For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பந்திக்காக அலைகிறோம் என்று நம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நாமும் பந்தி போடும் காலம் வரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், கோஷ்டி மனப்பான்மை பாமகவில் இல்லை. அது எப்போதும் உங்களிடம் தலைதூக்க கூடாது. கட்சிப் பொறுப்புகளை வாங்கிக்கொண்டு பொறுப்பற்று செயல்பட்டால் பொறுப்பு தானாகவே போய் விடும். பொறுப்புக்கு மதிப்பு கொடுத்து செயல்பட வேண்டும். தொண்டர்களை மதிக்கின்றவர்களாக பொறுப்பாளர்கள் திகழ வேண்டும்.

பழைய நிர்வாகிகளும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி பணிபுரிபவர்களுக்கு என் மூலமாகவோ, அன்புமணி மூலமாகவோ மீண்டும் பதவி கிடைக்கும்.

பாமகவில் ஏராளமான இளைஞர்களை சேர்க்க வேண்டும். பாமகவை இளைஞர்கள் கட்சியாக மாற்ற வேண்டும். அதற்காகவே இளைஞரணித் தலைவராக அன்புமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நம்முடைய தொண்டர்களில் ஒரு தொண்டன் மனம் வருந்தினால் கூட அது என் சட்டை கிழிந்ததாக நினைக்க மாட்டேன். என் சதை கிழிந்ததாகவே நினைப்பேன். ஒரு கட்சியின் பலம் தொண்டர்களிடம் தான் இருக்கிறது. கட்டமைப்பும், தொண்டர்களும் இருந்தால் தான் ஆளுங்கட்சியாக மாற முடியும். ஆளும் கட்சியாக மாறுவதற்கு காலம் பதில் சொல்லும். அந்த காலத்திற்காக காத்திருக்காமல் இப்போதே உழைக்க தொடங்க வேண்டும்.

எந்த கட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பதவிகளை கொடுத்திருக்கிறோம். இதை இந்தியாவில் எந்த கட்சியும் செய்ததில்லை. பதவியை இழந்தவர்களுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்றால் கட்சியில் போட்டி போட்டு உழைக்க வேண்டும். பதவி தானாக வரும்.

சமூக நீதிக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் பாமகவைப் போல பாடுபட்ட கட்சி எதுவும் இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் நாங்கள் செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை. பாமக ஒரு பசுமைக் கட்சியாகும். பாமக தொண்டர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 10 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். நானும், அன்புமணியும் 10 மரக் கன்றுகளை நட்டு சான்றிதழ் பெறப் போகிறோம்

நம் மொழியை இழந்து விட்டோம், மண்ணை இழந்து விட்டோம், தமிழ் இனத்தையே இழந்து விட்டோம், நம்முடைய உரிமைகளை இழந்து விட்டோம், எதை எதை எல்லாம் இழந்து விட்டோம். எல்லாவற்றிற்கும் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக எல்லா அரசியல் கட்சியையும் சேர்த்து மான மீட்பு போராட்டத்தை நடத்த வேண்டும்.

பந்தி நிறைந்து விட்டால் எங்கே உட்காருவார்கள் என்று நம்மை பற்றி இழிவாக பேசி வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் பந்திக்காக அலைபவர்கள் அல்ல. பட்டினி கிடந்தாலும் மானத்தை இழக்க மாட்டோம். காலம் மாறும். பந்தி பரிமாறும் இடத்தில் நாம் இருப்போம். நாமும் பந்தி போடும் காலம் வரும். அப்போது பந்தியை மற்றவர்களுக்கு எங்கள் கையால் பரிமாறுவோம் என்றார் ராமதாஸ்.

கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவராக தேர்வான அன்புமணி பேசுகையில், பதவி என்பது வரும் போகும். அதற்காக யாரும் கவலைப்பட தேவையில்லை. கட்சி தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து செயல்பட வேண்டும். தொண்டர்களின் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். இன்றைய நாளில் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி என்றால் அது பாமக தான். மற்ற கட்சிகள் போல் நம்முடைய கட்சியில் கோஷ்டிகள் கிடையாது.

இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. கூட்டணி பற்றி தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள். பாமக இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.

கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதுகுறித்து ராமதாஸ் முடிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேவைப்பட்டால் பென்னாகரம் ஃபார்முலாவைக் கூட பின்பற்றத் தயாராக இருக்கிறோம். செல்வாக்குள்ள 80 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

கட்சியை பலப்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X