For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 வயது ஆண்-16 வயது பெண் திருமணம் செல்லும்: நீதிமன்றம்

By Chakra
Google Oneindia Tamil News

Marriage
டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர்.

ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.

அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதை எதிர்த்தும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடு்க்கக் கோரியும் இந்தத் தம்பதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அகமத், நீதிபதி ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில்,

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவே திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதையும் மீறி பெற்றோரே நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.

பெற்றோரின் நெருக்குதல்களால் நடக்கும் சிறு வயது திருமணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.

நாடு முழுவதும் கெளரவக் கொலைகளும் வரதட்சணைக் கொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மேஜரான பெண்ணுக்கோ ஆணுக்கோ நாம் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திலேயே பலவித சிக்கல்கள் வருகின்றன. அந்தப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் காட்சிகள் எண்ணில் அடங்காதவை.

இந் நிலையில் பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்களையும் மேஜர் ஆகாத இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணங்களையும் நாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பது தான் சரி. பெற்றோர் செய்து வைக்கும் கட்டாய குழந்தைத் திருமணம் மட்டும் சரி, அதே நேரத்தில் இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணம் தவறு என்று எப்படி சொல்ல முடியும்?. இதனால் திருமண வயது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை தெளிவானதாக்குவது தான் சரியாக இருக்க முடியும். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.

இந்த சட்டம் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது. இல்லாவிட்டால் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உடைந்த இதயங்களின் வழக்குகள், கண்ணீர் விடும் மகள், உயிருக்கு அஞ்சி ஓடும் மணமகன், மனம உடைந்து போன பெற்றோர்களின் வழக்குகள் குவிந்து வருவதை தவிர்க்கம முடியாது. காதல் ஒருவரின் வாழ்க்கையையோ அல்லது இரு குடும்பத்தினரின் வாழ்க்கையையோ கிரிமினல் குற்றவாளிகளாக்கிவிடக் கூடாது என்றனர் நீதிபதிகள்.

திருமணத்தை நிறுத்திய 13 வயது சிறுமி:

இந் நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கரடிமடையை சேர்ந்த 13 வயது சிறுமி தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

உறவினருடன் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயல்வதாகவும் அதை தடுத்து நிறுத்து தான் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வருவாய்த்துறையினர் நடத்திய குறை தீர்ப்பு புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக ஆர்டிஓ முகமது மீரான், தாசில்தார் லட்சுமிகாந்தன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

மணமகன், மணமகள் தரப்பு உறவினர்களை அழைத்துப் பேசினர். திருமண வயது எட்டாமல் சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்துவது குற்றம். அப்படி செய்தால் மணமகன் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்படுவார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X