இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு

2008ம் ஆண்டு மதிமுக சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் வைகோ, அப்போதைய மதிமுக அவைத் தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோர் பேசினர்.
இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிரானப் பேசியதாக சென்னை க்யூ பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வைகோவின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. அதற்குள் திமுகவில் சேர்ந்துவிட்ட கண்ணப்பனின் பெயர் இதில் இடம் பெறவில்லை.
இந்த வழக்கின் விசாரணை சென்னை 3வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக கடந்த 21ம் தேதி வைகோ நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் கமிஷன் முன் ஆஜராக அவர் டெல்லி சென்றதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்று வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீது நீதிபதி பூபாலன் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.
அப்போது பேசிய வைகோ, தான் பேசியதை மறுக்கவில்லை என்றும் அதே நேரத்தில் அரசு சொல்லும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.