For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாருக்கும் உதவாதவர்களை காலம் எட்டி உதைத்துவிடும்: ஜெ

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: யாருக்கும் உதவாதவர்களை காலம் எட்டி உதைத்துவிடும். ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது.

அதில் பேசிய ஜெயலலிதா, இஸ்லாமிய மக்களுக்கு இறைவனால் இடப்பட்ட கட்டளை நோன்பு. பெரியவர் முதல் சிறியவர் வரை நீர் கூட பருகாமல் நோன்பை மேற்கொண்டு, உள்ளத் தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இல்லாதவர்களுக்கு உதவி செய்வது ரமலான் மாதத்தில் நடக்கிறது.

அறிவியல் அடிப்படையிலும் நோன்பு இருப்பவர்களுக்கு பெரும் பயன் கிடைக்கிறது.

பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களை உலகம் என்றும் போற்றிப் புகழும். இதை உணர்த்த ஒரு கதை உள்ளது.

உதைத்து விளையாடப் பயன்படும் கால்பந்து ஒரு முறை இறைவனிடம் சென்று தன் குறையை முறையிட்டதாம்.

புல்லாங்குழலைப் போல நானும் காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறேன். புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு என்று கேட்டதாம்.

அதற்கு பதிலளித்த இறைவன், நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழல் தான் உள்வாங்கும் காற்றை இனிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல், உனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் எல்லோரும் உன்னை எட்டி எட்டி உதைக்கிறார்கள் என்று சொன்னாராம்.

யாருக்கும் உதவாதவர்களை காலம் எட்டி உதைத்துவிடும். ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள்.

இந்த கருத்தின் அடிப்படையில்தான், இஸ்லாம் மதத்தின் இணையில்லா தத்துவங்களில் ஒன்றாக, பிறருக்கு உதவிடும் உன்னத நோக்கம், இந்த ரமலான் மாதத்தில் வலியுறுத்தப்படுகிறது. ரமலான் நோன்பு பண்டிகை இஸ்லாமிய மக்களுக்கு ஏற்றத்தையும், இன்பத்தையும், மன அமைதியையும் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றார் ஜெயலலிதா.

இந்த நிகழ்ச்சியில் சன்னி பிரிவு தலைமை ஹாஜி முகம்மத் சலாபுதீன் அயூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி குலாம் முகம்மத் மெஹதிகான், ஆர்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, த.மு.மு.க. தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் இனாயத்துல்லாஹ், தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X