• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் கபில்சிபல்: ஜெ தாக்கு!

By Staff
|

Jayalalitha
சென்னை: பொறியியல், மருத்துவப் படிப்புகளில சேர இனி அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது சமூக நீதிக்கு அடிக்கப்படும் சாவு மணி!. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை!. ஏழை, எளிய, கிராமப்புற மாணவ- மாணவியருக்கு கட்டப்படும் கல்லறை! என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பங்கம் ஏற்பட்ட போது, இட ஒதுக்கீட்டினை பாதுகாக்கும் பொருட்டு சட்டம் இயற்றி, அதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியை நான் நிலை நாட்டினேன்.

அதே போன்று, மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்ரீதியான கல்வியை ஏழை, எளிய, கிராமப்புற மாணவ- மாணவியர் பயிலுவதற்கு தடையாக இருப்பது மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு என்பதை உணர்ந்து, அவர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு நான் அடித்தளமிட்டேன்.

தற்போது இந்த இரண்டிற்கும் பங்கம் ஏற்படும் வகையில், மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதாவது, 2011-2012ம் கல்வியாண்டிலிருந்து, இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ படிப்பு மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலுவதற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற இந்திய மருத்துவக் குழுவின் கருத்துருவிற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இதற்கான அறிவிக்கை இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட்டு விடும் என்றும் பத்திரிகைகளில் திடுக்கிடும் செய்திகள் வந்துள்ளன.

இது மட்டுமல்லாமல், உயர் கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்திய தொழில்நுட்பக் கழகம் தேசிய தொழில்நுட்பக் கழகம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பொறியியல் படிப்பில் சேர, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலின் இந்தக் கருத்துரு 10.9.2010 அன்று நடக்கவிருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் வைக்கப்படும் என்றும் பத்திரிகைகளில் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வந்துள்ளன.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் டெல்லியிலும், அமெரிக்காவில் உள்ள ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தவர். அவருக்கு ஏழை, எளிய கிராமப்புற மாணவ- மாணவியரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே தான் அவர் இது போன்ற ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளின் மூலம், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலாவதாக, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் முடிவின் மூலம், தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே கடைபிடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

இதன் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து ஏற்படும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில் பெற்று வரும் சலுகை பறிபோய்விடும் சூழ்நிலை உருவாகும். எனவே, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவது என்பது சமூக நீதிக்கு எதிரான செயல்!, மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கை!.

இரண்டாவதாக, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்பது நகர்ப் புறங்களிலும், குறிப்பிட்ட பகுதிகளிலும் படிக்கும் மாணவ- மாணவியருக்கு மட்டும் பயனளிக்கக் கூடியதாக இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவ- மாணவியரின் உயர்கல்விக்கு பயனளிப்பதாக அமையாது.

மூன்றாவதாக, அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கக்கூடும் என்பதால், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி வழியில் படித்தவர்களுக்கு தான் பயனுள்ளதாக நுழைவுத் தேர்வு முறை அமையும்.

வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியரைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்தி மொழியில் பரிச்சயம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு எழுதுவதில் சிரமம் இருக்காது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மாணவ- மாணவியரில் பெரும்பாலானோர் தமிழ் வழிக் கல்வியில் தான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கின்றனர்.

எனவே, நுழைவுத் தேர்வை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ எழுதுவது என்பது இவர்களுக்கு மிகவும் சிரமமான காரியம் ஆகும். மேலும், அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சியை ஏழை, எளிய கிராமப்புற மாணவ-மாணவியர் பெறுவது மிகவும் கடினம்.

ஏனெனில், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்களும் கிராமப் புறங்களில் கிடையாது. எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தொழில் கல்வி பயில விரும்பும் மாணவ- மாணவியருக்கு நுழைவுத் தேர்வு என்பது தடைக்கல்லாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நான்காவதாக, தொழில் கல்வி பயில அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டால், தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய, கிராமப்புற மாணவ-மாணவியருக்கு இடம் கிடைப்பது என்பது கேள்விக்குறி ஆகிவிடும்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கு, தமிழ் தெரிந்த பொறியாளர்கள், தமிழ் தெரிந்த மருத்துவர்கள், தமிழ் தெரிந்த வேளாண் விஞ்ஞானிகள் இல்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகக்கூடும்.

கடைசியாக, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை செயல்படுத்தப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்தும், நகர்புறங்களிலிருந்தும் வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவியர் தங்கள் படிப்பை முடித்தவுடன், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்று பணிபுரியத் தான் விரும்புவார்களே தவிர, தமிழ்நாட்டில் பணிபுரிய விரும்ப மாட்டார்கள்.

இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எந்தப் பயனும் கிடைக்காது. தமிழக அரசால் தொழில் கல்விக்கு செலவழிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் தமிழக மக்களுக்கு பயனளிக்காமல் போய்விடும்.

அதே சமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயின்றால், அதன் பயன் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் கிடைக்கும்.

மொத்தத்தில், அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமூக நீதிக்கு அடிக்கப்படும் சாவு மணி!. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை!. ஏழை, எளிய, கிராமப்புற மாணவ- மாணவியருக்கு கட்டப்படும் கல்லறை!.

இன்று “பொது நுழைவுத் தேர்வு" என்ற மத்திய அரசின் முடிவின் மூலம், தமிழ் வழி கல்வி பயில்கின்ற ஏழை, எளிய கிராமப்புற மாணவ-மாணவியரின் எதிர் காலமே கேள்விக்குறியாகி இருக்கின்து.

அவர்கள் ஏற்கெனவே அனுபவித்து வந்த சலுகை பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் கருணாநிதியோ, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்ற முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வழக்கம் போல் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

தொழில் படிப்பில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் முடிவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பொது நுழைவுத் தேர்வு முறை செயல்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து அ.தி.மு.க. நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X