்த ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு 450 தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் கொன்றுள்ளனர்.

வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்கள கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். .

சிங்களக் கடற்படையினர் அப் படகுக்குள் சென்று கம்பி, தடி, கயிறு ஆகியவற்றால் படகில் இருந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராசு திருவன் புலம் ஆகியோரைத் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் தான் செல்லப்பன் இறந்துள்ளார்.

இன்னொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முருகேசன் அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய நால்வரையும் இரும்புக் கம்பியால் தாக்கி அவர்களின் உடைகளைக் களைந்து அவற்றைக் கடலில் வீசியுள்ளனர்.

பன்னாட்டுக் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க சிங்களப் படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பேரவலம் பல்லாண்டு காலமாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அயல்நாட்டுப் படையினர் செய்யும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்புக் கொடுக்க தமிழருக்கு இறையாண்மையுள்ள ஒரு வலுவான அரசு இல்லை.
இந்தியாவுக்குள் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க மத்திய அரசு முன்வருவதில்லை.

தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து, பதவி மற்றும் பணப் பசிகளைத் தீர்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லை.

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உருப்படியான எந்தவித நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதும் கடிதம் எழுதுவதுமாக ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக் காவல் பொறுப்பை ஐ.நா. சபை ஏற்கவேண்டும்.

மேலும், தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை. இந்த இரண்டு வழிகளைத் தவிர தமிழக மீனவர்களைக் காக்க வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X