For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன

By Chakra
Google Oneindia Tamil News

கொல்லம்: கேரளாவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடல் பகுதி நேற்று மதியம் திடீரென இருட்டானது. பல இடங்களில் கடல் கொந்தளித்து 15 அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்ந்தன. அதில் சிறுவன் பலியானதாகத் தெரிகிறது. இதனால் கடலில் படகு ஒன்றும் கவிழ்ந்தது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மதியம் 2 மணி அளவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான தென்கேரள கடல் பகுதியில் திடீரென இருட்டு பரவியது. இரவு போல் கும்மிருட்டு பரவியதால் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பீதி அடைந்தனர். அந்த நேரத்தில் கடலும் கடுமையாக கொந்தளித்தது. இதனால் மீனவர்கள் கரைக்கு வேகமாகத் திரும்பினர்.

இதற்கிடையே பூந்துறை மீனவ கிராமத்தில திடீரென அலைகள் 15 அடி உயரத்திற்கு எழுந்தன. இதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை அலை இழுத்துச் சென்றது. அவனைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. கொல்லம் அழிக்கால் பகுதியில் கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால் ஒரு படகு கவிழ்ந்து 17 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 1 மீனவர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் ஏற்பட்ட திடீர் இருட்டு காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.

குமரியில் படகு பாறையில் மோதியது

இதற்கிடையே, கடல் மட்டம் திடீரென குறைந்ததால், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து நேற்று சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த படகு பாறையில் மோதியது. அதில் இருந்த 150 சுற்றுலா பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகில் உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவற்றுக்கு சென்று வர வசதியாக தமிழக அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பாகீரதி, பொதிகை, குகன் என்ற 3 படகுகளை இயக்கி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன.

ஒரு படகில் 150 சுற்றுலா பயணிகள் வரை செல்லலாம். இந்த நிலையில் பாகீரதி படகு ரூ.15 லட்சம் செலவில் சீரமைப்பு பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே பொதிகை, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்தனர். கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்ப்பதற்காக காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று படகில் ஏறிச்சென்றனர்.

மதியம் 12.45 மணியளவில் திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு 150 சுற்றுலா பயணிகள் குகன் படகில் கரைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்தது. இதில் படகின் அடியில் உள்ள சுக்கான் பகுதி கடலில் இருந்த பாறையில் மோதி பழுது அடைந்து நின்றது.

இதனால் படகில் இருந்த 150 சுற்றுலா பயணிகளும் பயந்து அலறினர். எனினும் படகு ஓட்டுபவர்கள் சாமர்த்தியமாக படகை மெதுவாக ஓட்டி கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X