ஆயுத சட்ட திருத்தம்: ப.சி மீது பிரதமரிடம் திக்விஜய் புகார்

ஏற்கெனவே நக்ஸலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் விவகாரத்தில் சிதம்பரத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார் திக்விஜய் சிங். இந் நிலையில் இப்போது ஆயுத சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து சிதம்பரம மீது புகாரும் தெரிவித்துள்ளார்.
திக்விஜய் சிங்குடன் ஜஸ்வந்த் சிங், எஸ்.எஸ். அலுவாலியா, ஷானவாஸ் ஹுசேன் (பாஜக), பிரிஜ்பூஷண், சரண் சிங் (சமாஜ்வாடி கட்சி) நவீன் ஜிண்டால், அனில் லாட், சஞ்சய் சிங், பிரான்சிஸ்கோ சர்தின்ஹியா, மணீஷ் திவாரி, ராகேஷ் சிங் (காங்கிரஸ்) ஆகியோரும் பிரதமரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில், ஆயுதம் வைத்திருப்பதற்கான லைசென்ஸ் பெறுவோருக்கு போலீஸ் விசாரணைக்குப் பிறகே வழங்கப்படும் என தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயுதம் வைத்திருப்போர் பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகைய முறையை கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமையைப் பறிக்கும் செயல்.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இத்தகைய சட்டத் திருத்தம் உள்துறையால் கொண்டு வரப்பட்டது எப்படி என்று தெரியவில்லை.
புதிய திருத்தத்தின்படி, ஆயுதம் வைத்திருப்பதே சட்ட விரோதம் என்ற நிலையை உருவாக்கும். அனுமதியோடு துப்பாக்கி வைத்திருந்தாலும் அது இத்தகைய நிலையை ஏற்படுத்தும்.
லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் இதனால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆனால் அத்தகையோரை சாதாரண குற்றவாளிக்கு நிகராக நடத்த இப்புதிய சட்ட திருத்தம் வழிவகுத்துள்ளது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை லைசென்ஸ் கோருவோர் நிரூபிக்க வேண்டும் என்று புதிய சட்டத் திருப்பத்தில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் பலவும் மிக வசதியாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் லைசென்ஸ் வழங்குவது அல்லது மறுப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் என்பதை சாதாரண குடிமகனால் நிரூபிப்பது கடினம். இது நேர்மையான நடுத்தர மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஊழல் புரிய வழிவகுக்கும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்குவது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புதிய சட்டம் இதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி வைத்திருப்போருக்குள்ள உரிமை எனும் தேசிய சங்கத்தின் தலைவராக திக்விஜய் சிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.