டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக்: முறியடிக்க அரசு தீவிரம்- தாற்காலிக பணியாளர்கள் வசம் சாவிகள்

தமிழகம் முழுவதும் 6,717 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு 8 மணி நேரம் வேலை, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.), டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகிய 4 சங்கங்கள் ஈடுபடவுள்ளன.
இந்தப் போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
டாஸ்மாக் கடைகளை நாளை வழக்கம்போல் திறந்து விற்பனையை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஊழியர்களைக் கொண்டு நாளை கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே அனைத்து கடைகளின் 2 சாவிகளில் ஒன்றை கடை மேற்பார்வையாளர்களிடம் இருந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று இரவு கடையை மூடிவிட்டுச் செல்லும் ஊழியர்களிடம் மற்றொரு சாவியையும் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. சாவியைத் தர மறுத்தால் கைது நடவடிக்கையும் இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இன்றைய விற்பனை தொகை, சரக்கு இருப்பு விவரம் போன்றவற்றை அந்தந்த மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று இரவே சாவிகளை தற்காலிகமாக ஊழியர்களிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மாவட்டத்திலும் சுமார் 20 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் படையில் தாசில்தார், வருவாய்த்துறை ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், மற்ற கடைகளில் கூடுதலாக பணிபுரியும் ஊழியர்களை கொண்டு கடைகளை திறக்கவும், தாற்காலிக ஊழியர்கள் மூலம் கடைகளை வழக்கம்போல் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கடைகள் முன் போலீஸாரும் குவிக்கப்படவுள்ளனர்.
நாளை பணிக்கு வராத ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
ஊழியர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்று கான்கிரீட் வீடு திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். 21 லட்சம் வீடுகள் 7 ஆண்டுகளில் கட்டித் தரப்படும் என்றும் கூறியுள்ளார். அவரது கணக்கின்படி 1 கோடியே 5 லட்சம் பேர் குடிசையில் வசிப்பதாக அர்த்தம். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு இலவச வீட்டு மனையை இன்னும் 4 மாதத்திற்குள் வழங்கியாக வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது. அவர்களது வேலை நிறுத்தம் நியாயமானது. குறைந்த ஊதியம் பெறும் அவர்களது கோரிக்கையை அரசு தீர்த்து வைக்க வேண்டும்.
தமிழக அரசு சட்ட சபையில் ஒப்புக் கொண்ட அரசு கேபிள் டி.வி. திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். முதல்வர் அறிவித்தபடி குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
அரசு கேபிள் டி.வி.க்காக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது வேண்டுமென்றே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை பழி வாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
பல்கலைக்கழக துணை வேந்தர், விரிவுரையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. முள்வேலியில் அடைக்கப்பட்ட 3 லட்சம் தமிழர்கள் நிலைமை என்ன என்று இதுவரை தெரியவில்லை. பத்திரிகையாளர் பார்வையிட அந்த அரசு மறுக்கிறது. அதனால் அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என்றார்.