For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'போலி': ஜாதிகளை மாற்றும் தாசில்தார்கள்-பெற்றோர்களும் கைதாவார்கள்!

Google Oneindia Tamil News

Annauniv Logo
சென்னை: போலி பிளஸ்டூ மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் 51 பேர் போலியான மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தனர். இவர்களில் 10 பேர் மருத்து படிப்புக்காக சேர விண்ணப்பித்தவர்கள் ஆவர்.

இதுகுறித்து தேர்வுகள்துறை இயக்குநர் வசுந்தரா தேவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர் 51 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது தேர்வுகள் துறை இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில்தான் இவற்றைப் பெற்றதாக தெரிவித்தனர். அங்குள்ள சிலர்தான் தங்களை அணுகி பெருமளவில் பணம் பெற்றுக் கொண்டு போலி சான்றிதழ்களைக் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் டிபிஐயை நோக்கி தங்களது கவனத்தை திருப்பினர். இதில் 3 பேர் சிக்கினர். அதில் ஒருவரது பெயர் ராமச்சந்திரன். இவர் டிபிஐயில் பணியாற்றி வருபவர். மற்ற இருவரும் சென்னை மற்றும் வெளியூர் ஒன்றைச் சேர்ந்த ஏஜென்டுகள் ஆவர் என்று தெரியவந்தது.

இந்த மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் தற்போது 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏகாம்பரம் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் ஏகாம்பரம் சென்னையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இன்னொருவரான திருவேங்கடம் ஆரணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இத்தகவலை சென்னை காவல்துறை ஆணையர் பொறுப்பை வகித்து வரும் கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரது இருப்பிடங்களிலும் நடத்திய சோதனையில் 48 போலி சான்றிதழ்கள் சிக்கின. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு சான்றிதழ் வழங்க தலா ரூ. 10,000 பணம் வாங்கியதாக இருவரும் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி டிசி, சாதிச் சான்றிதழ்கள்:

இதற்கிடையே, பொறியியல் கவுன்சிலிங்கில் போலியான சாதிச் சான்றிதழ், போலி டிசி ஆகியவையும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து மாணவர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரிசீலிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜாதிகளை மாற்றும் தாசில்தார்கள்:

போலி சான்றிதழ் விவகாரத்தில் பல தாசில்தார்களும் உடந்தையாக உள்ளனர். அதாவது முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் என்று ஜாதித் சான்றிதழ் கொடுக்கின்றனர். மேலும், வெளி மாநில மாணவர்களுக்கு தமிழகம்தான் பூர்வீகம் என்று போலியான இருப்பிட சான்றிதழ்களையும் இவர்கள் கொடுத்து வருவதாக தெரிகிறது.

பொறியியல் கவுன்சிலிங்கின்போது முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறும் ஜாதிச் சான்றிதழை சமர்ப்பித்தார். ஆனால் கவுன்சிலிங்கின்போது அவர் மாட்டிக் கொண்டார்.

அவருக்கு அதிகாரிகள் அட்வைஸ் கூறி முற்பட்டோருக்கான பிரிவில் இடத்தை ஒதுக்கி அனுப்பி வைத்தனர்.

இப்படி பணத்தை வாங்கிக் கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு செயல்பட்டு வரும் தாசில்தார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் தேர்வு எழுத வேண்டும்:

இதற்கிடையே போலியான மதிப்பெண் பட்டியலைக் கொடுத்த 51 பேரும் மீண்டும் தேர்வு எழுதியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த மோசடியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி ஆகியவற்றை தேர்வுத்துறை ரத்து செய்து விட்டது. மேலும் ஐந்து வருடங்களுக்கு அவர்கள் தேர்வு எழுவதும் முடியாது. அந்தத் தடைநீங்கிய பின்னரே இவர்கள் புதிதாக தேர்வு எழுதி பாஸ் ஆகவேண்டும். அதுவும் கூட இவர்கள் மீதான கோர்ட் வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே அது அமையும்.

பெற்றோர்களும் கைதாவார்கள்

தங்களது பிள்ளைகள் கட் ஆப் மதிப்பெண் காரணமாக சீட் கிடைக்காமல் போய் விடக் கூடாது என்பதற்காகவே இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிக்கியுள்ள மருத்துவக் கல்லூரி படிப்புக்கு போலி சான்றிதழ்களை சமர்ப்பித்த 10 பேரில் 6 மாணவிகள் ஆவர். இவர்களது பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள்தான் போலி சான்றிதழைத் தயார் செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

முன்னதாக கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில்,

போலி சான்றிதழ் பிரச்சினையில் அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரை இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையில், 5 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கி விட்டனர்.

கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. தேர்வுத்துறை இயக்குனர் கொடுத்த புகாரில் மருத்துவ கவுன்சிலிங்கின்போது போலி சான்றிதழ் கொடுத்து பிடிபட்ட 10 மாணவ-மாணவிகள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுக்கு இந்த சான்றிதழை கொடுத்தது யார்? எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள்? போலி சான்றிதழ்களை தயாரித்தது யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

விசாரணை சரியான கோணத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக உங்களுக்கு நல்ல செய்திகள் கொடுக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.

பிடிபட்டது எப்படி?:

போலி சான்றிதழ் தயாரித்தவர்களைப் பிடித்தது தொடர்பாக கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா செய்தியாளர்களிடம் கூறியதாவது...

போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது தொடர்பாக புகார் வந்ததும் சப்மந்தப்பட்ட மாணவர்களின் பட்டியலை முதலில் போலீசார் சேகரித்தனர். அப்போது 9 மாணவர்கள், ஒரு மாணவி ஆகியோர் பற்றிய முழு விவரங்கள் போலீசுக்கு கிடைத்தது. இதில் திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதியை சேர்ந்த 3 மாணவிகளிடம் தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தான் மோசடி கும்பல்கள் பற்றி முழுமையான தகவல்கள் தெரியவந்தது. 3 மாணவிகளும், ஆரணியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடம் போலி சான்றிதழை தயாரித்து கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து திருவேங்கடத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் டி.பி.ஐ. அலுவலக ஊழியர் ஏகாம்பரம் தான் எனக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தார் என்று கூறினார்.

இதை தொடர்ந்து ஏகாம்பரத்தை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது தான் அந்த மோசடி பற்றிய அனைத்து விவரங்களும் தெரியவந்தது. அதன் பிறகு இருவரையும் கைது செய்தோம்.

போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் கைதானவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறோம்.

3 மாணவர்கள் தெரிவித்த தகவல்படி இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X