For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் மன நிறைவு பெறும் வகையில் மின்விநியோகம்-கருணாநிதி உத்தரவு

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள புதிய மின்திட்டங்கள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்ளுமாறும்; தமிழக மக்கள் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் தடங்கல் இல்லாத சீரான மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும் எனவும் மின்சார துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின்சார விநியோகத்தில் தற்போதைய நிலை, உருவாக்கப்பட்டுவரும் புதிய மின்திட்டங்களின் முன்னேற்ற நிலை முதலியவை குறித்து அமைச்சர்கள்-அதிகாரிகள் முன்னிலையில் புனித ஜார்ஜ் கோட்டையில், முதல்வர் கருணாநிதி நேற்று விரிவாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், மின்வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) பி.டபிள்யூ.சி. டேவிதார், முதல்-அமைச்சரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு) கே.அலாவுதீன், சிறப்பு முயற்சிகள் செயலாளர் டி.வி. சோமநாதன் இ.ஆ.ப, ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின்போது, தமிழகத்தில் தற்போது நிலவும் மின்சார விநியோக நிலை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். அத்துடன், புதிதாக நிறுவப்பட்டு வரும் மின்திட்டங்களின் தற்போதைய நிலைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை செய்து ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது, 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2475 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 1- 2011 மே மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 600 மெகாவாட் திறன் கொண்ட 2175 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 2- 2011 நவம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 600 மெகாவாட் திறன் கொண்ட 3100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டம் 2011 ஜுலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 183 மெகாவாட் இணை மின் உற்பத்தித் திறன் கொண்ட 1125 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் இணை மின் திட்டங்கள் 2011 ஜுலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்;

ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் என்.டி.பி.சி கூட்டுத்திட்டத்தின்கீழ் வல்லூரில் நிறுவப்பட்டுவரும் 3 அலகுகளில், அலகு 1 - 2011 அக்டோபரிலும், அலகு 2 -2011 டிசம்பரிலும், அலகு 3 - 2012 நவம்பரிலும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அதிகாரிகள் எடுத்துரைத்தார்கள்.

மேலும், ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் என்.எல்.சி. மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டுத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடியில் அமைத்துவரும் இரண்டு அலகுகளில், அலகு 1 - 2012 மார்ச் மாதத்திலும், அலகு 2 - 2012 ஆகஸ்டு மாதத்திலும் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; ஒவ்வொன்றும் 800 மெகாவாட் வீதம் 1600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் பி.எச்.இ.எல். மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டுத் திட்டத்தின்கீழ் உடன்குடியில் அமைத்துவரும் இரண்டு அலகுகளில், அலகு 1 - 2013 மார்ச் மாதத்திலும், அலகு 2 - 2013 செப்டம்பரிலும் செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய மின்திட்டங்கள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்ளுமாறும்; தமிழக மக்கள் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் தடங்கல் இல்லாத சீரான மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இவற்றைத் தவிர மத்திய அரசின் மின் நிலையங்களின் மூலமாக கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி, சிம்மாதிரி, கைகா ஆகிய மின் நிலையங்களிலிருந்து தமிழ்நாட்டின் பங்காக 2010 டிசம்பர் முதல் 2011 மே மாதத்துக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 1643 மெகாவாட் மின்சாரத்தை உரியகாலத்தில் பெறுவதற்கு ஆவன செய்யுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமாக 2011-12ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறுமென்றும், அதுவரை ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை நிலையைச் சரி செய்ய தொடர்ந்து தேவைப்படும் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கி, விநியோகத்தை முறைப்படுத்தி சீராக்கிட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

மேலும் பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பை குறைத்தல் மற்றும் தவறான முறைகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்றும், இதனால் மின்சார விரயம் குறைக்கப்பட்டு, ஏற்படும் சேமிப்பின் மூலம் மின் விநியோகம் சீர் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X